ETV Bharat / international

அமெரிக்காவை ஒருங்கிணைப்பதே ஜோ பைடன் ஆட்சியின் முதல் சவால்

author img

By

Published : Dec 19, 2020, 5:16 PM IST

டெனாலாட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன்
டெனாலாட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன்

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்படுத்திய பாதிப்புகளை சரி செய்து நாட்டினை ஒருங்கிணைப்பது தான், விரைவில் அந்நாட்டின் அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் தலைமையிலான அரசின் முதல் சவாலாக இருக்கப்போகிறது.

வாஷிங்டன்: நவம்பர் மாதம் நடந்து முடிந்த 46ஆவது அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜே பைடன் 306 எலக்ட்ரல் காலேஜ் இடங்களை பெற்று, 8 கோடி வாக்கு வித்தியாசத்தில் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பினை வீழ்த்தினார்.

வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தொடர் இழுப்பறி நிலவவே, தேர்தலில் முறைக்கேடு நடைபெற்றதாகக் கூறி டொனால்ட் ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்துவந்தார். இதையடுத்து, பல்வேறு மாகாணங்களில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து ட்ரம்ப் தரப்பில் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன. பின்னர் அனைத்து வழக்குகளும் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், ஜோ பைடன் வெற்றிப் பெற்றதை தேர்தல் சபை உறுதிப்படுத்தியது. இதையடுத்து பேசிய அவர், அமெரிக்காவில் அரசியல் தலைவர்கள் அதிகாரத்தை எடுத்துக்கொள்வதில்லை, மக்கள் தான் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்குகிறார்கள். இங்கு ஜனநாயகம் எனும் நெருப்பு நீண்ட காலத்திற்கு முன்னரே ஏற்றப்பட்டுவிட்டது. பெருந்தொற்றாலும் சரி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாலும் சரி இந்த நெருப்பை அணைக்க முடியாது. மக்கள் அனைவரும் அடுத்த அத்தியாயத்திற்கு தங்களை தயார் படுத்திக்கொண்டு நாட்டின் ஒற்றுமைக்காக ஒன்றிணைய வேண்டும" என்றார்.

மேலும், கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள கரோனா தடுப்பு மருந்து நாட்டு மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகள் செய்து தரப்படும் என்றும், நாட்டின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் என உறுதியளித்தார்.

தேர்தல் நெருங்கும் வேளையிலும் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க சமூதாயத்தில் நிற அடிப்படையிலான பிரிவினை வாதத்தை ஏற்படுத்துவதையே தீவிரமாகக் கொண்டிருந்தார். அதனாலயே பிரிவினைவாத சிந்தனைக் கொண்டவர்கள் தரப்பிலான வாக்குகளும் தேர்தலில் அவருக்கு கிடைத்தது. தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்த ட்ரம்பின் எதிர்ப்புக் குரல்களால் வாஷிங்டன்னில் சாலை கலவரங்கள் ஏற்பட்டன.

சர்வாதிகாரியைப் போன்று செயல்பட்ட டொனால்ட் ட்ரம்ப் அரசு அலுவலர்கள், நீதித்துறைகளையும் கடுமையாக சாடினார். அதேபோல், தேர்தலில் முறைகேடுகள் இல்லை என அவருக்கு எதிராக கருத்து தெரிவித்த அரசு அலுவலர்களை, தனது அதிகாரத்தை பயன்படுத்தி பணியிலிருந்து நீக்கினார்.

அவருடைய செயல்பாடுகள் கரோனா தொற்றைக்காட்டிலும் மிகவும் ஆபத்தானது. மிக்சிகன் மாகாணத்தில் தேர்தல் முறைகேடு நடைபெற்றதாக ட்ரம்ப் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்ததில், தேர்தல் முடிவுகளை முறியடிக்க எதிர்ப்பு தெரிவித்த மிக்சிகன் சபாநாயகர் லீ சாட்பீல்ட், தங்களது நியமங்கள், பாரம்பரியத்தை ஆபத்திற்கு தள்ளி ட்ரம்ப்பிற்காக தேர்வர்களை மாற்றுவதுற்கு அஞ்சினார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், எகனாமிஸ்ட் எடுத்த கணக்கெடுப்பின் படி, ட்ரம்ப் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதை காட்டிலும் உலகிற்கு மிக மோசமான ஆபத்து வேறு எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை பொய்யாக்கும் முயற்சியில் ட்ரம்ப் ஈடுபடவில்லை என்பதே உண்மை.

அதிபராக பதவியேற்றபோது டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவுக்கு மட்டுமே முன்னுரிமை எனக் கூறினார். ஆனால் அவரது அகந்தையான செயல்பாடுகள் நகைப்பூட்டும் வகையில் இருந்தது. இதனால் உலக நாடுகளிலிருந்து அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டது.

அதுமட்டுமல்லாது அவரது ஆட்சி காலத்தில் ஈரான் உடனான அணு ஒப்பந்தம், பாரிஸ் ஒப்பந்தம் ஆகியவற்றில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார். அத்துடன் நின்றுவிடவில்லை, ட்ரான் அட்லாண்டிக் கூட்டணியில் இருந்தும், உலக சுகாதார அமைப்பிலிருந்தும் விலகினார். அதேபோன்று சீனாவுடன் வர்த்தகப் போரினை தொடங்கினார். ஆட்சியில் இருந்தபோது மட்டுமல்லாது. தேர்தலுக்கு பின்பும் ஆட்சி அதிகாரத்தை ஜோ பைடனுக்கு வழங்குவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தினார் ட்ரம்ப் என்ற குற்றாச்சாட்டுகளும் இருக்கின்றன.

ட்ரம்பின் ஆட்சி பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தாலும், தான் 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என அவர் கூறியுள்ளார். அதற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ள நிலையில், ட்ரம்ப் ஆட்சி முறையில் ஏற்படுத்திச் சென்ற பாதிப்புகளை சரி செய்வதை முதல் சவாலாக கொண்டு ஜோ பைடன் -கமலா ஹாரிஸ் விரைவில் பதவியேற்கவுள்ளனர்.

இதையும் படிங்க: கரோனாவிலிருந்து குணமடைய பிரான்ஸ் அதிபருக்கு ட்ரம்ப் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.