ETV Bharat / international

ஒரே நேரத்தில் நான்கு மிகப்பெரிய டெக் நிறுவன சிஇஒ-களிடம் விசாரணை!

author img

By

Published : Jul 7, 2020, 4:35 PM IST

US panel to grill Bezos
US panel to grill Bezos

வாஷிங்டன்: அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ், ஆப்பிளின் டிம் குக், ஃபேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை ஆகியோர் ஒரே நேரத்தில் அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழுவிடம் தங்கள் வாக்குமூலத்தை அளிக்கவுள்ளனர்.

அமெரிக்காவின் டெக் துறையில் வெகுசில நிறுவனங்கள் மட்டுமே பெரும் ஆதிக்கத்தைச் செலுத்துவதாகவும், பிற நிறுவனங்களின் வளர்ச்சியை இந்நிறுவனங்கள் தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக அமெரிக்காவில் டெக் துறையில் மிகப் பெரிய நான்கு நிறுவனங்களான கூகுள், ஆப்பிள், ஃபேஸ்புக், அமேசான் ஆகிய நிறுவனங்களிடம் அந்நாட்டின் நாடாளுமன்ற விசாரணைக் குழு கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் விசாரணை நடத்திவருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணைக்கு இந்நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்கள் ஆஜராகி தங்கள் வாக்குமூலத்தை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றம் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது.

நாடாளுமன்ற விசாரணைக் குழுத் தலைவர் டேவிட் சிசிலின் கூறுகையில், "தலைமைச் செயல் அலுவலர்கள் ஆஜராக வேண்டும் என்று நாங்கள் அனுப்பிய நோட்டீசுக்கு அமேசான் நிறுவனம் மட்டுமே தயக்கம் காட்டியது. இருப்பினும், இந்நாட்டில் சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை. எனவே, அனைவரும் நிச்சயம் நாடாளுமன்ற விசாரணைக் குழு முன், இந்நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்கள் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.

அதன்படி, அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ், ஆப்பிளின் டிம் குக், ஃபேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை ஆகியோர் வரும் ஜூலை 27ஆம் தேதி நேரிலோ அல்லது காணொலிக் காட்சி மூலமோ அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழுவிடம் தங்கள் வாக்குமூலத்தை அளிக்கவுள்ளனர்.

இதையயும் படிங்க: இறுகும் சீனாவின் பிடி - ஹாங்காங்கிலிருந்து வெளியேறும் டிக்டாக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.