ETV Bharat / international

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: கலைக்கப்பட்ட மினியாபோலிஸ் காவல் துறை

author img

By

Published : Jun 8, 2020, 7:43 PM IST

வாஷிங்டன்: ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் கொல்லப்பட்டதைக் கண்டித்து போராட்டம் வலுபெற்றுவரும் நிலையில், மினியாபோலிஸ் காவல் துறை முற்றிலும் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Minneapolis
Minneapolis

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரை காவலர் ஒருவர் சுமார் எட்டு நிமிடம் 56 நொடிகள் choke hold எனப்படும் கோரப் பிடியில் வைத்திருந்தார். தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று பலமுறை கதறியும், காவலர் தனது பிடியை தளர்த்தாததால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்தார்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறைகளைக் கண்டித்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் வலுபெற்றுவருகின்றன. இந்நிலையில், மினியாபோலிஸ் காவல் துறை முற்றிலும் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மினியாபோலிஸ் நகர சபை தலைவர் லிசா பெண்டர் கூறுகையில், "மினியாபோலிஸ் காவல் துறையை முற்றிலும் கலைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். சமூகத்திற்கு உண்மையான பாதுகாப்பை வழங்கும் வகையில் இங்கு காவல் துறை மீண்டும் கட்டமைக்கப்படும்" என்று கூறினார்.

மேலும், காவல் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், காவல் துறையை மீட்டுருவாக்கம் செய்வது குறித்து நகர சபையில் விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மினியாபோலிஸ் காவல் துறையை மறுசீரமைப்பு செய்ய முடியாது என்பதாலேயே காவல் துறை முற்றிலும் கலைக்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படுகிறது என்று மினியாபோலிஸ் நகர சபை உறுப்பினர் அலோந்திரா கேனோ கூறினார்.

இதையும் படிங்க: ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: 75 வயது போராட்டக்காரரை கீழே தள்ளி மண்டையை உடைத்த காவலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.