ETV Bharat / international

ஜார்ஜ் ஃப்ளாய்ட், குடும்பத்தினருக்கு நீதி பெற்றுத் தருவோம் - ட்ரம்ப்

author img

By

Published : Jun 2, 2020, 8:09 AM IST

வாஷிங்டன் : அமெரிக்காவில் காவல் துறை பிடியில் உயிரிழந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட், அவரது குடும்பத்தினருக்கு நீதி பெற்றுத் தருவோம் என அதிபர் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

president trump
president trump

அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் (49) என்ற கறுப்பினத்தவர் அந்நகர காவல் துறையினர் பிடியில் சிக்கியபோது சாலையிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்ஜ் ஃப்ளாய்டின் உயிரிழப்புக்கு நீதி கோரி, கறுப்பின அமெரிக்கர்கள் மீதான வெள்ளை இனவெறிக்கு எதிராகக் கண்டன குரல் எழுப்பியவாறு அந்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவிட்-19 பெருந்தொற்று தாக்கத்தை நீர்த்துப்போகச் செய்யும் அளவி்ற்கு இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "ஜார்ஜ் ஃப்ளாய்டின் கொடூர மரணத்தால் அமெரிக்கர்கள் அனைவரும் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். என் தலைமையிலான நிர்வாகம் உயிரிழந்த ஜார்ஜ், அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதி பெற்று தரும். அவர்களை நாங்கள் கைவிடமாட்டோம்.

ஒரு அதிபராக என்னுடைய தலையாயப் பணி அமெரிக்க மக்களையும், நாட்டையும் காப்பதே. இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கை காப்பேன் என உறுதி எடுத்துள்ளேன். அதனை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவேன்

அமைதியான முறையில் நடந்து வரும் போராட்டம், கலவரக்காரர்களால் சீரழியும் அபாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. கலவரத்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்களே. ஒரு அதிபராக நான் பாதிப்புக்குள்ளாகும் அவர்களைப் பாதுகாப்பேன்" என்றார்.

இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரில் பதற்றம்: பயங்கரவாதி சுட்டுக் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.