ETV Bharat / entertainment

எளிமையாக நடைபெற்ற ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி ராமையா நிச்சயதார்த்தம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 1:10 PM IST

Arjun Daughter Engagement
Arjun Daughter Engagement

Aishwarya Arjun - Umapathy Ramaiah: அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாக்கும் இயக்குநர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் இருவருக்கும் இருவீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

சென்னை: நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர். தமிழில் நன்றி படத்தில் அறிமுகமான இவர், அதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். 90களில் மிகவும் பிஸியான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

கதாநாயகனாகத் திரையுலகைக் கலக்கியது மட்டும் இன்றி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார். சமீப காலமாக வில்லன் வேடங்களில் அர்ஜுன் நடித்து வருவது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் நடித்திருந்தார். இவரது மகள் ஐஸ்வர்யா, தமிழ் சினிமாவில் விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின்‌ மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவருக்கு போதிய வாய்ப்புகள் வரவில்லை.

இந்த நிலையில் இவரும், தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இயக்குநர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வருவதாகத் தகவல் வெளியானது. உமாபதி தமிழில் ஒரு கூட முத்தம், தண்ணி வண்டி, மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சர்வைவர்’ என்ற நிகழ்ச்சியில் உமாபதி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன்தான் தொகுத்து வழங்கினார். அப்போது அர்ஜுன் குடும்பத்துடன் தம்பி ராமையா குடும்பத்தினருக்கு நட்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்துதான் உமாபதி, ஐஸ்வர்யா இருவரும் காதலிக்கத் தொடங்கியதாகக் கூறப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இந்த நிலையில், இருவருக்கும் இருவீட்டார் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஆசிய பாரா விளையாட்டு போட்டி; 100 பதக்கங்களைக் கடந்து வரலாற்று சாதனை படைத்த இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.