ETV Bharat / entertainment

நடிகர் மயில்சாமி மறைவுக்கு பல்வேறு திரைத்துறையினர் அஞ்சலி!

author img

By

Published : Feb 19, 2023, 12:57 PM IST

சென்னையில் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவுக்கு பல்வேறு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் மயில்சாமி மறைவு
நடிகர் மயில்சாமி மறைவு

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி(57) இன்று அதிகாலை திடீரென மாரடைப்பால் காலமானார். நேற்று இரவு சென்னை, வண்டலூர் அருகில் மேலகோட்டையூர் சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, வீடு திரும்பியபோது திடீரென மயில்சாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் உயிர் பிரிந்து விட்டது எனக் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து மயில்சாமியின் உடலுக்கு சென்னையிலேயே இறுதிச்சடங்கு செய்யப்படவுள்ளது. அவரது மறைவிற்கு திரைப் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய டிரம்ஸ் சிவமணி, "மிகப்பெரிய அதிர்ச்சியான செய்தி. தினமும் காலை எனக்கு செய்தி அனுப்பி விடுவார். அதேபோன்று நேற்று எனக்கு இன்று சிவராத்திரிக்கு திருவண்ணாமலை போக முடியாது. ஆகையால் மேலக்கோட்டையூர் சிவன் கோயிலில் சந்திக்கலாம் என்றார். நானும் எப்படியாவது வந்துவிடுகிறேன் எனத் தெரிவித்தேன். கோயில் தொடர்பாக என்னை அழைத்தால், நான் உடனடியாக சென்றுவிடுவேன். ஏனென்றால், அவர் தான் என்னை திருவண்ணாமலையில் வாசிக்க வைத்தார்.

பின்னர் அதிகாலை ஒரு 3 மணி வரையிலும் அவர் என்னோடு தான் இருந்தார். என்னுடன் டிரம்ஸ் வாசித்து பாடலும் பாடினார். பிறகு ஐந்தாம் கால பூஜைக்கு நான் திருவான்மியூர் கோயில் சென்றுவிட்டேன். அவரும் இன்றைய நாள் நன்றாக இருந்தது என்று வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் போட்டிருந்தார். அதன்பின் அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் அவரிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது.

ஆனால், அந்த அழைப்பில் மயில்சாமி பேசவில்லை, அவரது மகன் என்னிடம் பேசினார். தந்தை மயில்சாமி மாரடைப்பால் மறைந்து விட்டதாக தெரிவித்தார். கடைசியாக அவர் என்னிடம் பேசிய வார்த்தை, 'இந்த கோயிலில் நடிகர் ரஜினி அவர் கையால் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து அதை நான் பார்க்க வேண்டும்' என்றார். ஆகையால் அவரது ஆசையும், ஆன்மாவும் சாந்தி அடையட்டும்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நடிகர் செந்தில், "மயில்சாமி ஒரு நல்ல நடிகர், நல்ல நடிகர் மட்டும் இல்லாமல் எல்லோருடனும் நன்றாக பழகக்கூடியவர். நேற்றுகூட அவரிடன் பேசினேன்" எனக் கூறினார்.

அடுத்ததாக பேசிய நடிகர் பார்த்திபன், "மயில்சாமி இறப்பு சொல்ல முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நல்ல நடிகன், நல்ல இயக்குநராக இருப்பதை தவிர, நல்ல மனிதனாக இருப்பதற்கு அவர் ஒரு பாடமாக இருந்தவர். வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தவர். என்னுடைய காங்கேயன் என்கிற படத்தில் உதவி இயக்குநராக இருந்தார். ஆனால், அந்த படம் வெளியாகவில்லை, அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு ஒரு நல்ல நண்பராக இருந்துள்ளார். மேலும், எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் மயில்சாமி" என உருக்கத்துடன் கூறினார்.

அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய நடிகர் ஜெயராம், "திரையுலகில் யாரை கேட்டாலும் மயில்சாமி பற்றி ஒன்று தான் சொல்வார்கள், நல்ல நண்பர், நல்ல மனிதர். அவரும் நானும் ஒரே மேடையில் தான் மிமிக்கிரி செய்து சினிமாவுக்குள் வந்தோம். வாரத்தில் ஒரு நாளாவது நாங்கள் இருவரும் பேசிக்கொள்வோம். என்னிடம் அவர் ஒவ்வொரு முறையும் சொல்வது, ஒருமுறையாவது என்னோடு திருவண்ணாமலைக்கு வர வேண்டும். கடந்த வாரம் கூட என்னை தொலைபேசியில் அழைத்து திருவண்ணாமலைக்கு வருமாறு கேட்டிருந்தார். நான் தான் மறுத்துவிட்டேன். ஆனால், இந்த சிவராத்திரிக்கு அவர் திருவண்ணாமலையாரிடம் சென்று விட்டார்" என்று மிகவும் வருத்தத்துடன் பேசினார்.

இதையும் படிங்க: நடிகர் மயில்சாமி காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.