ETV Bharat / entertainment

விடுதலை படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

author img

By

Published : Mar 3, 2023, 6:17 PM IST

Etv Bharat
Etv Bharat

வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா வருகின்ற 8ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் தனது தனித்துவமான படங்களால் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர். பொல்லாதவன், வடசென்னை, விசாரணை, அசுரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ள இயக்குநர் வெற்றிமாறன் நகைச்சுவை நடிகர் சூரியை கதையின் நாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க வாடிவாசல் என்ற பிரமாண்ட படம் காத்திருப்பில் உள்ள நிலையில் தற்போது விடுதலை படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் எல்ரெட் குமார் & உதயநிதி ஸ்டாலின் இணைந்து விடுதலை படத்தை தயாரித்துள்ளனர். விடுதலை படத்தில் விஜய்சேதுபதி, சூரி ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக இப்படம் தயாராகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சிறுமலை, கொடைக்கானல், ஈரோடு, சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நடைபெற்றது. சூரி கதையின் நாயகனாக நடிப்பதாலும் வெற்றிமாறன் இயக்குநர் என்பதாலும் இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக சிறுகதைகளையும் நாவல்களையும் படமாக எடுக்கும் வெற்றிமாறன் இந்தப் படத்தையும் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்டு எடுத்துள்ளார். காவல் துறையை கதைக்களமாக கொண்ட இந்தப் படத்தில் பிரமாண்ட சண்டைக் காட்சி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி இப்படத்தில் ஒரு கைதி கதாபாத்திரமாகவும், நடிகர் சூரி போலீஸ் கதாபாத்திரத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி வடசென்னை படத்தில் நடிப்பதாக இருந்தது. நடிகர் சூரியுடன் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு மேல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா வருகின்ற 8ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் வெளியான ’ஒன்னோடு நடந்தா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்பாடல் யூடியூபில் 6 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இப்பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ’ஒன்னோடு நடந்தா’ பாடலை, எழுத்தாளர் சுகா எழுதியுள்ளார்.

ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை திரைப்படம் அனைவரது பாராட்டையும் பெற்றது மட்டுமல்லாமல் தேசிய விருதும் பெற்றது. இதனால் இப்படத்திற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விடுதலை, திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படிங்க: மயக்கும் குரல் கொண்ட மெல்லிசை பாடகர் பி.ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் ஸ்பெஷல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.