ETV Bharat / entertainment

ETV Bharat 2022 Roundup: வசூல் வெற்றி கண்ட தமிழ் திரைப்படங்கள் ஓர் பார்வை!

author img

By

Published : Dec 21, 2022, 3:08 PM IST

Updated : Dec 21, 2022, 3:44 PM IST

வசூலில் வெற்றி பெற்ற தமிழ் திரைப்படங்கள் ஓர் பார்வை
வசூலில் வெற்றி பெற்ற தமிழ் திரைப்படங்கள் ஓர் பார்வை

தமிழ் சினிமாவில் 2022-ம் ஆண்டு வெளியாகி வசூல் மழை பொழிந்த திரைப்படங்கள் குறித்து ஓர் சிறப்பு அலசல்

கரோனா பெருந்தொற்று ஏற்பட்டதன் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ் சினிமா ஆட்டம் கண்டு காணப்பட்டது. மெல்ல மெல்ல உயிர்ப்பித்த தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு பொற்காலமாக அமைந்தது. என்னதான் ஓடிடி தளங்களின் வளர்ச்சி அதிகரித்தாலும், திரையரங்குகளில் படம் பார்ப்பது என்பது ரசிகர்களுக்குத் தனி ஆனந்தமான விஷயம் என்பதை, இந்த ஆண்டு வெளியான படங்கள் உணர்த்தின.

வருடத்தின் ஆரம்பத்தில் சற்று தொய்வைச் சந்தித்த தமிழ் சினிமா பிப்ரவரிக்கு பிறகு மின்னல் வேகமெடுத்தது. எதிர்பார்த்த படங்கள் ரசிகர்களைச் சோதித்தாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றன.‌ அதுமட்டுமின்றி சற்றும் எதிர்பாராதவிதத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகமூட்டிய படங்களும் இந்த ஆண்டு வெளியாகின. அதன்படி இந்த ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாக வெற்றிபெற்ற படங்களை தற்போது பார்க்கலாம்.

பொன்னியின் செல்வன்: கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கியிருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார்.

இப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நாவலைப் படித்தவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு கலவையான விமர்சனங்களைச் சொன்னாலும், இன்றைய இளைய தலைமுறையினர் வரை இப்படம் சென்று சேர்ந்தது என்பதே உண்மை. அதன் விளைவாக இப்படம் ரூ‌.500கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்த அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையையும் படைத்தது.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

வலிமை: எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து, கடந்த பிப்ரவரியில் வெளியான திரைப்படம் ’வலிமை’. போனி கபூர் தயாரித்திருந்தார். வலிமை அப்டேட் கேட்டுச் சலித்துப்போன ரசிகர்கள் படத்தைப் பார்த்து நொந்துபோயினர் என்பதே உண்மை. இது வினோத் படமா அஜித் படமா என்று கேட்கும் அளவிற்குப் படம் ரசிகர்களைச் சோதித்தது. முதல்பாதி நன்றாக இருந்தபோதிலும் தேவையில்லாத அம்மா சென்ட்டிமென்ட்டால் இரண்டாம் பாதி வலுவிழந்தது‌.

அஜித் ரசிகர்களே படத்தை பார்த்து கடுப்பாயினர் என்பதே நிதர்சனம். ஆனாலும் வசூலில் குறைவில்லாமல் இருந்தது. காரணம் அஜித் என்னும் தனி மனிதருக்கு இருந்த அளவுகடந்த ரசிகர்களின் படைதான். இந்த ஆண்டு முதல் நாளில் அதிக வசூலித்த படமாக வலிமை உள்ளது. முதல் நாளில் மட்டும் ரூ.38கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தமாக ரூ.200கோடி வரை வசூலித்தது. இதனால் விமர்சன ரீதியில் சுமாரான படமான போதிலும் வசூலில் சாதித்தது.

வலிமை
வலிமை

பீஸ்ட்: கோலமாவு கோகிலா, டாக்டர் என்று அடுத்தடுத்து வெற்றியைக் கொடுத்த இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் பீஸ்ட். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஒரு வலிமையான வில்லன் இல்லாதது, நெல்சனின் நகைச்சுவை ஒர்க் ஆகாதது எல்லாமே இப்படத்திற்கு எதிர்மறையாக அமைந்தன. இதனால் ரசிகர்களை இப்படம் கவரவில்லை. ஆயினும் வசூலில் விஜய் எப்போதும் கில்லி என்பதை இப்படமும் உணர்த்தி, கிட்டத்தட்ட ரூ.230கோடி வரை வசூலித்துள்ளது.

பீஸ்ட்
பீஸ்ட்
விக்ரம்: இந்த ஆண்டு ரசிகர்களைத் திரையரங்குகளை நோக்கி படையெடுக்க வைத்ததில் மிக முக்கியமான படம் ’விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் எப்படி கடந்த ஆண்டு ’மாஸ்டர்’ படம் மூலம் ரசிகர்களைத் திரையரங்குகள் நோக்கி வரவைத்தாரோ அதேபோல் இந்த ஆண்டு ’விக்ரம்’ படம் மூலம் மீண்டும் அதனை சாத்தியப்படுத்தினார். எத்தனை ஓடிடி தளங்கள் வந்தாலும் நல்ல படங்கள் வந்தால் திரையரங்குகளில் கூட்டம் கூடும் என்பதை ’விக்ரம்’ உணர்த்தியது.

கமல், விஜய் சேதுபதி ஆகியோர் இருந்தாலும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கடைசி சில நிமிடங்களே வந்தாலும் மிரட்டி இருந்தார் சூர்யா. ஜூன் மாதம் வெளியாகி கிட்டத்தட்ட 100 நாட்கள் வரை ஓடியது. லோகேஷ் கனகராஜின் மாஸ் திரைக்கதை மற்றும் அனிருத்தின் இசை என இப்படத்தின் வெற்றிக்கு காரணங்களை, அடுக்கிக் கொண்டே போகலாம்.

கமல்ஹாசனின் இத்தனை ஆண்டு திரைப்பயணத்தில் இப்படி ஒரு மாஸ் வெற்றியை அவரே எதிர்பார்த்து இருக்கமாட்டார். உலகம் முழுவதும் இப்படம் ரூ.450கோடி வரை வசூலித்தது. இப்படம்தான் கரோனா பிடியிலிருந்த திரையரங்குகளுக்கு ஆக்ஸிஜன் கொடுத்தது எனலாம்.

விக்ரம்
விக்ரம்

எதற்கும் துணிந்தவன்: பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. சூர்யாவின் மாஸ் கமர்ஷியல் படமாக இப்படம் வெளியானது. பாண்டிராஜின் வழக்கமான திரைக்கதை மற்றும் காட்சிகள் தான் என்றாலும் ஓரளவுக்கு ஓடியது. வசூல் ரீதியில் பார்க்கும்போது சுமார் ரூ.170கோடி வரை வசூலித்தது.

எதற்கும் துணிந்தவன்
எதற்கும் துணிந்தவன்

டான்: அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் ’டான்’. கலகலப்பான காமெடி படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஒருசில காட்சிகள் விமர்சிக்கப்பட்டாலும் வசூலில் சக்கைப்போடு போட்டது.

’டாக்டர்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு மற்றுமொரு வெற்றிப்படமாகவும் ரூ.100கோடி வசூலித்த படமாகவும் அமைந்தது. அதுமட்டுமின்றி ரூ.100 கோடி வசூலித்த அறிமுக இயக்குநர் என்ற சிறப்பையும் சிபி சக்கரவர்த்தி பெற்றார். ஆனால் அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ’பிரின்ஸ்’ திரைப்படம் மண்ணைக் கவ்வியது தனிக்கதை.

டான்
டான்

திருச்சிற்றம்பலம்: தனுஷின் கேரியர் ஆட்டம் கண்டு வந்த சமயத்தில் சற்று இளைப்பாறுதல் கொடுத்த படம் ’திருச்சிற்றம்பலம்’. ’மாறன்’, ’ஜகமே தந்திரம்’, ’கலாட்டா கல்யாணம்’ என சொதப்பிக்கொண்டு இருந்த தனுஷுக்கு எதிர்பாராத வெற்றியை இப்படம் கொடுத்தது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அப்பா - மகன் உறவு, காதல் என ஒரு ஃபீல் குட் படமாக இப்படம் வெளியானது. எந்தவித அலட்டலும் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இப்படம் அமைந்தது. நித்யா மேனன் மற்றும் பாரதிராஜாவின் நடிப்பு மிகப்பிரமாதமாக இருந்தது. எந்தவித ஹீரோயிசமும் இல்லாமல் திரைக்கதை அமைத்திருந்தார் மித்ரன் ஜவஹர். அனிருத் இசையில் பாடல்கள் இனிமையாக அமைந்தன. இப்படம் ரூ.100 கோடி வசூலித்தது.

திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்

லவ் டுடே: இந்த ஆண்டின் சென்ஷேசன் ஹிட் என்றால் அது ’லவ் டுடே’ தான். இப்போது வரையிலும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. ’கோமாளி’ படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த திரைப்படம் ’லவ் டுடே’. ராதிகா, இவானா, யோகி பாபு, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பிரதீப் ரங்கநாதன் எடுத்த ’அப்பா லாக்’ என்ற குறும்படத்தை திரைப்படமாக எடுத்தியிருந்தார். இன்றைய 2k கிட்ஸ்களின் வாழ்வியலை அப்படியே திரையில் காட்டியிருந்ததால், படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இளைஞர்கள் பட்டாளம் திரையரங்குகளை நோக்கி படையெடுத்தனர்.

யுவனின் இசையும் பிரதீப் ரங்கநாதனின் இளமை துள்ளிய திரைக்கதையும், படத்தை வேற லெவல் வெற்றியை பெற வைத்தது. ரூ.5கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் கிட்டத்தட்ட ரூ‌.90கோடி வரை வசூலித்தது. ஒரு புது நடிகரின் படம் இவ்வளவு வசூலித்துள்ளது, இளம் நடிகர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கதையும், திரைக்கதையும்தான் நாயகன் என்பதை 'லவ் டுடே' உணர்த்தியுள்ளது.

லவ் டுடே
லவ் டுடே

அதேபோன்று கார்த்தி நடித்த சர்தார் படம் ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டும் ஏராளமான படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளதால் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலகினருக்கும் மகிழ்ச்சியான செய்தியுடன் இந்தாண்டு நிறைவு பெறுகிறது.

இதையும் படிங்க: 2022ஆம் ஆண்டு வரவேற்பைப் பெற்ற வெப் சீரிஸ் படங்கள் ஒரு பார்வை!

Last Updated :Dec 21, 2022, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.