ETV Bharat / entertainment

தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகும் சிறிய படங்கள் - இந்த ஆண்டும் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் இல்லை!

author img

By

Published : Apr 13, 2023, 5:13 PM IST

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நாளை ருத்ரன், சொப்பன சுந்தரி, திருவின் குரல், ரிப்பப்பரி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டில் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

che
தமிழ்

சென்னை: தமிழ் சினிமாவில் பண்டிகைக் காலங்களில் புதுப்படங்கள் வெளியிடும் வழக்கம் உள்ளது. பொங்கல், தீபாவளி என்றால் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி, ரசிகர்களால் சிறப்பாக திருவிழா போல கொண்டாடப்படும்.

பண்டிகையின்போது வெளியாகும் புதுப்படத்தை பார்த்தால்தான் அந்த பண்டிகையே நிறைவுபெறும் என்ற அளவில் இளைஞர்கள் கொண்டாட்ட மனநிலையில் இருப்பார்கள். கடந்த ஒரு தசாப்தத்தில் பண்டிகைக் காலங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. அதேபோல், பண்டிகை நாட்களில் சிறிய பட்ஜெட் படங்களுக்கும் திரையரங்குகள் கிடைப்பதில்லை.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தீபாவளி, பொங்கலுக்கு அடுத்தபடியாக, ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்றுதான் பெரிய படங்கள் வெளியிடப்படும். பள்ளிகள் முடிந்து கோடை விடுமுறை வந்துவிடும் என்பதால், அந்த நேரத்தில் பெரிய படங்களை வெளியிட்டால் மிகப்பெரிய வசூலை அள்ளும் என்பதற்காகவே தமிழ்ப் புத்தாண்டில் படங்களை வெளியிடுவார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் தமிழ்ப் புத்தாண்டில் பெரிய படங்கள் ஏதும் வெளியாகவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுக்கு எந்த பெரிய படமும் வெளியாகவில்லை. 2020ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்று காரணமாக ஏப்ரல் 14ஆம் தேதி புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை. 2021ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியானது. ஆனால், வெளியான சில தினங்களிலேயே கரோனா பரவல் காரணமாக மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டன. கடந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டையொட்டி விஜய் நடித்த பீஸ்ட் படம் வெளியானது. ஒரே ஒரு படம் மட்டுமே, வெளியானது. சிறிய படங்களோ வேறு பெரிய நடிகரின் படமோ கூட வெளியாகவில்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டின் தமிழ்ப்புத்தாண்டுக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள் ஏதும் வெளியாகவில்லை. பெரிய படங்கள் எல்லாம் படப்பிடிப்பு நிலையிலேயே இருப்பதால், இந்த ஏப்ரல் 14-க்கு சிறிய படங்களே வெளியாக உள்ளன. ரஜினியின் ’ஜெயிலர்’ திரைப்படம் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் பணிகள் முடியாததால் வெளியீடு தள்ளிப்போய்விட்டது.

இந்த தமிழ்ப் புத்தாண்டுக்கு 8 படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'ருத்ரன்', ஐஸ்வர்யா ராஜேஷின் 'சொப்பன சுந்தரி'‌, அருள்நிதி நடித்துள்ள 'திருவின் குரல்', யோகி பாபுவின் 'யானை முகத்தான்', விஜய் ஆண்டனி நடித்துள்ள 'தமிழரசன்', மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ள 'ரிப்பப்பரி', சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்', புதுமுகங்களின் 'இரண்டில் ஒன்று பார்த்துவிடு' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படம் வழக்கு ஒன்றில் சிக்கியிருந்த நிலையில், படத்தை வெளியிட அனுமதி வழங்கி இன்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால், திட்டமிட்டபடி நாளை(ஏப்.14) தமிழ்ப்புத்தாண்டுக்கு ருத்ரன் திரைப்படம் வெளியாகிறது.

யோகி பாபுவின் யானை முகத்தான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சொப்பன சுந்தரி, திருவின் குரல், ரிப்பப்பரி உள்ளிட்ட படங்கள் நாளை திட்டமிட்டபடி வெளியாகின்றன.

கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தமிழ்ப்புத்தாண்டில் பெரிய பட்ஜெட் படங்கள் ஏதும் வெளியாகவில்லை. சிறிய பட்ஜெட் படங்கள் வெளியானாலும், ரசிகர்கள் திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்க ஆர்வம் காட்டுவதில்லை. தமிழ்ப்புத்தாண்டு மட்டுமல்லாமல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏராளமான சிறிய படங்கள் வெளியாகிக் கொண்டுதான்‌ இருக்கின்றன. ஆனால், அவை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறுவதில்லை. இதுபோன்ற சிறிய படங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று சிறு பட தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இந்த மாதம் 28ஆம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இதனால் இடையில் உள்ள இரண்டு வாரங்களில் சிறிய படங்களை வெளியிட்டால் குறைந்தபட்ச வசூலாவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் சிறிய படங்கள் எல்லாம் நாளை வெளியாகின்றன.

இதையும் படிங்க: பிரபலங்கள் வீட்டில் கைவரிசை காட்டும் பணியாளர்கள்; போலீசார் பரிந்துரை என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.