'வாங்கோ வாங்கோ ஒன்னாகி...!' - அறிவுக்கு சந்தோஷ் நாராயணன் பதில்!

author img

By

Published : Aug 1, 2022, 6:27 PM IST

’வாங்கோ வாங்கோ ஒன்னாகி...!’ - அறிவுக்கு சந்தோஷ் நாராயணன் பதில்

பாடகர் அறிவு தான் பாடிய ’எஞ்சாயி என்சாமி’ பாடல் முழுக்க தன்னுடைய உருவாக்கம் தான் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ததையடுத்து, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

தனியிசைப் பாடகர் அறிவு , தீ மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சேர்ந்து தயாரித்த ’எஞ்சாயி என்சாமி’ எனும் தனியிசைப் பாடல் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பாடகி தீ இந்தப்பாடலைப் பாடினார்.

ஆனால், இந்த விழாவில் அறிவு அவரோடு சேர்ந்துபாடவில்லை. இதனையடுத்து, பாடகர் அறிவு தனது இணைய பக்கத்தில், 'எஞ்சாயி என்சாமி' பாடல் முழுக்க முழுக்க தன்னுடைய உருவாக்கம் என்றும், யாரும் தனக்கு ட்யூனோ, இசையோ, தரவில்லை எனவும்; இது கூட்டு முயற்சி என்றாலும் அதன் உருவாக்கம் முழுக்க தன்னுடையது தான் என்றும், இறுதியில் உண்மை வெல்லும் என்றும், கூறிப்பதிவு ஒன்றை நேற்று(ஜூலை 31)செய்தார்.

இந்நிலையில், தற்போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அதற்குப்பதிலளிக்கும் வகையில் கடிதம் ஒன்றை தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், 'இந்தப் பாடலின் ஐடியாவை 2020ஆம் ஆண்டின் இறுதியில் முதலில் தீ தான் என்னிடம் சொன்னார். அதற்குப்பின்னர் நான், தீ மற்றும் அறிவு ஆகிய நாங்கள் இணைந்து கலையின் மீதுள்ள பெரும் காதலுடன் இந்தப் பாட்டைப் படைத்தோம். என்னுடன் சேர்ந்து தீ இசையமைக்க, அறிவு பாடல் வரிகள் எழுதினார்.

இயக்குநர் மணிகண்டன், அந்தப் பாட்டிற்கான பிரத்யேக வார்த்தைகளைத் தருவதற்கும், உண்மையில் நடந்த சம்பவங்கள் மற்றும் பண்பாட்டு வரலாறு ஆகியவற்றை அறிவுடன் பகிர்ந்து அவருக்கு வரிகள் எழுத உதவி செய்தார். இந்த 'எஞ்சாயி என்சாமி’ பாடலின் அடிப்படை தாக்கம் மணிகண்டன் இயக்கிய அற்புதமான திரைப்படமான ‘கடைசி விவசாயி’ எனும் படத்தில் தான் உருவானது.

மேலும், பாடலில் இடம்பெற்ற ஒப்பாரி வரிகளை அரக்கோணம் மற்றும் அதைச்சுற்றிய கிராமத்தைச் சேர்ந்த தாத்தாக்கள், பாட்டிகள் தான் எழுதினார்கள். இந்தப்பாடலில் அடைந்த லாபத்தை நான், தீ, அறிவு ஆகிய மூவரும் சரி பங்காகத் தான் பிரித்துக் கொண்டோம். அறிவு வெளிநாட்டில் இருந்ததால் தான் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் அவர் இல்லாமல் தீ, பாடகி மாரியம்மாளுடன் இணைந்து ‘எஞ்சாயி என்சாமி’ பாடலைப் பாடினார்.

அறிவு ஒரு திறமை வாய்ந்த கலைஞர். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படமான ‘அனல் மேலே பனித்துளி’ படத்தில் நான் இசையமைத்துள்ள ‘கீச்சே கீச்சே’ எனும் பாடல் அவர் பாடியதிலேயே எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆகும். அது இன்னும் சில காலங்களில் வெளியாகும். என் கலை வாழ்க்கையிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி, நான் என்றுமே ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருக்கவே விரும்புகிறேன்.

மேலும், இந்த ‘எஞ்சாயி என்சாமி’ பாடல் குறித்து யார் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பொதுவெளியிலேயே பதிலளிக்கத் தயாராகியுள்ளேன். அனைவரையும் ஒன்றிணைத்து நிறைய கலைகள் படைப்பதே எனது குறிக்கோள். ’வாங்கோ வாங்கோ ஒன்னாகி..!’” எனப் பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: 'இறுதியில் எப்போதும் உண்மை தான் வெல்லும்’ என்ஜாய் எஞ்சாமி பாடல் குறித்து அறிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.