ETV Bharat / entertainment

யூடியூப்பில் அதிக நெகட்டிவிட்டி பரப்பப்படுகிறது - நடிகர் விக்ரம் பிரபு கருத்து

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 8:21 PM IST

Etv Bharat
Etv Bharat

Raid Movie Audio and Trailer Launch: தீபாவளியை ஒட்டி வருகிற 10ஆம் தேதி வெளியாக உள்ள விக்ரம் பிரபுவின் ரெய்டு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

சென்னை: அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு, நடிகை ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘ரெய்டு’. இப்படத்திற்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். அந்த வகையில், தீபாவளியை ஒட்டி வருகிற 10ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, இன்று (நவ.03) சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா, செல்வா, இயக்குநர் முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வேலு பிரபாகரன் பேசும்போது, “இது ஒரு அற்புதமான வாய்ப்பு. விக்ரம் பிரபுவுடன் நடித்தது என்ன சொல்வது என்று தெரியவில்லை.

இவரது அப்பா பிரபு, என்னுடைய படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். ஒரு கலைஞனுக்கு மிகப் பெரிய பொறுப்பு உண்டு. சமூக தவறுகளை சுட்டிக்காட்டும் பல வேலைகளை கலைஞன் செய்ய வேண்டும். கலைஞர்கள் சாதி, ஏற்றத்தாழ்வுக்கு எதிராக போராட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து நடிகர் செல்வா பேசும்போது, “எனது அப்பா போலீசாக இருந்து ஓய்வுபெற்றவர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காலமானார். அவரது நினைவாக, எனது ஒவ்வொரு படத்திலும் வாங்கும் சம்பளத்தில் இருந்து 20 சதவீதத்தை, காவல் துறையினரின் குடும்பத்தின் நலனுக்காக செலவிடுவேன்” என்று தெரிவித்தார்.

இயக்குநர் முத்தையா பேசுகையில், “இதுவரை 8 படங்கள் பண்ணி விட்டேன். அனைத்தும் மண் சார்ந்த படங்கள். அடுத்த படமும் அப்படி தான் இருக்கப்போகிறது. தெலுங்கு படமான ‘டகரு’ படத்தை பார்த்து விட்டு, அதன் உரிமையை வாங்கலாம் என்று யோசித்தேன். நகரத்தின் பின்னணியில் ஒரு படம் பண்ணலாம் என்று இதன் உரிமையை வாங்கினேன்‌.

இந்த கதையை விக்ரம் பிரபு மட்டும் தான் பண்ணலாம் என்று கூறினார். என்னால் இந்த படத்தை இயக்க முடியாத காரணத்தால், என் தங்கையின் மகனிடம் இயக்கக் கூறினேன். இந்த படம் உருவானது என்னால் கிடையாது. மேலும் தொழிலில் சரியாக இருக்கிறோம் என்பதை அடுத்தவர்கள் கூறுவதை வைத்து தான் எடை போட்டுக் கொள்ள முடியும்.

இந்த மேடை இயக்குநர் கார்த்திக்கான மேடை‌.‌ ஆனால் எல்லோரும் முத்தையா என்று கூறும் போது கூச்சமாக இருக்கிறது. தீபாவளிக்கு தன்னுடைய படம் வெளியாவதில் இயக்குநர் கார்த்திக்கு கொடுப்பனை கிடைத்துள்ளது” என்றார்.

அதைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு பேசுகையில், “சமீப காலமாக யூடியூப்பில் negativity நிறைய பரப்பப்படுகிறது. Negativity-ஐ வைத்து தான் இந்த படமே உருவாகி உள்ளது. ஏன் அப்படி நடக்கிறது என்று யோசிப்பேன். இறுகப்பற்று படத்தின் வெற்றிக்கு நன்றி. அது வித்தியாசமான படம். ரெய்டு படமும் அப்படித்தான்.

ஒளிப்பதிவாளர் சண்டை என்றெல்லாம் கூறினார். எல்லோரும் மெனக்கெடுவது படத்திற்காகத் தானே. யாரோ ஒருவர் பார்த்து விமர்சனம் கூறுவதற்கு, நாமே சரிசெய்து விட்டு போலாமே என்று தான் நினைக்கிறோம். களத்தில் சண்டை என்று எதுவுமில்லை. ‘இறுகப்பற்று’, ‘டாணாக்காரன்’ ஒரு விதமான படம் என்றால், ‘ரெய்டு’ வித்தியாசமான படம்” என்றார்.

இதையும் படிங்க: "வணக்கம் இந்தியா.. Indian is back" - வெளியானது இந்தியன் 2 படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.