சென்னை: தமிழ் சினிமாவில் விஜய் நடித்த 'தமிழன்' என்ற திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார், டி.இமான். அதன் பிறகு ரெண்டு, கிரி, விசில், வாத்தியார், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து பிரபல இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.
ஆனால் படத்தில் பாடல்கள் வெற்றி பெற்றாலும், இவர் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றே கூறலாம். அதன் பிறகு 2010ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கிய 'மைனா' படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்தது. பிறகு சிவகார்த்திகேயன் நடித்த 'மனம் கொத்திப்பறவை' படத்திற்கு இசை அமைத்தார். பின்னர் இந்த கூட்டணி 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற படத்தில் மீண்டும் இணைந்தது.
இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. குறிப்பாக ஊதா கலரு ரிப்பன் என்ற பாட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவராலும் ரசிக்கப்பட்டது. பின்னர் இமான், சிவகார்த்திகேயன் காம்போ ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் தொடர்ந்தது.
மேலும், இவர்கள் காம்போவில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றது. பின்னர் திடீரென இந்த கூட்டணி பிரிந்தது. சிவகார்த்திகேயன் படங்களுக்கு அனிருத், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இசையமைத்தனர். இந்த நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இமான், "இனி ஒருபோதும் நான் சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்க மாட்டேன்.
இந்த ஜென்மத்தில் அவருடன் நான் இணைந்து படம் பண்ணுவது கஷ்டம். அவருடன் சேர்ந்து பயணிக்க முடியாது. இது நான் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவு. அவர் எனக்கு வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு துரோகம் செய்துள்ளார். அடுத்த ஜென்மத்தில் நான் இசை அமைப்பாளராக பிறந்து, அவர் நடிகராக பிறந்தால் மீண்டும் பயணிப்பதைப் பற்றி பார்க்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
இமானின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியிலும், திரைத்துறையினர் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் வெற்றிக் கூட்டணியாக விளங்கிய இந்த கூட்டணி திடீரென இப்படி பிரிந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சேலத்தில் லியோ பட காட்சிகளுக்கு கட்டுப்பாடு - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!