ETV Bharat / entertainment

புகை பிடிக்கும் காட்சி : நீதிமன்றத்தில் ஆஜராக தனுசுக்கு விலக்கு!

author img

By

Published : Aug 1, 2022, 12:45 PM IST

வேலையில்லா பட்டதாரி படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றது தொடர்பான வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து நடிகர் தனுசுக்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

VIP movie smoking scene case
VIP movie smoking scene case

சென்னை: தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம், தமிழ்நாடு அரசிடம் புகார் ஒன்றை அளித்தது. அதில், "நடிகர் தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும்போது திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறவில்லை" என குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனால், அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக, விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இதை விசாரணைக்கு ஏற்ற சைதாப்பேட்டை நீதிமன்றம் இருவரும் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் இவ்வழக்கை ரத்து செய்து விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளித்தது.

இதே கோரிக்கைகளுடன் நடிகர் தனுஷ் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்பு இன்று (ஆக. 1) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான தனுஷ் தரப்பின் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆஜராவதில் இருந்து நடிகர் தனுசுக்கு விலக்களித்து விசாரணையை வரும் ஆக.10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த மாபெரும் எதிர்பார்ப்பு இதற்குமுன் எந்த படத்திற்கும் இருந்திருக்காது - நடிகர் ஜெயராம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.