ETV Bharat / entertainment

ரீ ரிலீஸ் செய்யப்படும் கமல்ஹாசனின் ஆளவந்தான்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 5:43 PM IST

Aalavandhan Re-Release: இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வெளியான ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்போவதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

Aalavandhan Re-Release
ஆளவந்தான் ரீ ரிலீஸ்

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் தமிழ் சினிமாவில் பல புதுமைகளைப் புகுத்தி உள்ளார். தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது ஒரு புதிய விஷயங்களைச் சேர்த்து ரசிகர்களுக்கு விருந்து வைப்பவர். அந்த வகையில் கடந்த 2001 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆளவந்தான்.

இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து இருந்தார். இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சங்கர், எஸான் லாய் இருவரும் இணைந்து இசை அமைத்திருந்தனர்.

இப்படத்தில் கமல்ஹாசன் இரண்டு விதமான தோற்றங்களில் நடித்து இருப்பார். இப்படம் வெளியாகி 22 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற “கடவுள் பாதி மிருகம் பாதி” என்ற பாடலில் உள்ள அனிமேஷன் காட்சிகள் உச்சம் தொட்டன. இதற்காக படக்குழு ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களைப் பயன்படுத்தி இருந்தனர்.

இந்த படத்தை தொழில்நுட்ப ரீதியிலும், அதிக பொருட் செலவிலும், பிரமாண்டமான படமாக தாணு தயாரித்திருந்தார். உளவியல் சிக்கலைப் பேசியிருந்த இப்படம் வழக்கம் போல வெளியான சமயத்தில் சரியான வரவேற்பு பெறவில்லை. ஆனால் காலம் கடந்து தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கமல் படங்களிலேயே வித்தியாசமான படமாக ஆளவந்தான் அமைந்தது.

இந்நிலையில் இப்படம் விரைவில் மீண்டும் புதுப்பொலிவுடன் ரீ ரிலீஸ் செய்யப்பட போவதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “எழிலோடும்..பொலிவோடும்..விரைவில்..வெள்ளித்திரையில். என பதிவிட்டு போஸ்டர் வெளியிட்டு உள்ளார். அந்த போஸ்டரில் ஆளவந்தான் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்களுக்கும், கமல் ரசிகர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக முன்னணி நடிகர்களின் படங்கள் அதிக அளவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆளவந்தான் படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு சாதனை படைக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பார்த்த ரஜினிகாந்த்.. படக்குழுவினருக்கு பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.