ETV Bharat / entertainment

தலித் அரசியல் மட்டும் பேசும் இயக்குநரா பா.இரஞ்சித்..?

author img

By

Published : Aug 15, 2022, 5:50 PM IST

Updated : Aug 15, 2022, 6:01 PM IST

தலித் அரசியல்  மட்டும் பேசும் இயக்குநரா பா.இரஞ்சித்..?
தலித் அரசியல் மட்டும் பேசும் இயக்குநரா பா.இரஞ்சித்..?

தமிழ்த்திரையுலகில் தலித் அரசியலை உரக்கப் பேசியும், அதைப் பேச வழி வகுத்தவருமான இயக்குநர் பா.இரஞ்சித்தின் மற்றொரு கோணத்தையும் இக்கட்டுரையில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் தலித் கதைக்களங்கள் இயக்குநர் பா.இரஞ்சித்தின் வருகைக்கு முன்பு பெரிதும் பேசப்படாத ஒன்றாக, சர்ச்சையைக் கிளப்பும் விவகாரமாகவே காணப்பட்டது எனச் சொன்னால் அது மிகையாகாது. அவர் தமிழ்த்திரையுலகில் கால்தடம் பதித்து 10 வருடங்கள் நிறைவாகின்றன.

ப.இரஞ்சித்
ப.இரஞ்சித்

ஆனால், நாம் தற்போது அவரது அந்த முகத்தைப்பற்றி பார்க்கப்போவதில்லை. வெறும் தலித் கதைக்களங்களை, அவர்களின் வாழ்வியல் பிரச்னைகளை மட்டும் பேசிவந்த இயக்குநரா பா.இரஞ்சித்..? இல்லை, பா.இரஞ்சித் எனும் திரைக்கலைஞனின் ஆற்றல், திரைமொழி, புரிதல் என அனைத்தும் அலாதியானதே.

ப.இரஞ்சித்
ப.இரஞ்சித்

பொதுவாக உலக சினிமாக்களில் நசுக்கப்படும், வஞ்சிக்கப்படும் மக்களின் வாழ்வியலைப் பேசும் இயக்குநர்கள் ஆங்காங்கே இருப்பார்கள். அதில், இயக்குநர் பா.இரஞ்சித்தை அமெரிக்க இயக்குநர் ஸ்பைக் லீயுடன் சிலர் ஒப்பிடுவதையும் நாம் பார்க்கமுடியும்.

இயக்குநர் பா.இரஞ்சித்
இயக்குநர் பா.இரஞ்சித்

பா.இரஞ்சித் திரைப்படங்கள் அனைத்தும் அரசியல் பிழையின்றி, இனவாத சிந்தனையின்றி, பெண்ணடிமைத்தன சிந்தனையின்றியே காணப்படும். இவை அனைத்தையும் பா.இரஞ்சித் கவனமாகத் தவிர்த்திருக்கிறார் என்பதை விட அவர் சிந்தனையில் இயல்பாகவே இது உள்ளது என்று தான் கூற வேண்டும்.

கபாலியின் காட்சிக்குப் பின்னால்..!
கபாலியின் காட்சிக்குப் பின்னால்..!

பெரும்பாலும் பல சிறந்த இயக்குநர்கள்கூட மேல சொன்ன விஷயங்களைத் தூக்கிப் பிடிக்கும் ஏதோ ஒரு சிறிய தவறை தங்கள் படங்களில் வைத்திருக்கக்கூடும். ஆனால், பா.இரஞ்சித்திடம் அதைத் துளி கூட நம்மால் பார்க்க முடியாது. இதற்கு சரியான விளக்கமாக இதைப் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் கூறியதை நாம் மேற்கோள்காட்ட விரும்புகிறோம், “பா.இரஞ்சித் முதலில் ஒரு அரசியல்வாதி. பிறகு தான் ஒரு திரைக்கலைஞர். ஆகையால், அவரது அனைத்துத் திரைப்படங்களிலும் சிறு அளவு அரசியல் பிழைகளைக் கூட நம்மால் காண முடிவதில்லை” என்றார்.

லவ்வர்ஸ் பாய்ஸ்
லவ்வர்ஸ் பாய்ஸ்

சரி, தற்போது வெற்றிமாறன் கூறிய கூற்றுப்படி, அரசியல்வாதி பா.இரஞ்சித்தைத் தனியாகத் தவிர்த்து விட்டு திரைக்கலைஞர் பா.இரஞ்சித்தைப்பற்றி சற்று விரிவாகப்பார்க்கலாம். ஆம், பா.இரஞ்சித்தின் அனைத்து திரைப்படங்களிலும் தலித் அரசியல் பேசப்பட்டிருக்கும்.

’டூ டு டூ..’ காதல் கன்ஃபியூசன்..!
’டூ டு டூ..’ காதல் கன்ஃபியூசன்..!

ஆனால், அந்தப் படங்கள் யாவும் பிரசாரமாகவோ, கருத்தூசி போடுவதாகவோ இருக்காது. ஒரு படம் நியாயமாக செய்ய வேண்டிய உணர்வுகளைக் கடத்துதல், மக்களின் சிந்தனையை மதித்தல், தாக்கத்தை ஏற்படுத்துதல் என அனைத்தையும் பா.இரஞ்சித்தின் படங்கள் செய்யும். இவை அனைத்தையும், காட்சிமொழி கொண்டே கடத்துவதையும் பா.இரஞ்சித்தின் படங்கள் செய்யத்தவறியதில்லை.

வா ரூட்டு தல..!
வா ரூட்டு தல..!

அவரின் முதல் படமான ‘அட்டக்கத்தி’ யில் இருந்து வருவோம். நமக்குத் தெரிந்து, தமிழ்சினிமாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய ‘Coming of age' ஜானர் திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படமாக ’அட்டக்கத்தி’ திரைப்படத்தைப் பார்க்கலாம்.

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16108890_para6.jpeg
மற்றுமொறு காதல் தோல்வியில் ’அட்ட’..!

இளம் வயதில் வரும் காதல் உணர்வைப் பற்றிய சந்தேகங்கள், குழப்பங்கள், புரிதல், ஆர்வம், அதை எப்படியாவது அடைய வேண்டுமென்ற துடிப்பு, என இவை அனைத்தும் நாம் பாலிய காலத்தில் கடந்து வந்த ஓர் உணர்வு தான். அதை, தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்படாத ஓர் கதைக்களமான சென்னையைச் சுற்றிய சிறு - குறு கிராமங்களை மையமாக வைத்து படமாக்கியது மேலும் ஓர் சிறப்பு.

மெட்ராஸ் இடைவேளைக் காட்சி
மெட்ராஸ் இடைவேளைக் காட்சி

அடுத்ததாக, அவரின் காட்சிமொழி பெரிதும் காணப்பட்ட திரைப்படமாக ‘மெட்ராஸ்’ திரைப்படத்தை சொல்லலாம். ஒரு சுவரை மையமாக வைத்து அதைச்சுற்றியுள்ள அரசியல், நம்பிக்கை, வாழ்வியல், போட்டி, பொறாமை, துரோகம் என அனைத்தையும் பிணைத்து மிக அற்புதமாகப்படைத்திருப்பார் பா.இரஞ்சித். இதில் ஒவ்வொரு காட்சியிலும் பா.இரஞ்சித்தின் அலாதியான திரை ஆளுமைத் தென்பட்டிருக்கும்.

குறிப்பாக இந்தப்படத்தின் இடைவேளை காட்சி. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஓர் இடைவேளைக் காட்சியாக இந்தக் காட்சியை சொல்லலாம். அந்த சுவர் படத்தின் ஒரு கதாபாத்திரமாகவே மாறி கதையின் முக்கியப்புள்ளியாகி அனைத்தையும் தாண்டி பிரமாண்டமாக எழுந்துநிற்பதாக அந்தக்காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்தக்காட்சியின் லைட்டிங்க்ஸ், சந்தோஷ் நாராயணனின் இசை, கேமரா ஆங்கிள் என அனைத்தும் சேர்த்து ஓர் முழுமையான சினிமா அனுபவத்தை நம்மிடம் கடத்தியிருக்கும்.

இந்த முழுமையான சினிமா அனுபவத்திற்கான அம்சங்களை பா.இரஞ்சித்தின் பெரும்பாலான அனைத்துப் படங்களிலும் நம்மால் காண முடியும். ‘காலா’ திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் அனைத்து முகமும் ’காலா’வாகத் தெரிவதாக காட்சியமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில், காலா ஒன்றும் தனிமனிதன் இல்லை.

ஒத்த தல ராவணா..!
ஒத்த தல ராவணா..!

அது ஓர் சித்தாந்தம். இது ஓர் பக்கம் போக, பின்னணியில் ”ஒத்த தல ராவணா.., பத்து தல ஆவுடா..!” எனும் வரிகளில் பாடல் ஒளிப்பதின் மூலம் சைடு - கேப்பில் ராமாயணத்தையும் உடைத்து நொறுக்கத்தவறவில்லை; இப்படி அவர் கூற வரும் அரசியலையும், வாழ்வியலையும் திரைக்கலை வடிவத்தில் அவ்வளவு நேர்த்தியாகக் கூறுபவர் தான் பா.இரஞ்சித்.

பா.இரஞ்சித் பல ஜானர்களில் படம் செய்யக்கூடும் வல்லமை கொண்டவர் தான். அவரிடம் அதற்கான ஆற்றலும், தேடலும், ஆசையும் நிறைய உள்ளது என்பதற்கு, அவர் தயாரிப்பில் தமிழில் வெளியான முதல் ‘மேஜிக்கல் ரியலிச’ திரைப்படமான ’குதிரைவால்’ திரைப்படத்தைச் சொல்லலாம்.

அந்தப் படத்தின் ஓர் விழாவில், பா.இரஞ்சித்தே இது பற்றி கூறிருப்பார். தனக்கு இப்படிப்பட்ட பரீட்சார்த்த ஜானர்களில் படம் எடுக்க ஆசை என்றும், அதை முழுக்க செய்யமுடியாத சூழலில் தான் இருப்பதால் இப்படிப் பட்ட திரைப்படங்களைத் தயாரிப்பதாகவும் கூறியிருப்பார். மேலும், தான் இயக்குநர் ‘தர்கோவ்ஸ்கி’யின் படங்களினால் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும் கூறியிருப்பார்.

தம்மம் படத்தின் காட்சி
தம்மம் படத்தின் காட்சி

அவரது அடுத்த படமான ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்திலும் மற்றும் ஓர் பேசப்படாத அரசியலான LGBT பிரிவினரின் அரசியலைப் பேசவுள்ளார். அதிலும் அரசியல்வாதி பா.இரஞ்சித்துடன் திரைக்கலைஞரான பா.இரஞ்சித் சரியாகப் பின்னிப் பிணைந்திருப்பார் என்பது அந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல் காட்சிகளின் மூலம் தெரிகிறது.

சமீபத்தில் ஓடிடியில் வெளியான ‘விக்டிம்(Victim)’எனும் ஆண்டாலஜி திரைப்படத்தில் இரஞ்சித் இயக்கிய ‘தம்மம்’ எனும் குறும்படம் இரஞ்சித்தின் காட்சிமொழி ஆளுமைக்கு சமீபத்திய எடுத்துக்காட்டு எனவே கூறலாம். கதைக்களத்தைக் காட்சிப்படுத்துவதாக இருக்கட்டும், பல விஷயங்களை காட்சிகளாகவே வசனமின்றி கடத்துவதாக இருக்கட்டும் அனைத்திலும் நிரம்பியிருந்தது பா.இரஞ்சித்தின் ’டச்’.

ஒரு குறும்படத்திற்கான சரியான எடுத்துக்காட்டாக திரைக்கலை பயிலும் மாணவர்களுக்கும் அதை எடுத்துக்காட்டாக காட்டலாம். ஆங்கிலத்தில் ‘Abstract Thinking' எனக்கூறுவார்கள். அந்த ஆற்றல் உள்ள சில இயக்குநர்களில் இரஞ்சித் முக்கியமானவராகவே கருதுகிறோம். அவர் நிறைய ஜானர்களில் படம்படைக்க வேண்டுமென்பதே சினிமா ரசிகர்கள் அனைவரின் ஆசையும். பா.இரஞ்சித் எனும் திரைக்கலைஞர், கோட்பாடுகளுக்குள் கோடிட்டுக் கொள்ளாததோர் கலகக்காரன்..!

இதையும் படிங்க: காட்சிக்கூராய்வு, ஓர் உன்னதமான துரோகம்...

Last Updated :Aug 15, 2022, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.