ETV Bharat / entertainment

இசையமைத்த முதல் படம் வெளியாகவில்லை; ஆனால் இன்று ஆஸ்கர் நாயகன்.. கீரவாணி கடந்து வந்த பாதை!

author img

By

Published : Mar 14, 2023, 4:59 PM IST

கீரவாணி
கீரவாணி

தெலுங்கில் கீரவாணி, தமிழில் மரகதமணி இந்த ஆண்டிற்கான சிறந்த ஒரிஜினல் இசைக்கான ஆஸ்கர் விருதை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த எம்.எம்.கீரவாணி யார்? இசையுலகில் இவரது பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்..

ஹைதராபாத்: 1961ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் கீரவாணி. பாடலாசிரியரான இவரது தந்தை சிவசக்தி தத்தா, இசை மீது தீரா காதல் காரணமாக கீரவாணி என்ற ராகத்தின் பெயரை இவருக்கு சூட்டியுள்ளார். நாளடைவில் தந்தை பற்று தன் பற்றாக மாற, கீரவாணி தெலுங்கி இசையமைப்பாளரான சக்கரவர்த்தியிடம் உதவியாளராக சேர்ந்தார்.

பின்னர் 1990-ல் கல்கி என்ற தெலுங்கு படத்திற்கு முதன்முறையாக இசையமைத்தார். ஆனால் அந்த படம் வெளியாகவே இல்லை. இது அவருக்கு பெறும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஆனாலும் மனம் தளராத கீரவாணி, தொடர் இலக்கை நோக்கி அடியெடுத்து வைக்க ஆரம்பித்தார். அப்போது தான் அவருக்கு மௌலி இயக்கித்தில் உருவான 'மனசு மகாத்மா' திரைப்படம் கைக்கொடுத்தது. இது தான் அவர் இசையில் வெளியான முதல் படம். அதே ஆண்டில் இவரது இசையில் வெளியான 'சீதாராமையா காரி மனவராலூ' படம் பலரது கவனத்தை ஈர்த்தது.

இதனைத் தொடர்ந்து ராம் கோபால் வர்மா இயக்கிய ‘ஷனா ஷனம்’ படம் மூலன் மக்களின் மனதில் இடம் பிடித்தார் கீரவாணி. மெலடி கிங்காக வலம் வந்த இவர், ரசிகர்கள் மனதில் மெலடி தான் என்றும் இருக்கும் என்று நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

தமிழில் அறிமுகம்:

1989ஆம் ஆண்டு வெளியான 'புதுப்புது அர்த்தங்கள்' படத்திற்கு பிறகு கே.பாலச்சந்தருக்கும், இளையராஜாவுக்கும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் இசையமைப்பாளருக்காக கே.பாலச்சந்தர் தேடிய போது கிடைத்த கீரவாணியை தமிழில் மரகதமணி என்று அறிமுகம் படுத்தினார்.

வேறு மாநிலத்தில் இருந்து இசையமைப்பாளரை கொண்டு வந்ததால் ரசிகர்கள் ஆர்வத்தில் இருந்தனர். இதனை சற்றும் சாய்க்காத கீரவாணி 'அழகன்' பட இசை மூலம் மக்களை சாய்த்தார். குறிப்பாக அந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள 'சங்கீத ஸ்வரங்கள்' பாடல் இன்றளவிலும் காதலர்கள் ரசிக்கும் பாடலாக உள்ளது.

சூப்பர் ஹிட் பாடல்கள்:

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இசையால் மக்களை மிரளச்செய்தார். இதனைத் தொடர்ந்து கே.பாலச்சந்தரின் நிறுவனம் தயாரித்த 'நீ பாதி நான் பாதி' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு மரகதமணி (எ) கீரவாணிக்கு கிடைத்தது. அதில், நிவேதா என்ற ஒற்றை வார்த்தையிலேயே மொத்த பாடலையும் உருவாக்கினார் கீரவாணி. எஸ்.பி.பி குரல் இவரது இசையில் சலிப்படையாத வகையில் அமைந்தது அவரது வெற்றி.

இதையடுத்து தமிழில் சில படங்களுக்கு இசையமைத்த அவர், 1992-ல் 'சேவன்' படத்தில் சூப்பர் ஹிட் பாடல் கொடுத்தார். படத்தில் இடம் பெற்றுள்ள 'நன்றி சொல்லி பாடுவேன்' என்ற பாடல் இன்றும் பலரது ஆஸ்தான பாடல்களில் ஒன்றாக உள்ளது. இதனைத் தொடர்ந்து கே.பாலச்சந்தருடன் இணைந்து, வானமே எல்லை, ஜாதி மல்லி போன்ற படங்களுக்கு கீரவாணி இசையமைத்தார்.

இதில் 'வானமே எல்லை' படத்தில் இடம்பெற்றுள்ள 'கம்பங்காடு' பாடல் பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் ஹிட்டானது. இந்த பாடலை பாடகி சின்னக்குயில் சித்ராவுடன் இணைந்து கீரவாணியே பாடியிருபார். ஊருக்குள் எந்த பேருந்தில் ஏறினாலும், இந்த பாடலை கடக்காமல் போக முடியாது. அந்த அளவுக்கு சிறப்பு பெற்றிருந்தது.

ராஜமௌலி - கீரவாணி காம்போ

2001ஆம் ஆண்டு 'ஸ்டூடண்ட் நம்பர் 1' திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவர் முதல் படத்தில் கீரவாணியுடன் கை கோர்த்தார். பாடல்கள் தூள் பறந்தது. இதே படத்தை சிபிராஜை வைத்து செல்வா தமிழில் இயக்கியதற்கும் கீரவாணி இசையமைத்தார். அதில் இடம் பெற்ற 'சொல்லாமலே இருக்க முடியுமா' பாடல் மைக் செட்டில் போட்டு காதல் வளர்த்த வாலிபர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது.

'ஸ்டூடண்ட் நம்பர் 1' படத்தை அடுத்து ராஜமௌலி இயக்கிய அனைத்து படங்களுக்கு கீரவாணி தான் இசையமைத்தார். ராஜமௌலி தந்தையும் கீரவாணி தந்தையும் நண்பர்கள். அதேபோல் ராஜமௌலியும், கீரவணியும் நண்பர்களாக உள்ளனர். இவர்கள் இருவது காம்போவில் வெளிவந்த மகதீரா, நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 என இவர்களது காம்போ ரசிகள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. குறிப்பாக பாகுபலி இரண்டு பாகங்களும் கீரவாணி இசை பயணத்தில் மிகச் சிறந்த இடத்தை பிடித்தது. வசூல் ரீதியாகவும் விமர்சனங்கள் ரீதியாகவும் அதிகம் பேசப்பட்ட இந்தப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.

ஆஸ்கர் விருது:

இந்நிலையில் ராஜமௌலி - கீரவாணி காம்போ இணைந்த படம் ஆர்.ஆர்.ஆர். உலக அளவில் வசூலில் கலக்கிய இந்தப்படம், பாடலிலும் சிறந்து விளங்கியது. குறிப்பாக படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சர்வதேச அளவில் மக்களை ஆட வைத்தது. சமூக வலைத்தளங்களை திறந்தால் போதும், ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் 'நாட்டு நாட்டு' பாடலில் அணிந்திருக்கும் வேடம் போல், மேக் அப் போட்டுக்கொண்டு, ரீல்ஸ் செய்து பதிவிட்டனர். இன்றும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து போடுவதை நாம் பார்க்க முடிகிறது.

அண்மையில் கோல்டன் குளோப் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல், சிறந்த ஒரிஜினல் இசைக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது. இந்த விருதினை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதனைக் கண்ட படக்குழுவினர் உற்சாகத்தில் உறைந்தனர். இந்த பாடல் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கீரவாணியை திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இசையமைத்த முதல் படம் வெளியாகவில்லை ஆனாலும் மனம் துவண்டுவிடாமல் இசை மீது கீரவாணிக்கு கொண்ட காதல் தான் அவரை ஆஸ்கர் வரை செல்ல வைத்துள்ளது என பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.