ETV Bharat / entertainment

Ponniyin Selvan 2: இசை வெளியீட்டு விழாவில் ஷாக் கொடுத்த அமைச்சர் துரைமுருகன்.. சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் கூறியது என்ன?

author img

By

Published : Mar 30, 2023, 7:11 AM IST

Minister Duraimurugan and Actors Actresses spoke at the ponniyin selvan 2 trailer and audio launch
பொன்னியின் செல்வன் டிரைலர், இசை வெளியீட்டு விழாவில் நடிகர், நடிகைகள், அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசியுள்ளனர்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர், இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் நடிகர், நடிகைகள் பலர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசிய சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்..

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன் , சிம்பு, பாரதிராஜா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், மணிரத்னம், குஷ்பூ, ஷோபனா, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், லைகா புரொடக்சன் சுபாஸ்கரன், ஏ.ஆர்.ரகுமான், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி, நடிகர்கள் அஸ்வின், 'முருகா' அசோக், தயாரிப்பாளர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன், கவிஞர் சினேகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய குஷ்பூ, "தமிழ் சினிமாவின் வரலாற்றை மாற்றிய படம் பொன்னியின் செல்வன்" எனத் தெரிவித்தார். ஷோபனா, ”தமிழ்நாட்டில் என்னை யாருக்கும் அதிகம் தெரியாது. ஆனால் தளபதி படத்தில் ரஜினியுடன் நடித்தவர் என்று தான் கூறுகின்றனர். தளபதி படத்தை பற்றி புகழ எனக்கு தகுதி இல்லை" எனப் பேசினார்.

சுஹாசினி, "மணிரத்னம் மிகவும் ரொமான்டிக்கான நபர். அவருடைய பர்மனனெட் ஹீரோயின் நான். அவரது படத்தில் வருவது போன்று அவரது வாழ்விலும் உள்ளது. நாயகன் எனக்கு மிகவும் பிடித்த படம் . அதற்கு பின் தற்போது பொன்னியின் செல்வன் தான் பிடிக்கும்” என்றார். உங்களுக்கு நந்தினி பிடிக்குமா குந்தவை பிடிக்குமா என்ற கேள்விக்கு ஆழ்வார்க்கடியான் என்று கூறி சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

விழாவில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "ஒரு வரலாற்று கதையை வரலாற்றில் நிற்கும் அளவில் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. நான் படிக்கின்ற காலத்தில் பலமுறை படித்திருக்கிறேன். இக்கதையை படமாக்குவதாக சுபாஷ்கரன் என்னிடம் கூறினார். யார் நடிக்கிறார்கள் என்று கேட்டேன். அரைமனதாக ஒப்புக்கொண்டேன். இயக்குனர் யார் என்று கேட்டேன். மணிரத்னம் என்றார். மணிரத்னம் இக்கதைக்கு ஒத்துவரமாட்டார் என்றேன். அவர் இருட்டிலேயே படம் எடுப்பவர் என்று வேண்டாம் என்றேன். ஆனால் படத்தை பார்த்துவிட்டு அந்த எண்ணத்தை மாற்றிவிட்டேன். வீட்டில் இருந்தே சல்யூட் வைத்தேன்.

வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். எனது தொகுதிக்குட்பட்ட ஊர்தான் வந்தியத்தேவனின் ஊர்‌. அதனால் எனக்கு ஒரு மகிழ்ச்சி. கமல்ஹாசனுக்கு கருணாநிதி கலைஞானி என பெயரிட்டார். அவருக்கு இணையானவர் திரையுலகில் இன்றைக்கு இல்லை. என்றைக்கும் இல்லை. எனது பேச்சைக் கேட்காமல் இப்படத்தை எடுத்து வெற்றி கண்ட சுபாஷ்கரனுக்கு வாழ்த்துகள். ஒரு படத்தின்‌மூலம் ஒரு தமிழ் மன்னனை அறிமுகப்படுத்திய‌ பெருமை சுபாஷ்கரனை சேரும். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இரண்டு மடங்கும் ஓடும்” எனப் பேசினார்.

இயக்குநர் பாரதிராஜா, “9ம் வகுப்பு படிக்கும்போது பொன்னியின் செல்வன் படித்தேன். எந்த படம் வேண்டுமானலும் எடுக்கலாம், ஆனால் சரித்திர கதையை பிசகாமல் எடுக்கணும். மணிரத்னம் ஜீனியஸ். இப்படத்தை எம்ஜிஆர் எடுக்க ஆசைப்பட்டார். கமல், ஸ்ரீ தேவி, என்னை வைத்து எம்ஜிஆர் பேசினார். வந்தியத்தேவனாக கமலை வைத்து எடுக்க நினைத்தார். ஆனால் அதன் பிறகு எம்ஜிஆருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நான் சொதப்பிவிடுவேன் என்று கடவுள் மணிரத்னத்தை எடுக்க வைத்துவிட்டார். நாம் நிறை கொடுத்துவைத்தவர்கள். நம்மிடம்‌ நிறைய கலைஞர்கள் உள்ளனர். காதல் இல்லாமல் நாம் கலைஞர்கள் கிடையாது. காதல் ஒன்றுதான் கலைஞனை வளர்க்கிறது.

மணிரத்னம் ரொமான்டிக் என்று வெளியே சொல்வது இல்லை. கமல் சொல்லி விடுவார். இப்படத்தில் கதாநாயகிகளை லட்டு லட்டாக தேர்வு செய்துள்ளார். எல்லோரையும் காதலிக்கலாம் போல. நந்தினியை, குந்தவையை, பூங்குழலியை காதலிக்கலாம். உலகம் முழுவதும் இன்று பொன்னியின் செல்வன் பற்றி விவாதிக்கின்றனர். இந்தியாவை தமிழ்நாடு பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் மணிரத்னம். நான் கடைசிவரை கடவுளிடம் போராடி மணிரத்னம் செய்வதை பார்த்துவிட்டுதான் போவேன்” என்றார்.

நடிகர் கமல்ஹாசன், “சின்ன வயதில் இருந்து என்னை இந்த மேடையில் நிறுத்தி வைத்துள்ள தமிழ் மக்களுக்கு நன்றி. அதன் உணர்வை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்று தம்பி சிம்புவிற்கு தெரியும். இது தொழில் அல்ல கடமை. சந்தோஷமாக இருக்கிறேன் அதற்கு சம்பளமும் தருகிறார்கள். சிறந்த கலைஞர்களுடன் பணியாற்றிய வாய்ப்பு கிடைத்துள்ளது. சிலது கைவிட்டும்போனது. இந்த படம்போன்று. மணிரத்னத்தை பார்த்து பொறாமை கொள்ளும் நபரில் நானும் ஒருவன். முதலாமானவர் பாரதிராஜா.

இப்படி பட்ட‌ படத்தை இயக்கி விட்டு அமைதியாக மணிரத்னம் அமர்ந்திருக்கிறார். இது எங்கே போகும் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. துபாயில் ஏ.ஆர்.ரகுமான் ஆர்கஸ்ட்ராவில் பாடலை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் பொறாமைப்பட நேரமில்லை. வாழ்க்கை சிறியது. சினிமா வாய்ப்பு இன்னமும் சிறியது. அதில் கிடைக்கும் வாய்ப்புகளை ஒன்றாக இருந்து ரசிக்க வேண்டும். காதலா வீரமா என்றார்கள். காதலுடன் கலந்த வீரம் வேண்டும். காதலும் வீரமும் இன்றி தமிழ் கலாச்சாரம் கிடையாது. இதுதான் நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. பக்தி மார்க்கம் பிறகு வந்ததுதான்‌.

உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்பதை இப்படத்தில் மீண்டும் நம்மிடம் மணிரத்னம் அறிமுகப்படுத்தினார். இதில் யாராவது சொதப்பினாலும் கனவு கலைந்துவிடும். இது சோழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் பொற்காலம். இதனை தூக்கிப்பிடிக்க வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததில் இவர்களுக்கு வாழ்த்து சொல்கின்றேன். இன்னும் பல வெற்றி மேடைகள் மணிரத்னத்திற்கு காத்துக்கொண்டு உள்ளது. அதில் எனக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்ற பேராசை எனக்கு உள்ளது.

இதுபோன்ற வரலாற்று படம் எடுக்க முடியாது என்ற பயம் எல்லோருக்குமே உண்டு. மணிரத்னத்திற்கும் அந்த பயம் இருந்திருக்கும். ஆனால் வீரம்னா என்னனு தெரியுமா பயம் இல்லாதது போன்று நடிப்பது. நானும் மணிரத்னமும் இணையும் படம் பற்றி இப்போது பேச வேண்டாம். இது பொன்னியின் செல்வன் 2க்கான மேடை” எனப் பேசினார்.

நடிகர் சரத்குமார், “பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை வெற்றிபெற வைத்த ரசிகர்களுக்கு நன்றி. எனக்கு முதல் காட்சியே ஐஸ்வர்யா ராய் உடன். அதுவும் காதல் காட்சி. எனக்கு காதல் வராது. ஐஸ்வர்யா ராய் உலக அழகி அவரது கையை பிடித்து எப்படி பேசுறது என்று தயக்கம் எனக்கு. நான் காதல் செய்து இரண்டு திருமணம் செய்தவன். என்னைப்பார்த்து உனக்கு ரொமான்ஸ் பண்ண தெரியுமா என்றார். உலக அழகியை கட்டிப்பிடிக்கும் வாய்ப்பை மணிரத்னம் கொடுத்தார் அவருக்கு நன்றி. இதை 5 பாகமாக எடுத்து இருக்கலாம். பெரிய பழுவேட்டரையர் காதலை சொல்லியிருக்கலாம். இப்பாகத்தையும் மிகப் பெரிய வெற்றி படமாக்குங்கள்” என்றார்.

நடிகர் பார்த்திபன், “பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் விழாவில் வேறு ஒரு படத்தை (நானே வருவேன்) பற்றி பேசினேன். அதனால் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் எனக்கும் உறவு முறிந்துவிட்டது. பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் எடுப்பார் என்பதை கல்கி இந்த நாவலில் நிறைய இடங்களில் மணி மணி என்று எழுதியுள்ளார்” எனப் பேசினார்.

நடிகர் சிம்பு, “எனது குரு மணிரத்னம், கமல்ஹாசன் இங்கு இருக்கிறார்கள். பதட்டமாக உள்ளது. நான் கடினமான காலகட்டத்தில் இருக்கும்போது என்னை நம்பி படம் கொடுத்தவர் மணிரத்னம். என்னை பொறுத்தவரை மணிரத்னம் சின்ன குழந்தை. ஒரு விஷயம் வேண்டுமென்றால் விடாமல் முயற்சி பண்ணி முடித்துவிடுவார். இதை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.

தற்போது நான் காலையில் படப்பிடிப்புக்கு எழுந்து போகிறேன் என்றால் அதற்கு மணிரத்னம் தான் காரணம். சுபாஸ்கரன் நல்ல மனிதர். ஏ.ஆர். ரகுமான் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. பத்து தல படம் நேற்றுதான் பார்த்தேன். பிண்ணியெடுத்துவிட்டார். அவர் தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருக்கிறார். விக்ரம் தங்கலான் படத்தில் சூப்பராக பண்ணியிருக்கிறார். மற்றவர்கள் கதாபாத்திரமும் இரண்டாம் பாகத்தில் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது.

இன்னும் இரண்டு பாகங்கள் எடுங்கள் நான் பார்ப்பேன். நாளைக்கு பத்து தல ரிலீஸ் என்பதால் பதற்றமாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன். குந்தவையா நந்தினியா என்ற கேள்விக்கு இரண்டு கண்களில் எந்த கண்ணு என்று கேட்டால் எப்படி. எந்த கண்ணை மூடவேண்டும் என்று நான் பாத்துக்கறேன்” என்றார்.

நடிகர் ஜெயம் ரவி, “பொன்னியின் செல்வனுக்காக எல்லோரும் சேர்ந்து வந்துள்ளனர். நடக்க முடியாத ஒரு விஷயத்தை நடத்தி காட்டியுள்ளார் மணிரத்னம். ஐஸ்வர்யா ராயை பார்த்தால் எனக்கு பேச்சு வராது என்று சொல்லியுள்ளேன். விக்ரம் மிகப் பெரிய உழைப்பாளி. பொறுமைக்கு அவர்தான். கார்த்தி இல்லை என்றால் இரண்டு பார்ட் நான் பண்ணியிருக்க முடியாது.

த்ரிஷா உங்களுக்கு எப்படி பெயர் வரப்போகிறது என்று பாருங்கள் என்றேன். இதுபோன்ற ஒரு த்ரிஷாவை பார்த்ததில்லை. சுபாஸ்கரன் இதுபோன்ற நிறைய படங்கள் எடுக்க வேண்டும். படம் ட்ரைலரை விட பயங்கரமாக வந்துள்ளது. என்னை பொன்னியின் செல்வனாக மறுபடியும் பார்க்க போகிறீர்கள். திரையரங்களில் சந்திப்போம். ரஜினியின் வாயில் இருந்து ஜெயம் ரவி என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

நடிகர் கார்த்தி, “கோவிட் முடிந்து திரையரங்குகளில் சென்று படம் பார்ப்பது அத்தனை மகிழ்ச்சியாக உள்ளது. பொன்னியின் செல்வன் அவ்வளவு சாதனைகள் செய்துள்ளது. நான் கைதி படப்பிடிப்பில் இருந்தபோது மணிரத்னம் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. வந்தியத்தேவனாக நடிக்கிறீயா என்றார். ஓகே சொல்லிவிட்டு மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தது. சிவாஜி வசனம் எல்லாம் மனதில் ஓடியது என்று பேசிக்காட்டினார். அவர் சொன்னதை மட்டும் செய்தால் போதும். அதிகமாக செய்யக்கூடாது. வந்தியத்தேவனாக நடித்தபோது இன்ஸ்டாகிராமில் அதிகம் மெசேஜ் வருகிறது” என்றார்.

நடிகை த்ரிஷா, “பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு குந்தவை போன்று உடை அணிந்து நிறைய போஸ்ட் எனக்கு வருகிறது. குந்தவை வைரல் ஆனதற்கு நீங்கள் தான் காரணம்.‌ உயிர் எப்போதும் உங்களுடையது தான்” என்றார்.

நடிகர் விக்ரம், “ஆதித்த கரிகாலனால் எப்படி நந்தினியை மறக்க முடியாதோ அதேபோல் என்னால் ஆதித்த கரிகாலனை மறக்க முடியாது. எனது கனவு கதாபாத்திரம் ஆதித்த கரிகாலன். என்னை தேர்வு செய்த மணிரத்னத்திற்கு நன்றி. ஏற்றுக்கொண்ட உங்களுக்கும் நன்றி. பாடல்களை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

மணிரத்னம் இருக்கின்ற காலத்தில் நானும் இருக்கிறேன் என்பது பெருமை. அவர் படத்தில் நடித்துள்ளேன் வாய்ப்பளித்ததற்கு நன்றி. சக நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. நானும் த்ரிஷாவும் அண்ணன், தங்கையாக நடிப்பது வேறு ஒரு பரிமாணம். நானும் படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்” எனப் பேசினார்.

நடிகை ஐஸ்வர்யா ராய், “வணக்கம். இங்கு வந்திருக்கிறது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் எல்லோருக்கும் நன்றி” என்று தமிழில் பேசினார். "இப்படத்தை வெற்றிப் படமாக மாற்றிய ரசிகர்களாகிய உங்களுக்கு நன்றி. நந்தினியாக முதல் முதலில் கேமரா முன் நின்றதில் இருந்து இப்போது வரை நான் உங்களது மாணவி என்பதை ஞாபகப்படுத்துகிறேன். நந்தினி அற்புதமான கதாபாத்திரம். இசை கலைஞர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய கைதட்டல் கொடுக்க வேண்டும் இவ்வளவு நேரம் நம்மை சந்தோஷப்படுத்தியதற்கு. விக்ரம் உடன் நடிப்பது பெருமை” என்றார்.

இதையும் படிங்க: 'The cholas are back': பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியானது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.