ETV Bharat / entertainment

"இயக்குநர் அமீரை இழிவுபடுத்திய ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்" - பாரதிராஜா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 10:55 PM IST

இயக்குநர் அமீரை இழிவுபடுத்திய ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்
இயக்குநர் அமீரை இழிவுபடுத்திய ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்

பருத்திவீரன் படப் பிரச்சினையில் இயக்குநர் அமீருக்கு இயக்குநர்கள் பாரதிராஜா, கரு.பழனியப்பன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சென்னை: பருத்திவீரன் படம் தொடர்பாக இயக்குநர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் உள்ள பிரச்சினை தற்போது சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அமீருக்கு ஆதரவாக தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் பாரதிராஜா தனது அறிக்கையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அதில் "ஞானவேல் அவர்களே, உங்களுடைய காணொலியை பார்க்க நேரிட்டது. பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதர பிரச்சினை மட்டுமே.. ஆனால் நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும், படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கதக்கதாகும்.

உங்களை திரைத்துறையில் அடையாளப்படுத்தி, மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவாக்கியதில் அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்துவிட வேண்டாம். பருத்திவீரன் திரைப்படத்திற்கு முன்பு அமீர் இரண்டு படம் இயக்கி, அதில் ஒன்றைத் தயாரித்தும் இருக்கிறார். அவர் உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என்போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்..!

ஏனென்றால் உண்மையான படைப்பாளிகள் சாகும் வரை கற்றுக்கொண்டே தான் இருப்பார்கள்.! நான் இப்போதும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன்..! மிகச் சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும், அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குநர் கரு.பழனியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதில் ”பருத்திவீரன் படம் பற்றியும், அமீர் பற்றியும் ஞானவேல் பேசிய பிறகு அந்தப் படம் தொடர்புடைய சசிகுமார், தயாரிப்பாளர் கணேஷ்ரகு, சமுத்திரக்கனி, பொன்வண்ணன், சுதா கொங்கரா என ஒவ்வொருவராக அமீர் பக்கம் வந்து நிற்கிறார்கள்.

சில நாட்களில் மற்றவர்களும் அமீர் பக்கம் நிற்பார்கள்… நிற்க. இந்த அறிக்கை பருத்தி வீரன் படம் பற்றி அல்ல.

பருத்திவீரன் படப் பிரச்சனை
பருத்திவீரன் படப் பிரச்சனை
ஞானவேலின் பொய்க் குற்றச்சாட்டு பற்றி.! பொன்வண்ணன் மொழியில் சொல்வதானால் ஞானவேலின் வக்கிரமான உடல் மொழி பற்றி.! எகத்தாளமாய் எப்படி ஒருவரால் இத்தனை பொய் சொல்ல முடிகிறது? அமீரை திருடன் என்றும் பொய் கணக்கு எழுதுபவர் என்றும் சொல்லுகிறாரே, நான் சொல்லுகிறேன்.

ஆறு ஆண்டு காலம் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் செயலாளராகவும், தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவராகவும், தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் இடையே சுமூகம் ஏற்பட உருவாக்கப்பட்ட ஊதியக்குழுவின் தலைமையிலும் பணியாற்றிய அமீரை பக்கத்தில் இருந்து பார்த்த நான் சொல்லுகிறேன்.

இத்தனை ஆண்டுகளில் ஒரு வேளை உணவு கூட இந்த சங்கங்களின் பணத்தில் அமீர் உண்டதில்லை. அன்று உடனிருந்த நானும் ஜனநாதனுமே சாட்சி. இந்நாள் முன்னாள் சங்க நிர்வாகிகளைக் கேட்டாலும் இதையே சொல்வார்கள்.

பருத்திவீரன் தயாரிப்பில் நூறு முரண்பாடு இருக்கலாம் ஆனால் பொதுவெளியில் ஒரு இயக்குநரை திருடன் என்றும், ஒன்றும் தெரியாதவன் என்றும், என் காசில் தொழில் பழகியவன் என்றும் character assassination செய்வது அயோக்கியத்தனம். ஞானவேலின் எள்ளல் எகத்தாள திமிர் பேட்டியில், நானும் கார்த்தியும் பருத்தி வீரனுக்கு பிறகு நிறைய படம் எடுத்து விட்டோம், 25 படங்களை கடந்து விட்டோம். ஆனால் அமீர் ஓடாத குதிரை தோற்றுப் போனவர் என்கிறார்.

அமீர் உங்களிடம் பணத்தில் தோற்றுப் போய் இருக்கலாம். ஆனால் உங்களுடைய படம் என்று நீங்கள் சொல்லும் பருத்தி வீரனை காலமும் உடன் களத்தில் பணியாற்றியவர்களும், ரசிகர்களும் அமீரின் பருத்தி வீரன் அமீரின் பருத்திவீரன் என்று சொல்லச் சொல்ல அவர் ஜெயித்துக் கொண்டிருக்கிறார் என்று பொருள்.

பருத்திவீரன் படத்தின் உயரத்தைத் தொட ஒவ்வொரு படமாக எடுத்து எடுத்து ஞானவேலும் அவரைச் சார்ந்தவர்களும் இன்று வரை தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள். காலம் அப்படித்தான் கணக்கில் வைத்துக் கொள்ளும். இப்படி பேச ஞானவேலுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? என்று கேட்டிருந்தார் சமுத்திரக்கனி.

இந்தக் கேள்வி எழும் போதே ஞானவேலின் பின்னால் சிவக்குமாரும், அவர் பிள்ளைகளும் இருப்பார்களோ என்று சந்தேகத்தின் நிழல் விழுவதைத் தவிர்க்க முடியவில்லை. நூறு குறள்கள் படித்த சிவக்குமார் தன் மகனுக்கு உலகத் தரத்தில் மாபெரும் வெற்றி படத்தைக் கொடுத்து திரை உலகில் ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த இயக்குநர் அமீருக்கு, சிவக்குமாரும் அவரைச் சார்ந்தவர்களும் திருப்பிக் கொடுத்தது என்ன?

18 ஆண்டு கால மன உளைச்சலும் திருட்டு பட்டமுமா?? நூறு குறள்கள் படித்த சிவக்குமார், "அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை" என்ற குறளையும் படித்து இருப்பார். வள்ளுவர் வாக்கு பொய்க்காது என்று அறிந்த அவர், ஞானவேலை பொதுவெளியில் இயக்குநர் அமீரிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும். சிவக்குமார் சொல்லுவார் என்று நம்புகிறேன் .! அறத்தை நம்பி செயலாற்றும், ஊடக நண்பர்களுக்கு, நன்றியும் அன்பும் கரு பழனியப்பன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த 'பருத்திவீரன்' பஞ்சாயத்து.. வாய் திறக்குமா நட்சத்திர குடும்பம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.