ETV Bharat / entertainment

PS-2வில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பற்றி ரசிகர்கள் கருத்து?

author img

By

Published : Apr 29, 2023, 10:50 AM IST

Etv Bharat
Etv Bharat

பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்தில் விக்ரமின் நடிப்பு பிரமிக்க வைப்பதாகவும் அவருக்கு ஈடுகொடுத்து நந்தினியாக ஐஸ்வர்யா ராய் வாழ்ந்துள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

சென்னை: இயக்குநர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவான பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகமாகத் திரைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். எம்ஜிஆர் தொடங்கி கமல்ஹாசன் வரை முயற்சித்தும் முடியாமல் போன இந்த பெரும் பணியை மணிரத்னம் லைகா புரொடக்சன்ஸ் உதவியுடன் சாதித்து விட்டார் எனலாம். அதற்கு இன்னொரு மிக முக்கிய காரணம் நடிகர்கள்.‌‌ இதில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் தங்களது சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளனர்.

வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், சுந்தர‌சோழனாக பிரகாஷ் ராஜ், மதுராந்தக சோழனாக ரகுமான், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் பொருத்தமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.‌ ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் நேற்று பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் வெளியானது.‌ படம் வெளியானதிலிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. முதல் பாகத்தை விட இது நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக நடிகர்களின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.‌ அதுவும் விக்ரமின் நடிப்பு பிரமிக்க வைப்பதாகவும் அவருக்கு ஈடுகொடுத்து நந்தினியாக ஐஸ்வர்யா ராய் வாழ்ந்துள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர். விக்ரமும் ஐஸ்வர்யா ராயும் கடம்பூர் மாளிகையில் சந்தித்துப் பேசும் காட்சிகள் நாவலை மிஞ்சியுள்ளதாகவும், வந்தியத்தேவன் மற்றும் குந்தவையின் காதல் காட்சிகள் மணிரத்னத்துக்கே உரியப் பாணியில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கொண்டாடப்படுகிறது.

அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவிக்கு இந்த பாகத்தில் கொஞ்சம் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அவரும் அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவல் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டதால் கதையில் வரும் சிலவற்றைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் மணிரத்னம் கூட்டணி அதனை மிக லாவகமாகக் கையாண்டு வெற்றி பெற்று விட்டதாகப் பாராட்டுகள் கிடைத்துள்ளது. ஆனாலும் நாவலைப் படித்தவர்கள் மத்தியில் இன்னமும் சில ஏமாற்றம் இருப்பதாகவும், இன்றைய தலைமுறையினர் நமது வரலாற்றைத் தெரிந்து கொள்ள இப்படம் சான்றாக இருக்கும் என்றும் பேசப்பட்டு வருகிறது. கோடை விடுமுறைக் காலம் என்பதால் எப்படியும் இந்த பாகமும் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் மற்றொரு தரப்பினர் நமது வரலாற்றை மாற்றி மணிரத்னம் படம்‌ எடுத்துள்ளதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் படத்தை சட்டவிரோதமாக வெளியிடத் தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.