ETV Bharat / entertainment

“மார்க் ஆண்டனி பட வெற்றியை அஜித்துக்கு சமர்ப்பிக்கிறேன்” - ஆதிக் ரவிச்சந்திரன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 7:47 PM IST

Mark Antony Success meet: தன்னுடைய மனநிலையை மாற்றி, தன்னால் பெரிய படம் இயக்க முடியும் என்று நடிகர் அஜித்குமார்தான் உத்வேகம் கொடுத்தார் என மார்க் ஆண்டனி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்திருந்தனர். படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படம் இதுவரை ரூ.100 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கொண்டாடும் வகையில் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி விழா, இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் வினோத் குமார், நிழல்கள் ரவி, இப்படத்தில் சில்க் வேடத்தில் நடித்த விஷ்ணுப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து மார்க் ஆண்டனி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியபோது, “ஒரு நல்ல இயக்குநர் கதை சொல்லும்போது பெரிய நடிகர்கள் ஒத்துக் கொள்வார்கள். ஆனால், எனது முந்தைய படம் சரியாக ஒடவில்லை. ஆனால், அதை பற்றி எதுவும் நினைத்துக் கொள்ளாமல் விஷால் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். தயாரிப்பாளர் வினோத் எனக்கு மோசமான படங்களை எடுத்துள்ள இயக்குநர் என்ற பெயர் இருந்தும், என்னை நம்பி ரூ.55 கோடி இந்த படத்திற்காக செலவு செய்துள்ளார்.

மேலும் நேர்கொண்ட பார்வை படம் நடிக்கும்போது எனக்கு இருந்த மனநிலையையும், அதன் பிறகு இருந்த மனநிலையும் வேறு. என்னுடைய மனநிலையை மாற்றி உன்னால் பெரிய படம் இயக்க முடியும் என்று நடிகர் அஜித்தான் உத்வேகம் கொடுத்தார். இந்த நேரத்தில் நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும், “நடிகை சில்க் ஸ்மிதாவின் கதாபாத்திரத்திற்கு நாங்கள் நிறைய பேரைத் தேடினோம். இறுதியில் விஷ்ணுப்பிரியாவை கண்டுபிடித்து அது மட்டும் போதாது என்று, சில்க் ஸ்மிதா லுக்கிற்காக கிராபிக்ஸ் செய்ய நாங்கள் நிறைய நிறுவனங்களை அணுகினோம். ஆனால், யாரும் அது முடியாத காரியம் என்று சொல்லி விட்டனர். இறுதியில் சென்னையிலேயே கிராபிக்ஸ் பணிகளை செய்தோம்” என்று பேசினார். நிகழ்ச்சியின் இறுதியில் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இதையும் படிங்க: 'சினிமாவை சொந்தம் கொண்டாடியவர்கள் காணாமல்போய் விட்டனர்' - நடிகர் விஷால்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.