ETV Bharat / entertainment

'சினிமாவை சொந்தம் கொண்டாடியவர்கள் காணாமல்போய் விட்டனர்' - நடிகர் விஷால்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 7:29 PM IST

Mark Antony Success meet: “இது‌ கலியுகம், கெட்டது செய்யத்தான் பலர் வருவார்கள், நல்லது செய்தால் தடை வரத்தான் செய்யும், சினிமாவை சொந்தம் கொண்டாடியவர்கள் காணாமல் போய் விட்டனர்” என மார்க் ஆண்டனி வெற்றி விழாவில் விஷால் பேசியுள்ளார்.

Etv Bharat சக்ஸஸ் மீட்டில் பேசிய நடிகர் விஷால்
Etv Bharat சக்ஸஸ் மீட்டில் பேசிய நடிகர் விஷால்

சக்ஸஸ் மீட்டில் பேசிய நடிகர் விஷால்

சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘மார்க் ஆண்டனி’.

இப்படம் இதுவரை ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. விஷாலின் அப்பா, மகன் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது. இப்படம், எல்லா இடங்களிலும் நல்ல வசூல் செய்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் இன்று (செப்.21) படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் வினோத் குமார், நிழல்கள் ரவி, இப்படத்தில் சில்க் வேடத்தில் நடித்த விஷ்ணுப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “மார்க் ஆண்டனி படத்தின் மூலம்‌ நான் இழந்தவற்றில் 75 விழுக்காடு எனக்கு திரும்ப கிடைத்துவிட்டது” என்றார்.

தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் விஷால், “நான் பேசத் தொடங்குவதற்கு முன்பாக முதலில் விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துவோம்” என்று மௌன அஞ்சலி செலுத்தினார். பின்னர், “ஆதிக் ரவிச்சந்திரன் உடன் படம் பண்ணுகிறேன் என்று சொல்லும்போது நிறைய பேர் எனக்கு போன் செய்து, ஏன் அவருடன் படம் பண்ணுகிறீர்கள், ரிஸ்க் எடுக்குறீர்கள் எனச் சொன்னார்கள். அப்படி சொன்ன எல்லாருமே இன்று பாராட்டுகிறார்கள். ஆதிக்கிடம் அடுத்து கதை கேட்டாலும் கேட்பார்கள். இங்கு வெற்றிதான் பேசும்” என்றார்.

2015ஆம் ஆண்டில் விநாயகர் சதுர்த்தியன்று, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படத்தை வெளியிட்டு என் படம் பாயும்புலியை காலி செய்தார், இயக்குனர் ஆதிக். 2012ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியில் எனது ‘மதகஜராஜா’ திரைப்படத்தை வெளியிட நான் முயற்சி செய்தேன். என் தரப்பு பணத்தை நான் கொடுத்துவிட்டேன்.

ஆனால் தயாரிப்பாளரிடம் எந்த ஜோஷியக்காரர்கள் சொன்னார்கள் என்று தெரியவில்லை, கடைசி வரைக்கும் பணமும் தரவில்லை, அந்த படத்தை வெளியிடவும் இல்லை. கடவுள் உனக்கான நேரம் இது இல்லை என்று சொல்லி 11 வருடம் கழித்து இன்று வெற்றியடையும் என்று இருந்திருக்கிறது.

இந்த படத்தினுடைய ஆரம்பம் எனக்கு பிடித்த நடிகர் விஜய்க்கு மிகவும் நன்றி, டீசரை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி. 16 வருடங்கள் கழித்து வெற்றி பெற்றிருக்கிறேன். ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் உன்னுடைய நேரம் இது இல்லை, உன்னுடைய நேரம் வரும் என்று நினைப்பேன். அந்த நேரம் இப்போதுதான் வந்திருக்கிறது” என்று பேசினார்.

அதன் பிறகு செய்தியாளர்கள் கேள்வி பதிலளித்த விஷால், “ஆதிக் திரைக்கதையில் எஸ்.ஜே.சூர்யா என்ற அரக்கன் தேவைப்பட்டது. நான் ஒருவனால் மட்டுமே ஒரு படத்தை எடுத்து விட முடியாது. தோல்விதான் வெற்றியை நோக்கிக் கொண்டு செல்லும். என்னை அதிகம் அறிந்து கொண்டதால்தான் ஆதிக் எனக்காக வசனங்கள் வைத்துள்ளார். இது‌ கலியுகம், கெட்டது செய்யத்தான் பலர் வருவார்கள். நல்லது செய்தால் தடை வரத்தான் செய்யும்.

இதனை கடந்து சென்றுவிட வேண்டும். ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தேர்தான் கொடுக்க வேண்டும். எனக்கு படத்தில் வருவதுபோல் டைம் ட்ராவல் போன் கிடைத்தால், பகத் சிங் உயிரிழப்பதற்கு முன் ஒருமுறை பார்த்து பேச வேண்டும் என்ற ஆசை. அவரை‌ சாவடிக்க வேண்டாம் என்று கேட்பேன். சினிமாவுக்கு நான்தான்‌ என சொந்தம் கொண்டாடியவர்கள் காணாமல் போய் விட்டனர்” என்றார். மேலும், “எனது திருமணம் கண்டிப்பாக நடக்கும், கடமைகள் இருக்கிறது முடிந்ததும் நடக்கும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அம்பானி வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. ஜவான் படக்குழு பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.