சென்னை: திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தனது 75வது படமாக ‘அன்னபூரணி - The Goddess of Food’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
சமையலை மையமாகக் கொண்ட இப்படத்தில் நயன்தாரா ஒரு சமையற்கலைஞராக தோன்றியுள்ளார். அதேநேரம், காட்சிகளின் உண்மைத் தன்மைக்காக படத்தில் உள்ள சமையல் காட்சிகளின்போது, படக்குழு உண்மையான சமையல் கலைஞரை செட்டில் வைத்திருந்துள்ளது. இப்படத்திற்காக நயன்தாரா, ஒரு சமையற்கலைஞரின் குணாதிசயங்களாக இருக்கும் பேன் ஃபிளிப்பிங் (pan Flipping), டாஸ்சிங் (Tossing) போன்ற பல நுணுக்கங்களையும் கற்றுள்ளார்.
மேலும், இப்படத்தில் ஏமாற்றும் விதமாக ஒரு ஷாட் கூட இல்லை என்றும், நயன்தாரா எந்த டூப்பும் இல்லாமல் நடித்துள்ளார் என்றும் படக்குழு உறுதிப்படுத்தி உள்ளது. மேலும், சில நாட்களில் பத்து மணிக்கு முடிய வேண்டிய படப்பிடிப்பு, நள்ளிரவு 12 மணி வரை கூட நீட்டிக்கப்பட்டுள்ளது.
அப்போது, அவரது தனிப்பட்ட வேலைகள் காரணமாக படப்பிடிப்பை அடுத்த நாள் தொடரலாம் என்று படக்குழுவினர் தெரிவித்த போதும்கூட, அதிகாலை 5 மணி வரை கூட நயன்தாரா அன்னபூரணி பட செட்டில் இருந்திருக்கிறார் என்று படக்குழு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.
மேலும் பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஜி துரைராஜ் - கலை, அருள் சக்தி முருகன் - உரையாடல்கள், பிரசாந்த் எஸ் - கூடுதல் திரைக்கதை போன்றோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.
இதையும் படிங்க: ஜோ திரைப்படம் என்னை அழ வைத்தது… இயக்குநர் சீனு ராமசாமி நெகிழ்ச்சி!