அதிரடியாக நடைபெறும் ரீ ரிலீஸ் பணிகள் - ஆளவந்தான் ட்ரெய்லர் வெளியீடு!

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Dec 2, 2023, 7:49 PM IST

Etv Bharat

Aalavandhan Trailer: கடந்த 2001ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான ஆளவந்தான் திரைப்படத்தின் ரீ ரிலீஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று படத்தில் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் தனது நடிப்பாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் பல புதுமைகளைப் புகுத்தி உள்ளார். தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது ஒரு புதுமையான விஷயங்களைச் சேர்த்து ரசிகர்களுக்கு விருந்து வைப்பவர். அந்த வகையில், இவரின் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஆளவந்தான்.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்த படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து இருந்தார். இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் படத்திற்கு சங்கர், எஸான் லாய் இருவரும் இணைந்து இசை அமைத்திருந்தனர்.

இந்த படம் வெளியான போது போதிய வரவேற்பு பெறாமல் போனது தான் உண்மை. ஆனால் படத்தில் கமல்ஹாசனின் நடிப்பும், அனிமேஷன் காட்சிகளும் பிரமிக்க வைத்தன.‌ இரண்டு வேடங்களுக்காக மொட்டை அடித்து உடல் எடை கூடிய கமல்ஹாசன், போலீஸ் கமல்ஹாசன் என வியத்தகு அளவில் தோற்றத்தில் வித்தியாசம் காட்டியிருந்தார்.

இந்நிலையில், இப்படம் தற்போது மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. புதுப் பொலிவுடன் ரீ மாஸ்டரிங் செய்யப்பட்டு, இம்மாதம் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும், தமிழ் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆயிரம் திரைகளில் இப்படத்தை வெளியிட தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டுள்ளார்.

பிரமாண்ட விளம்பரங்களுக்கு பெயர் போன தாணு, ரீ ரிலீஸ் படத்தையே புதிய படத்தின் ரிலீஸ் போல விளம்பரப்படுத்தி வருகிறார். மேலும் டீஸர், பாடல் வெளியீடு என அதகளப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், தற்போது ஆளவந்தான் படத்தின் ட்ரெய்லரும் இன்று (டிச.02) வெளியாகி உள்ளது. இது கமல்ஹாசன் ரசிகர்களை மட்டுமின்றி, சினிமா ஆர்வலர்களையும் உற்சாகமடையச் செய்துள்ளது.

மேலும், இப்படத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் பணிபுரிந்துள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற முத்து திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 80s கனவுக் கன்னி சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.