ETV Bharat / entertainment

80s கனவுக் கன்னி சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 10:04 AM IST

Silk Smitha Birthday: விஜயலட்சுமியாய் பிறந்து தன்னை தானே செதுக்கி திரையுலகில் நீங்கா இடம் பிடித்த சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாள் இன்று. இந்நாளில் அவர் குறித்து ஒரு சிறிய தொகுப்பை இந்த கட்டுரையில் காணலாம்.

silk smitha birthday special
சில்க் ஸ்மிதா பிறந்த நாள்

சென்னை: ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட விஜயலட்சுமியை வண்டிச்சக்கரம் படத்தில் சாராயம் விற்கும் சில்க்காக அறிமுகப்படுத்தியவர் நடிகர் வினு சக்ரவர்த்தி. சில்க்கின் கிறங்கடிக்கும் கண்கள், தேன் தடவிய குரல், சுண்டி இழுக்கும் அழகு, மற்றும் அசாத்திய நடிப்பு திறமையால் தமிழ் சினிமாவில் 80களில் கனவுக் கன்னியாக கொடி கட்டிப் பறந்தார்.

சில்கிற்கு அவருடைய பெற்றோர் 17 வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர். ஆனால், சில வருடங்களிலேயே அந்த உறவில் இருந்து வெளியேறிவிட்டார். பிடிக்காத வாழ்க்கை, மாமியார் கொடுமையால் சென்னைக்கு வந்துவிட்டார். அதன்பிறகு தான் அவரது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.

திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்ததன் மூலம் பெரும் ரசிகர் பட்டாளங்களை தனக்கென்று கொண்டிருந்தார் சில்க் ஸ்மிதா. சில்க்கின் பாட்டு மட்டும் போதுமானது என்று ரசிகர்கள் திரையரங்குகளில் பாதி படங்களில் வெளியேறிய சம்பவங்களும் நடந்ததுண்டு. அவருக்காக பல இயக்குநர்கள் காத்திருந்து இயக்கிய படங்களும் உண்டு.

சினிமாவில் நுழைந்த 17 வருடத்திலேயே தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் கிட்டத்தட்ட 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு படப்பிடிப்பு சமயத்தில் சில்க் கடித்து வைத்துவிட்டு போன ஆப்பிளை, ரசிகர் ஒருவர் 300 ரூபாய்க்கு ஏலம் விட்ட சம்பவமும் நடந்துள்ளது.

இவரது நடனத் திறமையால் இவர்‌ பாடி ஆடிய அத்தனை பாடல்களும் இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரிட் பட்டியலில் உள்ளது. மூன்றாம் பிறை படம் பாலு மகேந்திராவின் படங்களில் மிக முக்கியமான படம். கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீ தேவி இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருந்தாலும் படத்தின் கமர்ஷியல் வெற்றிக்கு பாலு மகேந்திராவுக்கே சில்க் தேவைப்பட்டார்.

அப்படத்தில் இடம்பெற்ற பொன்மேனி உருகுதே என்ற பாடலுக்காகவே கூட்டம் கூடியது அக்காலத்தில். இன்றும் அந்த பாடலை கொண்டாடதவர்கள் யாருமில்லை. இதே நிலைதான் மற்ற படங்களுக்கும் சில்க் இருக்கிறார் என்றால் அப்படத்துக்கு அக்காலத்தில் தனி மவுசு இருந்தது.

நீங்கள் கேட்டவை படத்தில் 'அடியே மனம் நில்லுனா நிக்காதடி', சகலகலா வல்லவன் படத்தில் 'நேத்து ராத்திரி', அமரன் படத்தில் 'வெத்தல போட்ட சோக்குல', 'ஆடி மாச காத்தடிக்க' என பட்டியல் நீளும். கவர்ச்சி நாயகியாக நடித்து வந்தாலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து நல்ல நடிகை என பெயர் எடுக்க வேண்டும் என்பதே சில்க்கின் ஆசையாக இருந்துள்ளது.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தில் தியாகராஜனின் மனைவியாக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.‌ கோழி கூவுது உள்ளிட்ட படங்களிலும் இவரது நடிப்பு ரசிக்க வைத்தது. இப்படி திரைத்துறையில் நுழைந்து குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் சில்க் ஸ்மிதா என்றால் அது மிகையாகாது.

இவரது கால்ஷீட்டுக்காக திரையுலகமே ஒரு காலத்தில் காத்துக்கொண்டு இருந்தது. ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமின்றி நல்ல நடிகை என்றும் பெயரெடுத்தவர். என்னதான் புகழின் உச்சத்தில் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கை என்பது அவருக்கு நிம்மதியாக அமையவில்லை.

தான் ஒரு போதை பொருளாக மட்டும் தான் இந்த சமூகத்தில் பார்க்கப்படுகிறேன் என உணர்ந்த அவர் மிகவும் வருந்தினார். மலையளவு நம்பிக்கை வைத்தவரும் ஏமாற்றிவிட்டதாக எண்ணிய அவர் தனது 35 வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார்.‌ இன்று வரை அவரது மரணத்தின் மர்மம் விலகவில்லை.

புகழின் உச்சியில் இருக்கும் போதே தனக்கு நிகழ்ந்த மோசமான அனுபவங்களால் தற்கொலை செய்து கொண்ட சில்க்கின் நிலை யாருக்கும் வரக்கூடாது. இறந்து 27 ஆண்டுகள் கடந்தாலும் இப்பேதும் ரசிகர்கள் அவரை மறக்கவில்லை. இன்று சில்க்கின் பிறந்தநாள். சமூக வலைத்தளங்களில் இன்றும் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இதுதான் ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் பாராட்டு.

சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படத்தில் சில்க் போன்ற கதாபாத்திரம் ஒன்று இருந்தது.‌ அந்த கதாபாத்திரம் திரையில் வரும் போது ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவருக்கான மரியாதையை கொடுத்தனர். இறந்தாலும் நம் எல்லோர்‌ மனதிலும் சில்க் ஸ்மிதா வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

இதையும் படிங்க: பனித்துளியாய் பளபளக்கும் நடிகை த்ரிஷா... இணையத்தை கலக்கி வரும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.