ETV Bharat / elections

'நாசகார ஆலை முற்றிலும் அகற்றப்பட வேண்டும்'; முத்துநகர மக்களின் தேர்தல் தேவை?

author img

By

Published : Feb 10, 2021, 10:59 PM IST

Updated : Feb 12, 2021, 9:56 PM IST

கடந்த 1990களுக்குப் பின்னர் வந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தூத்துக்குடியில் தவிர்க்கமுடியாத அரசியல் பிரச்னையாக மாறியிருக்கிறது வேதாந்தாவின் ஸ்டெர்லைட் தாமிர ஆலை. இதுவரை நடந்த தேர்தல்களில் ஆலையை மூடுவோம் என்று சூளுரைத்த அரசியல் கட்சிகளின் முன்னால், இந்தத் தேர்தலில் வேறு விதமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னை. அதை அலசமுயல்கிறது இக்கட்டுரை...

ஸ்டெர்லைட் பிரச்னை சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்குமா
ஸ்டெர்லைட் பிரச்னை சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்குமா

தூத்துக்குடி: கடந்த மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக 99 நாட்கள் அறவழிப்போராட்டம் நடத்தி வந்த பொதுமக்கள், 100ஆவது நாளில் ஆலையை நிரந்தரமாக மூடி நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கத் திட்டமிட்டிருந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்த ஊர்வலமாக வந்து இணைந்து மனு கொடுக்க வந்த மக்கள் பேரணியில் கலவரம் வெடிக்க, அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பொது மக்களில் 13 பேர் கொல்லப்பட்டனர்.


அதுவரை மாவட்டப் பிரச்னையாக இருந்த ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், துப்பாக்கிச்சூட்டிற்குப் பின்னர், தேசியப் பிரச்னையாகி அனைவரின் கவனத்தையும் தூத்துக்குடி பக்கம் குவிய வைத்தது.

சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்குமா ஸ்டெர்லைட் பிரச்னை?
துப்பாக்கிச்சூடு நடந்ததே தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டதாகத் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக அரசு, அதே ஆண்டு மே 28ஆம் தேதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்மையைக் காரணம் காட்டி ஆலைக்கு சீல் வைத்து மூடியது. துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையம் 24ஆம் கட்ட விசாரணையைத் தாண்டி, தொடர்ந்து விசாரித்து நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின், அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தை வேதாந்தா நிறுவனம் நடத்தி வரும் நிலையில், தூத்துக்குடியில் ரூ.100 கோடி செலவில் பல்வேறு சமூகநலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இவைகளை எதிர்த்து களத்திலும், நீதி மன்றத்திலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டாக்காரர்கள் மீது கண்ணீர்  புகைகுண்டு வீசும் காவல்துறை
போராட்டாக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசும் காவல்துறை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு கலவரம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு கலவரம்

இதற்கிடையில், கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் நட்சத்திர வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து வந்த இரண்டு சட்டப்பேரவைத் இடைத்தேர்தலில், விளாத்திகுளம் தொகுதியில் அதிமுகவும், ஸ்டெர்லைட் ஆலை இருக்கின்ற ஒட்டப்பிடாரம் தொகுதியில் திமுகவும் வெற்றி பெற்றது. இந்தப் பின்னணியில் வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், பிரதான அரசியல் கட்சிகளின் முன் பல்வேறு சாவல்களை பரப்பி வைத்திருக்கிறது இந்தத் தனியார் தாமிர ஆலை.

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்ட பின்னர், வ.உ.சி. துறைமுகத்தின் வருடாந்திர இறக்குமதி செயல்பாடுகள் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு குறைந்து, வருவாய் இழப்பையும் சந்தித்தது. ஸ்டெர்லைட் ஆலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த தாமிரதாது மணலும், ஆலையின் அனல் மின்நிலையத்திற்கான நிலக்கரி இறக்குமதி நிறுத்தப்பட்டதுமே வருவாய் இழப்புக்கு முக்கிய காரணம்.

அதே போல, நேரடியாக உள்ளூர் மக்களுக்கு ஆலை நிர்வாகம் அதிக வேலை கொடுக்காத போதும், ஆலையை நம்பி இயங்கி வந்த துணை தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு தற்காலிக வேலையின்மையும், பணப்புழக்கத்தில் தேக்கமும் ஏற்பட்டது. இந்தத் துணைத் தொழில்களின் வேலையிழப்பு, பொருளாதாரத்தில் மட்டும் இல்லாமல், சமூக காரணிகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.

தென்தமிழ்நாட்டில், தூத்துக்குடி வளர்ந்து வரும் தொழில்நகரமாக அறியப்பட்டாலும், இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள், மரபு தொழில்களான வேளாண்மை, மீன் பிடித்தொழில்களையே விரும்புகிறவர்களாக இருக்கின்றனர். இதனைத் தவிர உப்பு உற்பத்தி, பனைசார் தொழில்களும் சொல்லும் படியாக இல்லை என்பது இம்மாவட்ட மக்களின் பெருஞ்சோகம்.

தொடர்ந்து நிலவிவரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு
தொடர்ந்து நிலவிவரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு
தனியார் அனல் மின்நிலையங்கள், ஜவுளிப்பூங்கா, ஒருங்கிணைந்த உணவுப்பூங்கா என திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவைகள் கடந்த காலத்தேர்தல் வாக்குறுதிகளாய் மட்டுமே நீடித்து வருகின்றன. இதுவரை நடந்த தேர்தல்களில் வாக்காளர்களிடம் பெரிதாகப் படம்பிடித்துக் காட்டப்பட்ட ஸ்டெர்லைட் பூதம், இம்முறை காணாமல் போயிருக்கும் நிலையில், தங்களின் பழைய தேர்தல் வாக்குறுதிகளையும், மாவட்டத்தின் தொழில் தேவைகளையும் நிறைவேற்றும் கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.வான், கடல், தரை வழி என, மும்மார்க்கப் போக்குவரத்து வசதிகளையும் கொண்ட தூத்துக்குடியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு, மக்கள் என்றும் எதிராக இருந்தது இல்லை. ஆனால் வளர்ச்சித் திட்டங்கள், தங்கள் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா கடல் வளம், தாமிரபரணி நதி போன்ற தனித்துவம் மிக்க சூழியலைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என, ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்கள் உரக்கச் சொல்லி, உறுதியாக வெளிப்படுத்திவருகின்றனர். இதனை எந்த அரசியல் கட்சி வாக்குறுதியாக கொடுத்து நிறைவேற்றுகிறதோ அந்தக் கட்சி தென்மாவட்டங்களில் தன்னை வேரூன்றிக் கொள்ளத் தயாராகும் என்றால் அது மிகையில்லை.

இதையும் படிங்க: திமுகவை வீழ்த்தக் கூடிய ஒரே சக்தி எடப்பாடி - எஸ்.பி.வேலுமணி

Last Updated : Feb 12, 2021, 9:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.