ETV Bharat / crime

’கூகுள் பே’ மூலம் கொள்ளை: 3 பேர் கைது!

author img

By

Published : Nov 18, 2021, 1:20 PM IST

google pay theft, avadi crime, kalaignar nagar, avadi news, கூகுள் பே, ஆவடி குற்றம், கலைஞர் நகர், ஆவடி செய்திகள், avadi theft, ஆவடி கொள்ளையர்கள், avadi thieves
கூகுள் பே மூலம் கொள்ளை

சென்னையில் இளைஞரை மறித்து ’கூகுள் பே’ மூலம் பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்த மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை: குன்றத்தூர் கலைஞர் நகரைச் சேர்ந்த அஜித் குமார் (24) தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.

லிஃப்ட் கொடுத்து சிக்கிய நபர்

இந்நிலையில், வழக்கம்போல் இவர் பணி முடிந்து நேற்று முன் தினம் (நவ.16) மாலை பூவிருந்தவல்லிக்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ஆவடியை அடுத்துள்ள ஆயில்சேரி பகுதியில் ஒரு டிப் டாப் உடையணிந்த நபர் லிஃப்ட் கேட்டுள்ளார்.

இந்நிலையில், அஜித்குமார் அந்த நபரை ஏற்றிக்கொண்டு சில கிலோமீட்டர் சென்றுள்ளார். அப்போது சாலையில் இரண்டு இளைஞர்கள் அவர்களை வழிமறித்துள்ளனர். தொடர்ந்து வண்டியை நிறுத்தியதும் திடீரென இருவர் வந்து அவர்களை சூழ்ந்து கொண்டனர்.

’கூகுள் பே’ மூலம் கொள்ளை!

தொடர்ந்து லிஃப்ட் கேட்டு வந்த நபர் உள்பட மூவரும் சேர்ந்து அந்த இளைஞரை சரமாரியாகத் தாக்கி அவர் அணிந்திருந்த மோதிரம், ஒரு பவுன் மதிப்பிலான தங்க செயின், கைப்பேசி ஆகியவற்றை பறித்துள்ளனர். மேலும், ’கூகுள் பே’ செயலி மூலம் தங்களது அக்கவுண்டுக்கு பணம் அனுப்புமாறு மிரட்டியுள்ளனர்.

இதில், பயத்தில் ’கூகுள் பே’ பாஸ்வேர்டை அஜித்குமார் கூறிய நிலையில், அவரது வங்கிக்கணக்கில் இருந்து 13,000 ரூபாயை தங்களது வங்கிக் கணக்குக்கு அந்நபர்கள் மாற்றியுள்ளனர்.

3 பேர் கைது

இந்நிலையில், இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் நேற்றிரவு 10 மணியளவில் அஜித் குமார் புகாரளித்தார். கூகுள் பேவில் அவர் பணம் அனுப்பிய எண், வங்கிக்கணக்கை கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரையும் ஏழு மணி நேரத்தில் கைது செய்த காவல் துறையினர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அம்பத்தூர் துணை ஆணையர் மகேஷிடம் ஒப்படைத்தனர்.

வங்கிக்கணக்கு மூலம் சிக்கிய கொள்ளையர்கள்

’கூகுள் பே’ பணப்பரிமாற்றம் செய்த வங்கிக்கணக்கு மூலம் காவல் துறையினர், கொள்ளையர்களை எளிதாக அடையாளம் கண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆவடி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (24), ஓலா ஆட்டோ ஓட்டுநர் ஹரிதாஸ் (23) அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனசேகர் (23) ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து கைப்பேசி, பணம், இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மூவரையும் பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மாநில குழந்தைகள் பாதுகாப்புச் சங்கத்திற்கு ரூ. 1.29 கோடி - தமிழிசை ஒப்புதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.