சீட்டு மோசடி... சிக்கவைத்த தடுப்பூசி தகவல்: 2 ஆண்டுகளுக்குப் பின் பெண் கைது!

author img

By

Published : Nov 25, 2021, 11:04 AM IST

சீட்டு மோசடி

சென்னையில் சீட்டு மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் தேடப்பட்ட பெண்ணை, கரோனா தடுப்பூசி போடும்போது, கொடுக்கப்பட்ட ஆதார் ஆவணம் மூலம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

சென்னை: கொடுங்கையூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பிரேமா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சசிகலா, ஈஸ்வரி ஆகிய இருவரும் சேர்ந்து சீட்டு நடத்தி பலரிடம் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாகப் புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக ஈஸ்வரியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சசிகலா கொடுங்கையூரில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாக இருந்தார்.

சுகாதாரத் துறை உதவியும்... கேபிள் ஆப்பரேட்டரின் தகவலும்...

சசிகலா கடந்த இரண்டு ஆண்டுகளாக உறவினர்களையோ, நண்பர்களையோ தொடர்புகொள்ளவில்லை. அவருக்கு செல்போன், லேண்ட்லைன் போன்ற தொடர்பு எண் எதுவும் இல்லாத காரணத்தினால், அவரைக் கண்டுபிடிப்பதில் காவல் துறையினருக்குச் சவாலாக இருந்தது.

இதனையடுத்து அவர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை செய்ய ஆரம்பித்தனர். அந்த அடிப்படையில் சுகாதாரத் துறை உதவியுடன் காவல் துறையினர் தேடியதில் காஞ்சிபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சசிகலா கரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்டது தெரியவந்தது.

சீட்டு மோசடி... சிக்கவைத்த தடுப்பூசி தகவல்
சீட்டு மோசடி... சிக்கவைத்த தடுப்பூசி தகவல்

உடனடியாகத் தனிப்படை ஒன்று காஞ்சிபுரத்தில் ஒரு வாரம் தங்கி இருந்தது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சசிகலாவின் புகைப்படத்தைக் காட்டி தேடுதல் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர். இந்த நிலையில், கேபிள் ஆப்பரேட்டர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சசிகலாவை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சிக்கவைத்த தடுப்பூசி தகவல்

கைதுசெய்யப்படும்போது சசிகலா மிகவும் மெலிந்த தேகத்துடன் ஆள் அடையாளம் தெரியாததுபோல் இருந்துள்ளார். இரண்டு ஆண்டுக்கு முன்பு கிடைத்த பழைய புகைப்படத்தை வைத்தே காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போது கொடுக்கப்பட்ட ஆதார் ஆவணத்தின் மூலம் சசிகலாவை சாதுரியமாகக் கைதுசெய்த மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜேஷ் கண்ணாவை உயர் அலுவலர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

இதையும் படிங்க: Viral Video: கத்தியுடன் கலாட்டா செய்த இளைஞர்கள் - விரட்டிப் பிடித்த காவலர்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.