ETV Bharat / city

தனி மனித இடைவெளி கடைபிடித்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமுமுக ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jun 2, 2021, 3:25 PM IST

Updated : Jun 2, 2021, 5:58 PM IST

திருச்சி: குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதை எதிர்த்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமுமுக ஆர்ப்பாட்டம்
தமுமுக ஆர்ப்பாட்டம்

கரோனா பேரிடர் காலத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்துவதைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி, பாலக்கரை ரவுண்டானாவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முகமது ராஜா தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் ஷபியுல்லா கான் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலர் இப்ராஹிம், மாவட்டப் பொருளாளர் அஷ்ரப், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் தனி மனித இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மாவட்டத் தலைவர் முகமது ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், "குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்து குடியேறி வசித்துவரும் முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டும் இந்தியக் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு 1955ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வெளியிடுவதாக கூறப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு இதுவரை விதிகள் எதுவும் வகுக்கப்படவில்லை.

1955ஆம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையிலேயே தனது மதவாத சதித் திட்டத்தை நிறைவேற்ற பாஜக அரசு முனைந்துள்ளது. பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவும் போராடியது. இந்தச் சூழ்நிலையில் கரோனா தொற்று அபாயம் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைகளுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற மத்திய மோடி அரசு முன்வந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. அதனால் மத்திய அரசு கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சந்தித்துள்ள படுதோல்வியை மறைப்பதற்காக இந்த மதவாத சட்டத்தை நடைமுறைப்படுத்தி, குழப்பத்தை ஏற்படுத்தி, பிரச்சினையை திசைத் திருப்ப முயல்கிறது. இதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதேபோல் திருச்சி மாவட்டத்தில் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது" என்றார்.

Last Updated : Jun 2, 2021, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.