அண்ணல் அம்பேத்கரின் கூற்றை திருமாவளவன் ஏற்கிறாரா? மாநில பாஜக துணைத் தலைவர் கேள்வி

author img

By

Published : Sep 7, 2022, 4:46 PM IST

Etv Bharat

விநாயகர் சதுர்த்தி குறித்து அவதூறாகப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசனை கைது செய்யவேண்டுமெனவும்; அண்ணல் அம்பேத்கரின் கூற்றை திருமாவளவன் ஏற்பாரா? எனவும் பாஜக மாநில துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி: விநாயகர் சதுர்த்தி குறித்து அவதுறாகப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனை கைது செய்யவேண்டும் எனவும்; பொது சிவில் சட்டம் வேண்டும், மொழிவாரி மாநிலம் நாட்டிற்குக் கேடு விளைவிக்கும் என அண்ணல் அம்பேத்கர் கூறியதை விசிக தலைவர் திருமாவளவன் ஏற்பாரா? எனவும் பாஜக மாநில துணைத்தலைவர் திருப்பதி நாராயணன் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி நடைபயணம்-பாஜகவுக்கே வெற்றி: திருச்செந்தூரில் புதிய மார்க்கெட் அமைக்கப்படும் இடத்தைப் பார்வையிட்டு அங்குள்ள வியாபாரிகளின் குறைகளைக்கேட்டறிந்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் திருப்பதி நாராயணன், இன்று (செப்.7) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், 'ராகுல் காந்தி இந்தியா முழுவதும் மேற்கொள்ளும் நடைபயணம், பாரதிய ஜனதா கட்சிக்கு இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றியைத்தான் தரும்.

தமிழ்நாடு நிதியமைச்சருக்கு பொருளாதாரம்? பெட்ரோல், டீசல் விலையைக் கடந்த சில மாதங்களில் ரூ.15 வரை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ரூ.5 குறைப்போம் என சொல்லிய திமுக ஏன் இதுவரை குறைக்கவில்லை, சொன்னதை செய்யவில்லை. ஒன்றரை ஆண்டுகளில் திமுக சாதித்தது என்ன, இதுவரை எந்த உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்யவில்லை. அதனால், தான் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பொருளாதாரம் தெரியவில்லை.

இடுகாட்டில் காய்கறிச் சந்தையா? நாள்தோறும் வெளியூர்களில் இருந்து சுமார் 30,000 பேர் வந்து செல்லக்கூடிய திருச்செந்தூரில் எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. இந்த அரசாங்கம் எல்லாவற்றிலும் தோல்வி அடைந்த அரசாங்கமாக உள்ளது. திருச்செந்தூர் நகராட்சியில் எரி தகன மேடை அருகே தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டு வருகிறது. உணவுக்காக காய்கறி வாங்க செல்லக்கூடியவர்கள். இங்கு எப்படி செல்வார்கள். அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் செல்வாரா? ' எனக் கேள்வி எழுப்பினார்.

அண்ணல் அம்பேத்கரின் கூற்றை திருமாவளவன் ஏற்கிறாரா? மாநில பாஜக துணைத் தலைவர் கேள்வி

மாற்றிட கோரிக்கை: 'அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் அவரது தொகுதிக்கு நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. ஏனென்றால் திமுகவினரிடம் நல்லதை எதிர்பார்க்க முடியாது. ஆனால், துரோகம் செய்யாமல் இருந்தால் போதும். திருச்செந்தூர் நகராட்சி சார்பில் தகன மேடை அருகில் தற்காலிக மார்க்கெட்டை அமைக்காமல், மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும்.

ரூ.1000 தரும் அரசே! மதுக்கடைகளை மூடுக: கடந்த சில நாட்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி பற்றி கொஞ்சம் கூட பொது அறிவு இல்லாமல், தரம் தாழ்த்திப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.

பெண்கள் மீது அக்கறை உள்ள தமிழ்நாடு அரசு மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்குவதற்குப் பதிலாக மதுபான கடைகளை மூட வேண்டும். அதிகமாக இளம் பெண் விதவைகள் தமிழ்நாட்டில் உள்ளார்கள் என நாங்கள் சொல்லவில்லை. கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து குற்றங்கள் அதிகமாக நடந்து வருகிறது. மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதற்கு அரசு மதுபானங்களை விற்பது தான் காரணம் இதனை மாற்றிக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் மாற்றப்படுவீர்கள்.

திருமாவளவனிடம் கேள்வி: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்திய காங்கிரஸ் கட்சியுடன் ஏன் திருமாவளவன் கூட்டணி வைத்துள்ளார். பொது சிவில் சட்டம் வேண்டும் என அண்ணல் அம்பேத்கர் சொன்னார்; மொழி வாரியான மாநிலங்கள் இந்த நாட்டிற்கு கேடானது எனவும் சொன்னார். இதனை திருமாவளவன் ஏற்றுக்கொள்வாரா? திராவிட மாடல் ஆட்சி என்றால் லஞ்சம், ஊழல் இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை' எனக் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: ‘தலைவன் ஒருவன் தான் என்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்’ - சசிகலாவுடன் ஈபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தை முயற்சி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.