திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்: முத்துநகருக்கு ரெட் அலர்ட்!

author img

By

Published : Nov 26, 2021, 11:24 AM IST

்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குள் மழை வெள்ளம் புகுந்ததில் சுற்றுப்பிரகார மண்டபம், நாழி கிணறு, முடிகாணிக்கை செலுத்துமிடம், கடற்கரை உள்ளிட்ட இடங்கள் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.

தூத்துக்குடி: வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்களில் ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்தது. இதைத் தொடர்ந்து தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாகப் பரவலாக மழை பெய்துவருகிறது.

இந்நிலையில் நேற்று (நவம்பர் 25) காலை முதலே தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் இடைவிடாது பரவலாக கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சி அளித்தது. மாநகராட்சியின் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையத்தில் தேங்கிய மழை வெள்ளத்தால் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நிவாரண முகாம்களில் அனைத்து வசதிகளும் தயார்!

தூத்துக்குடியில் தொடரும் கனமழையினால் தூத்துக்குடி - திருநெல்வேலி இடையிலான சிறப்பு ரயில் ரத்துசெய்யப்பட்டது. மேலும் தூத்துக்குடியிலிருந்து மைசூரு செல்லும் விரைவு வண்டி, சென்னை செல்லும் முத்துநகர் விரைவு வண்டி உள்ளிட்ட ரயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது.

மழை வெள்ளம்
மழை வெள்ளம்

ஒட்டப்பிடாரம் தாலுகாவுக்குள்பட்ட வாலசமுத்திரம் தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரால் இரு கிராமங்களுக்கு இடையிலான இணைப்புத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கரையோரம் வசிக்கும் மக்களை கயிறுக்கட்டி பாதுகாப்பான பகுதிக்கு மீட்புப் படையினர் மீட்டுக் கொண்டுவந்து நிவாரண முகாம்களில் தங்கவைத்துள்ளனர்.

மழை வெள்ளத்தால் வெள்ள நீர் சூழ்ந்து வீடுகளை இழந்த மக்கள் ஏரல், தேமானூர், நாசரேத், திருவைகுண்டம், முள்ளக்காடு, காயல்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிவாரண முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரண முகாம்களில் உணவு, உடை, மின்சாரம், மருந்து - மாத்திரைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் செய்துகொடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு புகுந்த வெள்ளம்

திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழை வெள்ளம்
திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழை வெள்ளம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மழை வெள்ளம் புகுந்ததில் சுற்றுப்பிரகார மண்டபம், நாழி கிணறு, முடிகாணிக்கை செலுத்துமிடம், கடற்கரை உள்ளிட்ட இடங்கள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இந்நிலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 26) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: Rain Update: எத்தனை மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.