ETV Bharat / city

விவசாயிகள் மீது அக்கறை இல்லாத அரசு- திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு!

author img

By

Published : Dec 5, 2020, 2:45 PM IST

விவசாயிகளுக்கு ஆதரவாக தென்காசியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்
விவசாயிகளுக்கு ஆதரவாக தென்காசியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்

திருநெல்வேலி: வேளாண் திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் விவிடி சந்திப்பு அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கீதா ஜீவன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன், "மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டத்தில் அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் இருந்து உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு வகைகள் உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன இவை விவசாயிகளுக்கும், விவசாய நலனுக்கும் எதிரானது. ஏனெனில் அத்தியாவசிய பொருள்களின் பட்டியலில் இவை இருந்தால் மட்டுமே இந்தப் பொருள்களை பதுக்க முடியாது.

அத்தியாவசிய பட்டியலில் இடம்பெறாத பொருள்களை அளவே இல்லாமல் டன் கணக்கில் இறக்குமதி செய்து பதுக்க முடியும். நன்கு விலை உள்ள சமயத்தில் இந்த பொருள்களை மார்க்கெட்டில் அதிக லாபத்திற்கு விற்று தனியார் பெரும் முதலாளிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் லாபம் பெற முடியும். இதற்கு வழிவகுப்பதற்காகவே மத்திய அரசு வேளாண் திருத்தச்சட்டத்தில் அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் இருந்து உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு போன்றவற்றை நீக்கியுள்ளது.

இந்த புதிய வேளாண்மை திருத்த சட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசும் ஆதரவு வழங்கியுள்ளது. விவசாயிகளின் நலனில் அக்கறை உள்ள அரசாக செயல்படுகிறது என்று கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி அரசு உண்மையில் விவசாயிகளின் மீது எந்த அக்கறையும் கொள்ளவில்லை. விவசாயிகளின் மீது அக்கறை இருந்திருந்தால் சேலம் எட்டு வழி சாலைக்காக விவசாயத்தை அழித்து வலுக்கட்டாயமாக நிலத்தை பறிக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. எனவே விவசாயிகளின் மீது அக்கறை இருப்பது போன்று மத்திய, மாநில அரசுகள் மக்களை ஏமாற்றுகின்றனர். இதற்கெல்லாம் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் கொடுப்பார்கள்" என்றார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக ஆர்ப்பாட்டம்

இதேபோல், தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் டெல்லியில் நடைபெறும் விவசாயிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கையில் கருப்பு கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி கண்டன கோஷம் எழுப்பட்டது.

விவசாயிகளுக்கு ஆதரவாக தென்காசியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்
விவசாயிகளுக்கு ஆதரவாக தென்காசியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்

இதையும் படிங்க: 'வணக்கம் டா மாப்ள' ஆஸ்திரேலியாவிலிருந்து வார்னர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.