கடந்த 2019-2020ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தெரிவித்து நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி, புதிதாக அருங்காட்சியகம் அமைக்க முதல்கட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
புதிதாக அமையவிருக்கும் அருங்காட்சியகத்துக்காக இடத்தை தேர்வுச் செய்யும் பணியில் திருச்சி மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையிலான குழு இரண்டாம் கட்ட ஆய்வை மேற்கொள்ள இன்று மீண்டும் ஆதிச்சநல்லூர் வந்தடைந்தனர்.
அங்கு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபால கிருஷ்ணனோடு கலந்தாலோசித்த ஆய்வுக்குழு, அதனைத் தொடர்ந்து ட்ரோன் மூலம் அருங்காட்சியகம் அமையவிருக்கும் 114 ஏக்கர் நிலத்தை ஆய்வு செய்தனர்.
கொற்கை அருகே உள்ள அகரம், மாறமங்கலம், ஆறுமுகமங்கலம் ஆகிய இடங்களிலும், ஆதிச்சநல்லூரில் கால்வாய் மற்றும் புளியங்குளம் பகுதியிலும, சிவகளையை அடுத்த சிவகளை செக்கடி, ஸ்ரீமூலக்கரை, பேட்மாநகரம், பேரூர் திரடு, வெள்ளி திரடு, பரக்கிராமபாண்டி, பொட்டல் கோட்டை திரடு, ஆவரங்காடு உள்ளிட்ட பகுதியில் அகழாய்வு செய்ய மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.
இந்த ஆய்வு நிறைவடையும்போது, பொருநை (தாமிரபரணி) ஆற்று நாகரிகம் குறித்த பல உண்மைகள் வெளிவருமென வரலாற்று ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
மத்திய தொல்லியல் துறையினரின் ஆய்வுப்பணிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க : 2000 டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பிவைப்பு