ETV Bharat / city

செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழனின் வரலாற்று பக்கம்

author img

By

Published : Aug 12, 2022, 4:19 PM IST

Updated : Aug 12, 2022, 7:44 PM IST

VO Chidambaram Pillai
VO Chidambaram Pillai

நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாட்டத்தையொட்டி கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படும் வ உ சிதம்பரனாரின் அரும்பெரும் சுதந்திர போராட்ட வரலாற்றை நினைவில் கொள்வோமாக.

தூத்துக்குடி: கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படும் வ உ சிதம்பரனார் துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் 1872ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை உலகநாதன் பிள்ளையைப் போலவே இவரும் சட்டம் பயின்று புகழ்பெற்ற வழக்கறிஞரானார். சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்கு செல்லும் ஏழை எளிய மக்களுக்காக நீதிமன்றங்களில் வாதாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். நாளடைவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பல போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். பொது கூட்டங்கள், பத்திரிகைகள் மூலம் மக்களிடையே சுதந்திர உணர்வை விதைத்தார்.

இவரது போராட்ட குணத்தையும், நாட்டின் மீது கொண்ட வியத்தகு பற்றையும் கண்ட தலைவர்கள் அவரை ‘வந்தே மாதரம் பிள்ளை ‘ என்றும் அழைத்தனர். 1905ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டு, முழு முயற்சியாக ஆங்கிலேயர்களை எதிர்க்கத் தொடங்கினார். இதனிடையே அவருக்கு பால கங்காதர திலகர், அரபிந்தோ கோஷ் போன்ற சுதந்திர போராட்ட தலைவர்களின் நட்பும் கிடைத்தது.

ஆங்கிலேயே கப்பல் கம்பெனிகள் மூலம் இலங்கை கடலோரங்களில் இயக்கப்படும் கப்பல்களில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்பட்டன. அதோடு கடல் வாணிபம், போக்குவரத்து முழுவதும் ஆங்கிலேயர்களால் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு வ உ சிதம்பரனார் ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார். இதனை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தினார். இறுதியாக கப்பல் நிறுவனம் தொடங்க முடிவு செய்தார்.

ஆனால், அவருக்கு போதுமான நிதி கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் தனது சொத்துக்களை முழுவதும் விற்று, அரபிந்தோ கோஷ் மற்றும் பால கங்காதர திலகர் உதவியுடன் 1906ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்’ கப்பல் நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனத்தின் மூலம் எஸ்.எஸ். காலியோ, எஸ்.எஸ். லாவோ என்னும் இரண்டு நீராவி கப்பல்களை வாங்கினார். தூத்துகுடி-இலங்கை இடையே போக்குவரத்தை தொடங்கினார். பொதுமக்களிடையே வ உ சி கப்பல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதனால் ஆங்கிலேய கப்பல்களில் பயணக் கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டது. இருப்பினும் ஆங்கிலேயே கப்பல்களுக்கு பயணிகள் செல்லவில்லை. ஆங்கிலேயே கப்பல்களுக்கு இணையாக தமிழ்நாட்டில் உள்நாட்டு கப்பல் போக்குவரத்து நடந்துகொண்டிருக்கும் செய்தி நாடு முழுவதும் பரவுகிறது. இதனால் ஆங்கிலேயர்கள் கப்பல் பயணம் இலவசம் என்று அறிவித்துவிடுகின்றனர். இதன்காரணமாக வஉசியின் கப்பல் நிறுவனத்துக்கு லாபம் கிடைக்கவில்லை. நாளடைவில் மூடும் சூழல் ஏற்படுகிறது. இருப்பினும் போக்குவரத்தை தொடர்ந்தார்.

இதனை பொறுக்க முடியாத ஆங்கிலேய அரசு 1908ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டி வஉசியை கைது செய்தது. இந்த வழக்கில் அவருக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின் மேல்முறையீடு செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக தண்டனை குறைக்கப்பட்டது. சிறையில் அவருக்கு கடுமையான பணிகள் கொடுக்கப்பட்டன.

மாடுகளைக் கட்டி இழுக்கும் செக்கை, இழுக்க வைத்து கொடுமை படுத்தப்பட்டார். இந்த செய்தி மக்களிடையே பரவி செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்பட்டார். இதையடுத்து 1912ஆம் ஆண்டு விடுதலையானார். அப்போது அவருக்கு ஏராளமான கடன்கள் பாக்கியிருந்தன. இவற்றை செலுத்த முடியாமல், வறுமையில் வாழ்ந்து வந்தார். 1930ஆம் ஆண்டிலிருந்தே அவருக்கு உடல் நலிவுற்றது. அடுத்தடுத்த ஆண்டுகளில் படுக்கையில் கிடத்தப்பட்டார். தூத்துக்குடியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில் 1936ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி உயிரிழந்தார். ஆனால் அவரது சுதந்திர தாகம் உயிர்ப்புடனேயே இருக்கிறது.

இதையும் படிங்க: 75ஆவது சுதந்திர தினம்: கோவை மண்ணின் விடுதலைப் போராட்ட தடங்கள்

Last Updated :Aug 12, 2022, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.