காதல் விவகாரம்: நெல்லையில் அரசியல் பிரமுகர் கழுத்தறுத்து கொலை

author img

By

Published : Apr 17, 2022, 7:57 AM IST

அரசியல் பிரமுகர் கழுத்தறுத்து கொலை
அரசியல் பிரமுகர் கழுத்தறுத்து கொலை ()

நெல்லையில் காதல் விவகாரம் காரணமாக அரசியல் பிரமுகர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி: மானூர் அருகே உள்ள பள்ளமடைகிராமத்தைச் சேர்ந்தவர் சீவல்ராஜ் (29). இவர் தமிழர் விடுதலைக் களம் என்ற அமைப்பில் மானூர் பகுதி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார்.

நேற்று முன்தினம் (ஏப். 15) இரவு வழக்கம்போல வீட்டின் மொட்டைமாடிக்கு உறங்க சென்றுள்ளார். இரவு 11 மணியளவில் அவர் அயர்ந்து உறங்கி கொண்டிருந்த போது இரண்டு நபர்கள் மொட்டை மாடிக்கு சென்று அங்கு சீவல்ராஜின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

அவர்கள் தப்பிச் செல்வதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டனர். அப்போது வீட்டில் இருந்தவர்கள் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் சீவல்ராஜ் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மானூர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் சீவல்ராஜ் அதே ஊரில் பாட்டி வீட்டில் தங்கி கல்லூரியில் படிக்கும் பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்தப் பெண்ணும் சிவராஜை காதலித்ததாக கூறப்படுகிறது.
இவர்களின் காதல் பெண்ணின் சகோதரனான அஜித் என்பவருக்கு பிடிக்கவில்லை. அஜித் திருநெல்வேலியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். அவர் தனது தங்கையை கண்டித்துள்ளார். ஆனால் காதலை கைவிட மறுத்ததால் அஜித் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இதனிடையே அரசியல் ரீதியாக சீவல்ராஜ்க்கும் காளிமுத்து என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. ஏற்கனவே சீவல்ராஜ் மீது அஜித் ஆத்திரத்துடன் அலைந்து திரிவதை தெரிந்துகொண்ட காளிமுத்து சீவல்ராஜை கொலை செய்ய திட்டம் தீட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வீட்டின் மொட்டை மாடியில் சீவல்ராஜ் உறங்க சென்றதை அஜித்திற்கு தகவல் கொடுத்ததோடு அவருடன் சென்று கொலை செய்ய காளிமுத்து உதவியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொறியியல் கல்லூரி மாணவர் அஜித் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்த காளிமுத்துவை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த நிலையிலும் சீவல்ராஜின் அரசியல் நடவடிக்கைகள் பிடிக்காமல் தனது தங்கை காதலுக்கு அஜித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரின் காதல் எதிர்ப்பு கடைசியில் கொலையில் முடிந்துள்ளது.

இதையும் படிங்க: போலீசுக்கே கொலை மிரட்டல் விடுத்த குட்கா பாய்ஸ் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.