ETV Bharat / city

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் மூட்டா அமைப்பினர் தொடர் போராட்டம்!

author img

By

Published : Feb 8, 2022, 12:30 PM IST

தூய சவேரியார் கல்லூரியில் மூட்டா அமைப்பினர் தொடர் போராட்டம்
தூய சவேரியார் கல்லூரியில் மூட்டா அமைப்பினர் தொடர் போராட்டம்

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்துப் பேராசிரியர்களுடன் இணைந்து மூட்டா அமைப்பினர் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இரவிலும் தொடர்ந்து நடைபெறும் போராட்டத்தில் 35 பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். பிரச்சினை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

திருநெல்வேலி: தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி நிர்வாகத்தினர், அரசு விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுவதைக் கைவிடக்கோரி இரண்டு ஆண்டுகளாக மூட்டா ஆசிரியர் சங்கம் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்துவருகிறது.

ஆனால், கல்லூரி நிர்வாகத்தினர் தொடர்ந்து பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டுவருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அரசு விதிமுறைகளைப் பின்பற்றி கல்லூரி செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று போராடிய கல்லூரிப் பேராசிரியர்கள் பெஸ்கி ஆன்டனி இராயன், சகாய அந்தோணி சேவியர் இருவரையும் கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

தூய சவேரியார் கல்லூரியில் தொடர் போராட்டம்
தூய சவேரியார் கல்லூரியில் தொடர் போராட்டம்

இரண்டு பேராசிரியர்களின் பணியிடை நீக்கத்தை உடனடியாக ரத்துசெய்யவும், அரசு விதிமுறைகளைப் பின்பற்றி, கல்லூரி முதல்வரை உடனடியாக நியமனம் செய்ய வலியுறுத்தியும், கல்லூரியில் ஒவ்வொரு துறையிலும் பணியில் மூத்த பேராசிரியரை துறைத் தலைவராக நியமிக்கக் கோரியும், அரசு விதிமுறைப்படி இணை முதல்வர் மற்றும் தேர்வாணையரை நியமிக்க வலியுறுத்தியும் நேற்று (பிப்ரவரி 7) காலை முதல் போராட்டம் நடைபெறுகிறது.

இக்கல்லூரியில் பணியாற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் வளாகத்திற்குள் காத்திருப்புப் போராட்டத்தை நிகழ்த்திவருகின்றனர். கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இரவிலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு ஆதரவாக வெளியில் பிற கல்லூரி பேராசிரியர்களும், மூட்டா அமைப்பினரும் ஒன்றிணைந்துள்ளனர். தகவலறிந்து வந்த பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் திருப்பதி தலைமையிலான காவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் நேரத்தில் இவ்வாறு கூட்டம் போட தடை உள்ளதாகக் கூறி உடனடியாகக் கூட்டத்தைக் கலைத்தனர்.

தூய சவேரியார் கல்லூரியில் தொடர் போராட்டம்
தூய சவேரியார் கல்லூரியில் தொடர் போராட்டம்

இருப்பினும் கல்லூரி வளாகத்திற்குள் 35 பேராசிரியர்கள் தொடர் போராட்டத்தை நடத்திவருகின்றனர். போராட்டத்தை முன்னிட்டு கல்லூரி நிர்வாகம் குடிநீர், மின்சார இணைப்பைத் துண்டித்து உள்ளதாகவும் பேராசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

போராட்டத்திற்கு ஆதரவாக இன்று (பிப்ரவரி 8) திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் முன்பு நுழைவுவாயில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மூட்டா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நீட் விலக்கு புதிய மசோதா: இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.