ETV Bharat / city

'சாமானியர்களை அலைக்கழிக்கும் போக்கை அரசு அதிகாரிகள் நிறுத்தி கொள்ளவேண்டும்' - சபாநாயகர் அப்பாவு

author img

By

Published : Apr 17, 2022, 3:27 PM IST

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்ட விவசாயிகளுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சாமானியர்களின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் அலைக்கழிக்காமல் செயல்படுத்த முன்வர வேண்டும் என்றார்.

திருநெல்வேலி: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஓராண்டிற்குள் 1 லட்சம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 8 மாத காலத்தில் ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் நெல்லை மண்டலத்தில் இருக்கும் நெல்லை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் என ஒட்டுமொத்தமாக 5 ஆயிரத்து 349 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்திற்குட்பட்ட நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 423 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், நெல்லை மாவட்டத்தில் மட்டும் 1154 மின் இணைப்புகளும், விருதுநகர் மாவட்டத்தில் 874 மின் இணைப்புகளும், தென்காசி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 769 மின் இணைப்புகளும், குமரி மாவட்டத்தில் 301 மின் இணைப்புகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 757 விவசாய மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாக நெல்லை மண்டல மின் பகிர்மானம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டபேரவைத் தலைவர் பேச்சு

இந்த நிலையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் மூலம் பயனடைந்த விவசாயிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று(ஏப்ரல் 16) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நேரலையில் காண திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

நெல்லை மண்டல மின் பகிர்மான கழகம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், விவசாயிகள், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், நெல்லை மாநகராட்சி மேயர், துணைமேயர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை: இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், '20 ஆண்டுகளுக்கு மேலாக இலவச மின்சாரத்திற்காகக் காத்திருந்தப் பின்பு, இறுதியாக 2013ஆம் ஆண்டு வரை விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் இலவச இணைப்பு வழங்கப்பட்டு விட்டன. விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் விதமாக செயல்படும் தமிழ்நாடு அரசு, 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் போன்ற சிறப்பானத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டுமில்லாமல் விவசாயிகள், சாமானியர்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் செயல்படுத்த முன் வர வேண்டும். அவர்களை அலைக்கழிக்கும் போக்கை நிறுத்தி கொள்ள வேண்டும்' எனப் பேசினார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு விலக்கு மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது - சபாநாயகர் அப்பாவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.