ETV Bharat / city

நகைச்சுவை பதிவுக்குச் சிறையா? 'மாஜிஸ்திரேட்டின் நியாயமான நடவடிக்கை'க்குப் பாராட்டு!

author img

By

Published : Dec 22, 2021, 7:07 AM IST

Case filed in Vadipatti against Facebook user, MHC Judge GR Swaminathan appreciate Vadipatti Magistrate, மதுரை வாடிப்பட்டியில் முகநூல் பதிவருக்கு எதிராக வழக்குப்பதிவு, வாடிப்பட்டி மாஜிஸ்திரேட்டை பாராட்டிய நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்
Case filed in Vadipatti against Facebook user

'துப்பாக்கி பயிற்சிக்காக சிறுமலை பயணம்' என நகைச்சுவையாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டரை காவலில் எடுக்க வாடிப்பட்டி நீதித் துறை நடுவர் மறுப்புத் தெரிவித்ததற்கு, உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

மதுரை: மதிவாணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார். அதில், "நான் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டதாக என் மீது மதுரை வாடிப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், ""மனுதாரர் தனது மகள், மருமகனுடன் கடந்த செப்டம்பர் மாதம் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையைச் சுற்றிப்பார்க்கச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, அதற்கு ‘துப்பாக்கி பயிற்சிக்காக சிறுமலை பயணம்’ என நகைச்சுவையாகத் தலைப்பை எழுதியுள்ளார்.

எதற்கு நீதிமன்ற காவல்?

இதைப் பார்த்த வாடிப்பட்டி காவல் துறையினர், மனுதாரர் நகைச்சுவைக்காகப் பதிவிட்டுள்ளார் என நினைக்காமல், அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கருதி, அவர் மீது கூட்டுச்சதி, குற்றச்செயல்களில் ஈடுபட முயற்சி செய்வது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாஜிஸ்திரேட் 'தி கிரேட்'

அத்தோடு விடாமல், அவரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதற்காக, வாடிப்பட்டி நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தியுள்ளனர். ஆனால், அங்கிருந்த நீதித் துறை நடுவர் அருண், புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு அவரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி உத்தரவிட முடியாது என்று மறுத்துவிட்டார். இவரைப்போல தமிழ்நாட்டில் உள்ள மற்ற நீதித் துறை நடுவர்களும் செயல்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இதுபோன்ற சம்பவங்களில் நீதிமன்ற காவலில் வைக்கும்படி கேட்கவே முடியாது. ஒவ்வொரு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு காவலர்களும், வழக்கறிஞர்களும் முயற்சி செய்வார்கள். ஆனால், கைதானவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடும் நடவடிக்கை சரிதானா என நீதித் துறை நடுவர்கள் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.

எனவே, வாடிப்பட்டி நீதித் துறை நடுவர் அருணின் நியாயமான நடவடிக்கைக்கு நன்றி. இதன்மூலம், சிறையில் அடைக்கப்படுவதிலிருந்து மனுதாரர் தப்பியுள்ளார்.

நகைச்சுவையும் அடிப்படை உரிமைதான்

எனவே மனுதாரரிடமிருந்து காவல் துறையினர் எந்தவொரு ஆயுதத்தையும் கைப்பற்றவில்லை. போதிய ஆதாரங்கள் இன்றி அவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்கிறேன்.

நாம் ஒவ்வொருவரும் நகைச்சுவை உணர்வுடன் இருக்க, பழகிக்கொள்ள வேண்டும். அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகவும் நகைச்சுவை உணர்வை கொண்டுவரும் காலம் நெருங்கிவிட்டது" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'இல்லம் தேடி கல்வி' சீருடையுடன் டாஸ்மாக்கில் மது வாங்கிய நபர் - சர்மிளா சங்கர் குழு நீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.