சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக தயாராகும் மதுரை சிறைக் கைதிகளின் விதைப் பிள்ளையார்...

author img

By

Published : Aug 31, 2022, 11:54 AM IST

Etv Bharat

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக மதுரை மத்திய சிறைக் கைதிகளால் விதைப் பிள்ளையார் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

மதுரை: இந்துக்களின் திருவிழாக்களில் தீபாவளிக்கு அடுத்தபடியாக இந்தியா முழுவதும் பெரு விமர்சையாக கொண்டாடப்படுவது விநாயகர் சதுர்த்தியாகும். இத்திருவிழாவை ஒட்டி விநாயகர் விதவிதமான அவதாரங்களில் காட்சியளிப்பதுதான் விநாயகர் சதுர்த்தியை இன்னும் ஆர்வத்திற்குரியதாக மாற்றியுள்ளது.

பிள்ளையார் வழிபாடு பண்டைக்காலம் தொட்டு இந்திய மண்ணில் வேரூன்றியுள்ளதை பல்வேறு ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. புத்திக்கு அருள் வழங்குகின்ற தெய்வ வழிபாடாகவே பிள்ளையார் இந்துமதத்தில் பார்க்கப்படுகிறார். அதிலும் குறிப்பாக பிள்ளையாரோடு பேரம் பேசி, எனக்கு இன்னதைக் கொடு என்று கேட்டுப் பெருகின்ற உரிமைக் கடவுளாகவே விநாயகர் திகழ்கிறார். 'பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை' என்ற பாடல் இதனைத்தான் உணர்த்துகிறது.

மனித உடல், யானை முகம் என்ற உருவ வேறுபாடே பிள்ளையாரை அனைத்தரப்பினரையும் ரசிக்கச் செய்ய ஏதுவான ஒன்றாக உள்ளது. ஏ.கே.47, வீணை, புத்தகம் என வைத்திருக்கும் பொருட்களே பிள்ளையாரை விதவிதமான அவதார புருஷராகக் காட்டுகிறது.

இவ்விநாயக சதுர்த்தி விழாவின் தொடர்ச்சியாக மதுரை மத்திய சிறையில் கைதிகளால் உருவாக்கப்படும் விதை பிள்ளையார் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். களிமண்ணில் உருவாக்கப்படும் பிள்ளையார் சிலைகள், விநாயகர் சதுர்த்தியன்று வீடுகளில் வைத்து வழிபடப்படுகிறது. பிறகு ஒரு நாள் கழித்து அந்த பிள்ளையார் சிலைகள் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு விடுகிறது.

மதுரை சிறைக் கைதிகளின் விதைப் பிள்ளையார்

இதனைக் கருத்தில் கொண்டு கரைக்கப்படும் பிள்ளையார் மற்றொரு வடிவமெடுப்பதற்கு ஏதுவாக களிமண் கொண்டு பிள்ளையார் சிலை உருவாக்கப்படும்போதே, அச்சிலைகளுக்குள் பல்வேறு மர, செடி, கொடி விதைகளும் சேர்க்கப்படுகின்றன. வழிபட்டவுடன் நீர்நிலைகள் கரைக்கும்போதும், நிலங்களில் புதைக்கப்படும் போதும் அவ்விதைகள் வெளிப்பட்டு, அந்த இடங்களில் விதைகள் பரவி சுற்றுச்சூழலுக்கு வலுசேர்க்கின்றன.

இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் தற்போது விதை பிள்ளையார் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இக்களிமண் பிள்ளையார் சிலையின் உட்புறம் பல்வேறு தாவரங்களின் விதைகளோடு தயாரிக்கப்படுவதால், நீர்நிலைகளில் கரைக்கும்போது, இயல்பாக விதைப் பரவல் நிகழும். அதனைக் கருத்திற் கொண்டும், சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டும் இந்த பிள்ளையார் சிலை தயாரிக்கப்படுகிறது. அரை மற்றும் ஒன்றரை அடி அளவில் இச்சிலைகள் மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறை அங்காடி மூலமாக தற்போது பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா வந்த வரலாறு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.