ETV Bharat / city

'ஆட்டிச குழந்தைகள் அல்ல, அதிசயக் குழந்தைகள்' - முனைவர் ராணி சக்ரவர்த்தி

author img

By

Published : Apr 2, 2022, 6:43 AM IST

Updated : Apr 2, 2022, 8:28 AM IST

autism children  autism aware day  doctor rani Chakravarthy interview about autism children  doctor rani Chakravarthy interview  doctor rani Chakravarthy  ஆட்டிசக் குழந்தைகள்  ஆட்டிசம் விழிப்புணர்வு நாள்  குழந்தைகள் நல வல்லுநர் மருத்துவர் ராணி சக்ரவர்த்தி
மருத்துவர் ராணி சக்ரவர்த்தி

ஆட்டிசக் குழந்தைகள், தனிச் சிறப்பு மிக்க ஆளுமை கொண்டவர்கள். ஆகையால் அவர்களை ஆட்டிச குழந்தை என அழைக்க வேண்டாம் என்கிறார், குழந்தைகள் நல நிபுணரான முனைவர். ராணி சக்ரவர்த்தி.

மதுரை: ஆண்டுதோறும் ஏப்ரல் 2ஆம் நாள் ஆட்டிசம் விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் தற்போது ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படும் வேளையில், இந்தக் குழந்தைகளுக்காக கடந்த 19 ஆண்டுகள் பணியாற்றி வரும் முனைவர். ராணி சக்ரவர்த்தி, ஈடிவி பாரத் ஊடகத்திற்கு நேர்காணல் அளித்தார்.

ஆட்டிசம் மன வளர்ச்சி குறைபாடு அல்ல: அப்போது பேசிய அவர், “ஆட்டிசம் பற்றிய சரியான புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுதான் இந்த நாளின் முக்கிய நோக்கம் என ஐ.நா. அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக உலக நாடுகள் அனைத்தும் இந்நாளை விழிப்புணர்வு நாளாக பயன்படுத்தி வருகின்றன. இந்த நேரத்தில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் குறித்து முழுமையான புரிதலை ஏற்படுத்துவது தேவையாக உள்ளது.

என்னைப் பொறுத்தவரை கடந்த 19 ஆண்டுகளாக இந்தப் பயணத்தில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். ஆட்டிசம் என்பது மன வளர்ச்சிக் குறைபாடு இல்லை. மாற்றுத்திறனாளிகள் குறித்த வகைப்பாட்டில் நமது இந்திய அரசும்கூட தற்போது ஒப்புக்கொண்டு அந்தப்பட்டியலிலிருந்து ஆட்டிசக் குழந்தைகளை நீக்கிவிட்டது. மன வளர்ச்சியோ, மன நலமோ பாதிக்கப்பட்ட குழந்தைகள் இவர்கள் அல்ல. இவர்களோடு பயணித்துப் பார்க்கும்போதுதான் இவர்கள் மிகச் சாதாரணமானவர்கள், அதிசயமானவர்கள், மிக அழகான குழந்தைகள் என்பதை உணர முடியும்.

வேகமாகக் கற்றுக் கொள்வர்: பிற குழந்தைகளைப் போன்றே நடப்பது, ஓடுவது, தவழ்வது அவை அனைத்துமே ஆட்டிசக் குழந்தைகளுக்கு இயல்பாகவே இருக்கும். இவர்களது பேச்சு மற்றும் சமூக நடத்தைகளில் மட்டுமே சில வித்தியாசங்கள் இருக்கும். பெயர் சொல்லி அழைக்கும்போது இவர்கள் திரும்பிப் பார்க்க மாட்டார்கள் என்பது இக்குழந்தைகளுக்கான முதல் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அவர்களின் தேவைகளோடு சொல்லி அழைத்துப் பார்த்தால் கண்டிப்பாகத் திரும்பிப் பார்ப்பார்கள்.

இது அவர்களின் பெற்றோருக்கு தெரியும். கட்டளைகளைப் புரிந்து கொண்டு செயல்படுத்த இயலாதது 2ஆவது அறிகுறி. ஆனால், அதே கட்டளை அவர்களின் தேவையைச் சார்ந்து இருக்குமானால் உடனடியாகப் புரிந்து கொள்கிறார்கள். அதேபோன்று கற்றலில் குறைபாடு என்கிறோம். மாறாக, சாதாரண குழந்தைகள் என்ன கற்றலை மேற்கொள்கிறார்களோ அதே போன்று அவர்களுக்கு விருப்பப்பட்டதை வேகமாகக் கற்றுக் கொள்கிறார்கள். மிகவும் சுத்தமாக இருப்பார்கள் என்பது 4ஆவது அறிகுறி. என்னைப் பொறுத்தவரை இந்தப் பண்பு மிகவும் நல்லதுதான்.

தனி ஆளுமை மிக்கவர்கள்: இந்தக் குழந்தைகளைப் புரிந்து கொள்வதில்தான் இங்கு பிரச்சினை எழுகிறது. ஆட்டிசக் குழந்தைகளை முன் முடிவோடு அணுகுவது மிகத் தவறாகும். இது போன்ற சிறப்புக் குழந்தைகளைக் கையாள சமூகமும், ஆசிரியரும், பெற்றோரும் பழகிக் கொள்ள வேண்டும்.

கையை ஆட்டுகிறார்கள், குதிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை விடுத்து, அதற்கேற்றாற்போல் அக்குழந்தையை பழக்கப்படுத்துங்கள். இவையெல்லாம் அவர்களுக்குள் இருக்கின்ற உச்சபட்ச ஆற்றல். அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்டிசம் என்றோ மதியிரக்கம் என்றோ இந்தக் குழந்தைகளைச் சுட்டுவது என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. இவர்கள் அதிசயக் குழந்தைகள். இவர்களுக்கென்று தனி ஆளுமை இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் ஆட்டிசக் குழந்தைகள் அல்ல... அதிசயக் குழந்தைகள்

என்னுடைய முனைவர் பட்ட ஆய்வு இவர்களைக் பற்றியதுதான். இக்குழந்தைகளை வளர்க்கின்ற விதம் முக்கியத்துவம் வாய்ந்தது. கையாளத் தெரியாமல், ஓர் அறைக்குள் அடைத்து இவர்களது கையில் செல்போனைக் கொடுத்துவிட்டு, தப்பித்துக் கொள்வது தவறான முறையாகும். இதனால், குழந்தைகளுக்கு பல்வேறு நடத்தை சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட காரணமாகிறோம். அதேபோன்று குழந்தைகளுடனான தகவல் தொடர்பு மிக முக்கியம் வாய்ந்தது. இதனை தாய்-தந்தை இருவரும் மிகச் சிறப்பான முறையில் நிகழ்த்த வேண்டும். இதிலுள்ள இடைவெளியும் குழந்தைகளைப் பாதிக்கலாம்.

சின்னச் சின்ன பயிற்சிகள் அவசியம்: தற்போது 40 வயதுக்கு மேற்பட்டோர், குழந்தைப் பருவத்தில் விளையாடிய பம்பரம், நுங்கு வண்டி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை தற்போதைய குழந்தைகள் இழக்கிறார்கள். வீட்டுக்கு வெளியே விளையாடுகின்ற வழக்கமே ஒழிந்து கொண்டிருக்கிறது. இந்த குழந்தைப் பருவ விளையாட்டுகளை ஏன் முக்கிய கருத்தமைவாக ஆட்டிசக் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்கக்கூடாது என்ற கேள்வியின் அடிப்படையில் இதற்காகவே நான் பாட முறைகளைத் தயாரித்துள்ளேன்.

எங்களைப் போன்ற தனிப்பயிற்சி மையங்களில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வருகின்ற பெற்றோர்கள், இதேபோன்ற பயிற்சிகளை தங்களது வீடுகளிலும் தொடர்வதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. பெற்றோர் தாங்கள் செய்கின்ற வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டும். மேலும் தங்களுடைய குழந்தைகளின் 'பாஸிட்டிவ்' பக்கங்களை மட்டுமே பெற்றோர்கள் கவனித்து, அதற்கேற்றாற் போன்று அவர்களை தயார்ப்படுத்த முன் வர வேண்டும். அக்குழந்தைகளுக்குள் இருக்கின்ற குறைகளை நிவர்த்தி செய்வதற்கான செயல்களை முன்னெடுக்க வேண்டும். அவர்களது வீடே ஒரு பயிற்சிகளமாக மாறினால்தான் மிகவும் நல்லது.

பயிற்சி மையங்கள் மட்டுமே தீர்வாகாது: எனது அனுபவத்தில் பெற்றோர்களின் முதிர்ச்சியான அணுகுமுறை காரணமாக இதுபோன்ற குழந்தைகள் வளர்ந்து தற்போது மிக சாதாரண வாழ்க்கை முறைக்கு திரும்பி, பெரிய பொறுப்புகளிலும்கூட அமர்ந்திருக்கிறார்கள். இதற்கு பெற்றோர்களின் அர்ப்பணிப்பும், நேர்மறையான எண்ணமுமே காரணமாக அமையும். ஆனால், ஆட்டிசக் குழந்தைகள் குறித்த பொது வெளி வணிக நோக்கில் இயங்குகிறது என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் குழந்தை, உங்களுக்குக் கிடைத்த வைரம் என்பதைப் புரிந்து கொள்ளாமல், அவர்களுக்கான நலன்களை பெற்றோர்களாகிய நீங்கள் முன்னெடுக்க முடியாது. இந்தக் குழந்தைகளுக்காக உள்ள பயிற்சி மையங்களையோ, தெரபிஸ்ட்களையோ பெற்றோர் முழுமையாக நம்பக்கூடாது. அவர்களுடைய உதவியைப் பெற்றுக் கொள்ளலாமே ஒழிய, அவர்கள்தான் அனைத்திற்கும் தீர்வு என நம்புவது தவறு. எதற்காக இதைச் சொல்கிறேனென்றால், தற்போது இந்தக் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஆட்டிசத்திற்கான அறிகுறிகளோடு நிறைய குழந்தைகள் இங்கே வருகிறார்கள். ஆகையால், பெற்றோர்கள் வளர்ப்பு முறையில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும்” என்கிறார். குழந்தைகள் வளர்ப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டிய தருணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, இதுபோன்ற சிறப்புக் குழந்தைகளின் மீதான கவனமும் அதிகரிக்க வேண்டும்.

உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி போதுமான புள்ளி விபரங்கள் இல்லாத நிலையில், ஆட்டிசக் குழந்தைகளை ஆளுமை மிக்க குழந்தைகளாக மாற்றுவது சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் காரை இன்றளவும் பராமரித்து வரும் அதிமுக நிர்வாகி!

Last Updated :Apr 2, 2022, 8:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.