ETV Bharat / city

'விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் கான்கிரீட் தளம் அமைக்கப்படும்' - அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

author img

By

Published : Apr 22, 2022, 8:56 PM IST

அமைச்சர் சு.முத்துசாமி
அமைச்சர் சு.முத்துசாமி

சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் கசிவு நீர் பாசனப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அப்பகுதியில் விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் கான்கிரீட் தளம் அமைக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து செயல்படுத்தப்படும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அவ்வப்போது, கீழ்பவானி வாய்க்காலில் சில இடங்களில் உடைப்பு ஏற்படுவதாலும், கடைமடைக்கு தண்ணீர் சென்று சேராததாலும் அவற்றை சரிசெய்ய கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு: கான்கிரீட் தளம் அமைப்பதனால், வாய்க்காலில் இருந்து கசிவு நீர் வெளியேறாமல் தடுக்கப்பட்டு கசிவு நீர் பாசனப் பகுதியில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் நிலம் தரிசாக மாறும் அபாயம் உள்ளதாக பல்வேறு விவசாய சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, இன்று (ஏப்.22) பவானிசாகர் அணை அருகே உள்ள தொப்பம்பாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளிடம் கான்கிரீட் தளம் அமைப்பதில் உள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி

விவசாயத்திற்கு பாதிப்பின்றி செயல்படுத்தப்படும்: இதைத் தொடர்ந்து, அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கீழ்பவானி வாய்க்காலில் கசிவு நீர்ப்பாசன பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்காத வகையிலும், கடைமடைப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் சென்று சேரும் வகையிலும் கான்கிரீட் தளம் அமைக்கப்படும். வாய்க்காலின் தரைப்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்காமல் வாய்க்கால் கரை உடைப்பு ஏற்படும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் மட்டுமே கரையோரத்தில் மட்டும் கான்கிரீட் தளம் அமைக்கப்படும்' எனத் தெரிவித்தார். மேலும், எந்த ஒரு விவசாய நிலமும் பாதிக்காமல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என விவசாயிகளுக்கு உறுதியளித்தார்.

இதையும் படிங்க: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.