ETV Bharat / city

காவல்துறையால் தேடப்படும் நபர்கள் பலர் பாஜகவில் உள்ளனர் - இ.கம்யூ.கட்சி மாநில செயலாளர் முத்தரசன்

author img

By

Published : Jan 9, 2022, 6:33 AM IST

CPI State Secretary Mutharasan press meet
CPI State Secretary Mutharasan press meet

காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பலர் பாஜகவில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக கட்டுமான பணியை பார்வையிட்ட அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று(ஜன.8) செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த செம்டம்பர் மாதம் நீட் நுழைவுத்தேர்வு தொடர்பாக மசோதா ஒன்று ஏக மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அது நான்கு மாதங்களை கடந்த நிலையில், தற்போது வரை பரிசீலனையில் உள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்து இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. இதுவரை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு முறை ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் தீர்வு காணப்படவில்லை.

இ.கம்யூ.கட்சி மாநில செயலாளர் முத்தரசன்

தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ஒன்றிய அரசு

நாடாளுமன்ற உறுப்பினர்கள், டி.ஆர்.பாலு தலைமையில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவரை சந்திக்க முயன்று முடியவில்லை. அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை புறக்கணிக்கவில்லை, ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே புறக்கணித்ததாக தெரிகிறது. இந்தச் செயலை உள்துறை அமைச்சர் செய்துள்ளது கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கவும், குறிப்பாக தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையில் விவசாயம், கால்நடைகள், குடிசை வீடுகள், தொகுப்பு வீடுகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒன்றிய அரசு நிவாரண நிதியாக வழங்கவில்லை

ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய், இடுபொருள்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் என்பது ஏற்கனவே அறிவித்த நிவாரணம் தான். இது போதுமான நிவாரணம் இல்லை என்பதால் நிவாரண தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். கடும் மழை, வெள்ள பாதிப்பு குறித்து மாநில அரசு, ஒன்றிய அரசிடம் பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என பலமுறை கடிதம் எழுதியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் வலியுறுத்தியும் இதுவரை ஒன்றிய அரசு ஒரு ரூபாயை கூட நிவாரண நிதியாக வழங்கவில்லை.

மாநிலத்திற்கு மாநிலம் தனது அணுகுமுறையை ஒன்றிய அரசு மாற்றிக்கொள்கிறது. தமிழ்நாடு அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு முழமையாக உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மட்டும் அடைக்கலம் கொடுத்தால் மட்டும் பரவாயில்லை. தமிழ்நாடு காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பலர் பாஜகவில் உறுப்பினராக மட்டும் இல்லை, பல்வேறு பொறுப்புகளிலும் உள்ளனர்.

வன்முறையை தூண்டுகிறது பாஜக

ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் மட்டும் இல்லை, காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களையும் கட்சியில் சேர்த்து பொறுப்புகளை வழங்கி வன்முறையை தூண்டுகிறது பாஜக. அதுமட்டுமில்லாமல் சாதிகலவரம், மத கலவரத்தை தூண்டி, மக்களிடையே மோதலை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் குறுகிய எண்ணம் கொண்டுள்ளது.

காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் அக்கட்சியில் ஏற்கெனவே இணைந்து விட்டனர். அரியலூர் மாவட்டத்தில் பாஜக ஊழியர் கூட்டத்தில் கலந்து கொள்ள காரில் வந்த கும்பலை பிடித்து விசாரணை செய்த போது, அவர்களது காரில் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு, அவர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் புதிதாக 280 பேருக்கு கரோனா உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.