ETV Bharat / city

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி விடுவிப்பு

author img

By

Published : Feb 19, 2022, 8:08 AM IST

sp velumani recent news
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி

கோயம்புத்தூரில் திமுகவினரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்பட ஒன்பது சட்டப்பேரவை உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், ஆறு மணிநேரத்திற்கு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுகவினரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோயம்புத்தூர் மாவட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று (பிப். 18) மதியம் கைது செய்யப்பட்டு காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்பட ஒன்பது சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆறு மணி நேரத்திற்கு பின்பு விடுவிக்கப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேட்டி

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி வேலுமணி, "நகர்ப்புற தேர்தலை நேர்மையான முறையில் தேர்தல் நடத்திட வேண்டும் என ஜனநாயக முறையில் போராடினோம். அதற்கு காவல் துறை எங்களை கைது செய்தது.

தேர்தல் விதிக்கு எதிராக கோயம்புத்தூரில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் திமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக காவல் துறை உள்ளது. தேர்தல் அமைதியான முறையில் நடத்திட வேண்டும் என அதிமுகவினர் நினைக்கிறோம்.

வெளியூரிலிருந்து இறக்கப்பட்ட திமுகவினர் இன்னும் வெளியேற்றப்படவில்லை. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களில் வன்முறை நடைபெற்று வருகிறது.

தேர்தலை நேர்மையான முறையில் சந்தித்தால் வெற்றி பெற முடியாது என்பதால் குண்டர்களை வைத்து ஜனநாயக படுகொலை செய்து திமுகவினர் தேர்தலை சந்திக்கின்றனர். நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் முடிவுகளை தாமதப்படுத்தாமல் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை அறிவிக்க வேண்டும்.

இங்கு வெற்றியை மாற்றி அறிவிக்கக் கூடாது. கூடுதலாக தேர்தல் அலுவலர் நாகராஜன் ஐஏஎஸ் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கூட, அவருடைய செயல்பாடு பின்னர் தெரியும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'திமுக கோவை கோட்டையை முற்றிலுமாக கைப்பற்றிவிட்டது!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.