ETV Bharat / city

பெண்களுக்கெதிரான குற்றங்கள் பற்றி மத்திய அமைச்சர்கள் அதிர்ச்சி பதில் - சு. வெங்கடேசன்

author img

By

Published : Feb 9, 2022, 4:55 PM IST

சு.வெங்கடேசன் எம்பி
சு.வெங்கடேசன் எம்பி

சு. வெங்கடேசன் எம்பியின் கேள்வி ஒன்றுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இரானி, கம்பெனிகள் விவகார இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் ஆகியோர் பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க ஏற்பாடில்லை, பரிசீலிக்க வழியில்லை என்ற பதில்கள் அதிர்ச்சியைத் தருகின்றன.

மதுரை: அண்மைக் காலங்களாக நாடெங்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. குறிப்பாக, பேரிடர் காலங்களில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் எந்தளவிற்கு நிகழ்ந்துள்ளன என்பது குறித்து சு. வெங்கடேசன் எம்பி கேள்விகள் எழுப்பியிருந்தார்.

அதற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த விளக்கம் குறித்து, சு. வெங்கடேசன் எம்பி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர்களிடம் கேள்வி

அந்தச் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "நடந்துகொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நாட்டின் இரண்டு முக்கியமான பிரச்சினைகள் குறித்த கேள்விகளை மத்திய அமைச்சர்கள் இருவரிடம் கேட்டிருந்தேன்.

ஒருவர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இரானி, மற்றொருவர் நிறுவனங்கள் விவகார இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங். கேள்விகளின் மையப்பொருள், 'இந்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பையும், அதற்காக அரசு செயல்படுத்துவதாகக் கூறும் செயல்களையும் பற்றியது. ஆகும்.

அதனடிப்படையில், அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் பிப்ரவரி 4 அன்று 'பேரிடர் காலத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்திருப்பதாக வரும் செய்திகளை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதா? அக்காலத்தில் மட்டும் எவ்வளவு குற்றங்கள் நிகழ்ந்துள்ளன? பாதிக்கப்பட்டோருக்கான நிர்பயா நிதி எவ்வளவு ஒதுக்கப்பட்டது? சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு எவ்வளவு வழங்கப்பட்டது? எவ்வளவு பயன்படுத்தப்பட்டது?' ஆகிய கேள்விகளை எழுப்பியிருந்தேன்.

பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரிப்பு

அந்தக் கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில் அச்சம்கொள்ள வைத்துள்ளது. தேசிய குற்ற ஆணைய பதிவேட்டின் அடிப்படையில் பெண்களுக்கு எதிராக 2019ஆம் ஆண்டு கிட்டத்தட்ட நான்கு லட்சத்து ஐந்தாயிரத்து 326 குற்றங்களும், 2020ஆம் ஆண்டு கிட்டத்தட்ட மூன்று லட்சத்து 71 ஆயிரத்து 503 குற்றங்களும் என கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் ஏழு லட்சத்து 76 ஆயிரத்து 829 குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு எதிராக 2019ஆம் ஆண்டு கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 90 குற்றங்களும், 2020ஆம் ஆண்டு கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 531 குற்றங்களும் என கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 621 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும், 2021ஆம் ஆண்டிற்கான விவரங்கள் இன்னும் தொகுக்கப்படவில்லை எனவும் கூறுகிறார்கள்.

பாலியல் வன்முறைகள்

அரசு கூறும் விதியின்படி, 25 கோடிக்கு மேல் மூலதனம் கொண்ட நிறுவனங்களில் பாலியல் வன்முறை தடுப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும். அதன்படி நிறுவனங்கள் விவகார இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித்திடம் பணியிடங்களில் பெண்களுக்கு நிகழும் பாலியல் வன்முறைகளைத் தடுத்திட இந்தியாவில் மொத்தம் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் எவ்வளவு?

அவற்றில் எத்தனை நிறுவனங்கள் பாலியல் வன்முறை தடுப்புக் குழுக்களை உருவாக்கவில்லை? மீறல்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஆகிய கேள்விகளை எழுப்பியிருந்தேன்.

அதற்கு அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் அளித்துள்ள பதில் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கின்றன. நாட்டில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் 21 லட்சத்து 51 ஆயிரத்து 349. அதில் 13 லட்சத்து 44 ஆயிரத்து 857 நிறுவனங்கள் தொடர்ச்சியான செயல்பாட்டில் இருக்கின்றன என்கிறார்.

பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குவதா?

இது குறித்து அரசு அளித்துள்ள விளக்கத்தில், பாலியல் வன்முறை தடுப்புக் குழு உருவாக்கப்படவில்லை என்று அரசின் கவனத்திற்கு வந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 3 குழுக்கள், 2020ஆம் ஆண்டு 1 குழு, 2021ஆம் ஆண்டு 0 (நடப்பாண்டில்) என்றும் கூறியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமே நான்கு நிறுவனங்கள்தாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட இரண்டு அமைச்சர்களும் நான் கேட்ட கேள்விகளுக்கு அளித்துள்ள பதில்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினையே கேள்விக்கு உள்ளாக்குபவையாக இருக்கின்றன. மேற்கண்ட இரண்டு கேள்விகளுக்கும் இருக்கிற தொடர்பு, அமைச்சர்களின் பதிலில் உருத்தெரியாமல் விலகி நிற்கிறது" என்று சு. வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

2ஆண்டுகளில் 10.5 லட்சம் குற்றங்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக் குற்றங்கள் மட்டும் சுமார் 10.5 லட்சம். ஆனால் பாலியல் வன்முறை தடுப்புக் குழுக்கள் உருவாக்கப்படாமல் அரசின் கவனத்திற்கு வந்து நடவடிக்கை எடுக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளையும் சேர்த்து வெறும் 4 என்றால், எது உண்மை ?

பதிவு செய்யப்பட்ட 13 லட்சம் நிறுவனங்களிலும் பாலியல் வன்முறை தடுப்புக்குழு இருக்கிறதா ? முறைப்படுத்தப்பட்டுள்ளதா ? அதன் செயலாற்றுதல் என்ன ? என்பதை ஒரு பொறுப்பான அரசு ஆய்வு செய்ய வேண்டாமா?

2 ஆண்டுகளில் 7.5 லட்சம் பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் நிகழ்ந்துள்ள ஒரு நாட்டில், 13 லட்சம் நிறுவனங்களில் நான்கில் தான் பாலியல் வன்முறை தடுப்புக்குழுக்கள் அமைக்கப்படாததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவை என்பதை எந்தக் கோணத்திலிருந்து பார்த்து நம்புவது என்று கூறியுள்ளார்.

நிர்பயா நிதி பயன்பாடு என்னவாயிற்று?

அதையும் தாண்டிய பெரும் கொடுமை வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அதன் பிறகான அடிப்படை வாழ்க்கை நிர்மாணங்களுக்குத் தரப்படுகின்ற 'நிர்பயா நிதி'யின் பயன்பாடு ஆகும்.

2015ஆம் ஆண்டு இந்த திட்டம் துவங்கப்பட்ட காலத்திலிருந்து அரசு பெண்களுக்கு அடிப்படை வாழ்க்கை நிர்மாணங்களுக்காகத் தரப்படுவதற்கு இதுவரை "பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை ரூ.6612 கோடி. அதில், துறைவாரியாகப் பகிர்ந்தளிக்கப்பட்ட தொகை ரூ.4241 கோடி ஆகும். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தரப்பட்டிருப்பதோ ரூ.2989 கோடி" ஆகும்.

கடந்த இரண்டாண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பெண்கள் & குழந்தைகள் மீதான வன்முறைக் குற்றங்கள் மட்டும் சுமார் 10.5 லட்சம்
கடந்த இரண்டாண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பெண்கள் & குழந்தைகள் மீதான வன்முறைக் குற்றங்கள் மட்டும் சுமார் 10.5 லட்சம்

தேசம் அடைய வேண்டிய சமுதாய மேம்பாட்டின் படி இந்தத் தகவல்கள் மிகவும் மோசமானவை. கவலை கொள்ளச் செய்பவை. தொடர்ந்து 8 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டதில் 3ல் 2 மடங்கு தொகை தான் துறைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அவற்றில், பாதித் தொகை தான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனில், இது எந்த வகையில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்வையும், நம்பிக்கையையும் அரசு காக்கும்' என அந்த அறிக்கையில் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: சர்வதேச அளவில் ஹிஜாப்...! - அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா அதிர்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.