ETV Bharat / city

ஜவ்வாதுமலை கோர விபத்து -  உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை நேரில் வழங்கிய அமைச்சர்!

author img

By

Published : Apr 4, 2022, 9:26 PM IST

நிவாரண நிதி
நிவாரண நிதி

ஜவ்வாது மலைப்பகுதியில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 11 குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் ரூபாயும் படுகாயம் அடைந்த 27 நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் காசோலையாக வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை புதூர் நாடு அடுத்த சேம்பரைப் பகுதியில் புலியூரில் இருந்து (ஏப்.2) பிக்கப் வேன் மூலம் பயணம் செய்த 38 பேர் விபத்துக்குள்ளாகினர். அந்தக் கோர விபத்தில், 11 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்து திருப்பத்தூர், தர்மபுரி, அடுக்கம்பாறை உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், விபத்து நடந்த ஓரிரு மணி நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்து குறித்து ஆழ்ந்த அனுதாபங்களை அறிவித்ததுடன் விபத்தில் பலியானவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2,00,000 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

தவிர்க்கப்பட வேண்டிய விபத்து: இதனைத்தொடர்ந்து, இன்று (ஏப்.4) புலியூர் கிராமத்திற்கு சென்றிருந்த அமைச்சர் எ.வ.வேலு உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் உத்தரவுப்படி, வழங்கப்பட்ட நிவாரண நிதிக்கான காசோலைகளை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா தலைமையில் வழங்கினார்.

அப்போது, அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடத்தில் கூறுகையில், 'பிறப்பும் இறப்பும் இயற்கையானது என்றாலும், இந்த விபத்து மூலமாக அமைந்த உயிர் இழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். கடந்த 2ஆம் தேதி டெல்லியில் இருந்த முதலமைச்சர் தொலைக்காட்சிகளில் விபத்து குறித்த செய்தியைப் பார்த்ததும் சுமார் ஒரு மணிநேரம் யாரிடமும் பேசவில்லை.

முதலமைச்சர் நிவாரண நிதி: பின்பு, நேற்றைய தினம் என்னிடம் தொடர்பு கொண்டு, என் சார்பாக விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபத்தை நீங்கள் நேரில் சென்று தெரிவியுங்கள் என்று கூறினார். அதுமட்டுமின்றி உயிரிழப்பு ஏற்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சமும்; படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களுக்கு மருத்துவ செலவிற்காக ரூ.50,000-மும் அரசின் சார்பாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்’ என்றார்.

பின்னர், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு நிமிடம் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொண்டு அஞ்சலி செலுத்தினார். அப்போது திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திருப்பத்தூர் மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், சார் ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: ஜவ்வாதுமலையில் கோர விபத்து - 11 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.