ETV Bharat / city

'போர்க்கால அடிப்படையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்' - ஸ்டாலின் அறிக்கை

author img

By

Published : Oct 18, 2020, 12:18 PM IST

MK stalin
MK stalin

சென்னை : வேலை இழந்து, விரக்தியின் விளிம்பில் நிற்கும் இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகாமல், ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்புத் திட்டங்களை, தேவையான அளவுக்கு, கிராமங்களிலும், நகரங்களிலும் ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளைப் போர்க் கால அடிப்படையில் முதலமைச்சர் பழனிசாமி எடுத்திட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் உள்ள இளைஞர்களும் ஏழை எளிய நடுத்தர மக்களும், வேலை இழப்பு, வருமான இழப்பு என்ற இரட்டிப்புக் கொடுமைகளில் சிக்கி தினமும் திணறிக் கொண்டிருப்பதை முதலமைச்சர் பழனிசாமி இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது பெரிய தவறு.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு விதத்தில் வேலை இழப்பு நேர்ந்து, குடும்ப வருமானத்தை இழந்து விட்டு, கரோனா நோய்த் தொற்றின் அச்சத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைச் சமாளிக்கவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 5000 ரொக்கமாகக் கொடுத்து உதவிட வேண்டும் என்று பலமுறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தியுள்ளோம். அதை எடப்பாடி அதிமுக அரசு ஏற்க மறுத்து, வழக்கமாக “கமிஷன்” அடிக்க உதவும் டெண்டர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை, குறிப்பாக கரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்க பரிந்துரைகளை அளிக்குமாறு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு குழுவினை அதிமுக அரசு அமைத்தது. அந்தக்குழு, 250 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதலமைச்சரிடம் அளித்து ஒரு மாதத்தை நெருங்கி விட்டது. அறிக்கையை மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக வெளியிடவும் இல்லை; பரிந்துரைகள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முதலமைச்சரிடம் அறிக்கையை அளித்த போது, “கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போல், நகர்ப்புறங்களில் ஒரு வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்கிட வேண்டும்” என்று அந்தக் குழு பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அப்படி எந்த ஒரு திட்டத்தையும் நகர்ப்புறத்திற்காக அதிமுக அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

முதலமைச்சரிடம் அறிக்கையை அளித்து விட்டு, பத்திரிகையாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன், விரைவில் தமிழ்நாடு ஊரடங்கிலிருந்து வெளிவருவது தான் தமிழ்நாடு பொருளாதாரத்திற்கு நல்லது என்றும்; தமிழ்நாடு பொருளாதாரம் இரண்டு மாதங்களில் மீளும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

அவர் அப்படி கூறி ஒரு மாதத்தைக் கடக்கப் போகும் இந்த நேரத்திலும், கரோானா ஊரடங்கிலிருந்து முற்றிலும் தமிழ்நாடு வெளியே வருவதற்கான சூழல்களை அதிமுக அரசு உருவாக்கவில்லை. அதற்குப் பதிலாக தினமும் கரோனா நோய்த் தொற்றுத் தொடருகிறது. பொருளாதாரத் தேக்க நிலைமையும், வருமானம் இழப்பு, வேலை இழப்பு ஆகிய துன்பங்கள் தொடருகிறது.

அரசின் இந்த தோல்விகளைத் திசை திருப்ப, உண்மையான முதலீடுகள் எவ்வளவு வந்தது என்பது குறித்து எதையும் சொல்லாமல், புரிந்துணர்வு ஒப்பந்த விளம்பரங்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன. இதோ முதலீடு வருகிறது. இதோ தொழில்கள் தொடங்கப் போகிறது. இதோ வேலைவாய்ப்பு வரப் போகிறது என்று கடந்த பத்து ஆண்டுகளாக சொன்ன ‘அம்புலி மாமா’ கதையையே திரும்பத் திரும்ப அதிமுக அரசு கூறி ஏமாற்றி வருகிறது.

குறிப்பாக, இந்த நான்கு ஆண்டுகளாக முதலமைச்சர் பழனிசாமி தமிழ்நாட்டு மக்களிடம் “புரிந்துணர்வு ஒப்பந்தம்” என்று மட்டும் கூறியே காலத்தைக் கடத்தி வருகிறார். மந்திரத்தால் மாங்காய் விழுந்துவிடாது என்பதை உணர வேண்டும். இனியும் இதுபோன்ற திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு, வேலை வாய்ப்பை இழந்து நிற்கும் தமிழக இளைஞர்களை ஏமாற்றாமல், கிராமப் புறத்தில் உள்ள வேலை வாய்ப்புகளைப் பெருக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

அதேபோல் நகர்ப்புறத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கிட, பிரத்யேகமாக ஒரு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை அறிவிக்குமாறு முதலமைச்சர் பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன். வேலை இழந்து, விரக்தியின் விளிம்பில் நிற்கும் இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகாமல், ஆக்கபூர்வமான வேலை வாய்ப்புத் திட்டங்களை, தேவையான அளவுக்கு, கிராமங்களிலும், நகரங்களிலும் ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 'எடப்பாடியா? ஸ்டாலினா? என்றால் மக்களின் தேர்வு முதலமைச்சர் பழனிசாமி' - அமைச்சர் பாண்டியராஜன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.