ETV Bharat / city

10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் என்னென்ன? முழு விவரம்

author img

By

Published : Feb 12, 2020, 12:49 PM IST

10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் என்னென்ன? முழு விவரம் 10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு பொதுத்தேர்வு ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் என்னென்ன? முழு விவரம் தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஆசிரியர்களுக்கு வழிகாட்டல், பறக்கும் படை, பணி விதிமுறை, முதன்மை மாவட்ட கல்வி அலுவலர்கள், தேர்வு அலுவலர், கட்டாய பணிவிடுப்பு, வழித்தடங்கள், தேர்வு வினாத்தாள் காப்பு அறை TN State Board 10, 11,12th Exam: What is the guidance for teachers? Full details TN State Board 10, 11,12th Exam, Comman Exam, TN Education News' Tamil Nadu Education Department, SSLC General Elections, 10th Class General Elections, Guidance for Teachers, Flying Squard, Regulation of Primary Education, Principal District Education Officers, Selection Officer, 10, 11, 12th General Election Guidances, TN Teachers
TN State Board 10, 11,12th Exam: What is the guidance for teachers? Full details

சென்னை: 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வில் முக்கியப் பணிகளில் தனியார் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களை நியமிக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கான வழிகாட்டல் என்னென்ன என்பது குறித்தும் கூறியுள்ளது. அதன் முழு விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த பொதுத்தேர்வினை நடத்தும் முழு பொறுப்பும் மாவட்டக் கல்வி அலுவலர்களைச் சேரும்.

தேர்வுப் பணிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்யும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தேர்வு பணி நியமனம் விதிமுறைக்கு புறம்பாக இருக்கிறா? என்று கண்காணிக்க வேண்டும். இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள நடைமுறை வழிகாட்டலில் கூறப்பட்டுள்ளதாவது:-

பணி விதிமுறை

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது மாவட்டத்தில் எந்தவொரு தேர்வுப் பணி நியமனமும் விதிமுறைகளுக்குப் புறம்பாக இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். எழுத்துப்பூர்வமான ஆணைகள் வழியாக மட்டுமே நியமனங்கள் செய்யப்பட வேண்டும்.

கண்டிப்பாக வாய்மொழி ஆணைகள் வழங்கக் கூடாது. மேலும் மாற்று ஆணை வழங்கும்போது சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்னதாக தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துத் தேர்வு மையங்களையும் பார்வையிட வேண்டும்.

முதன்மை கண்காணிப்பாளர் நியமனம்

அனைத்து முன்னேற்பாடுகளும் முடிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேர்வர்கள், தேர்வுப் பணியாளர்களது உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய அமைப்புகள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களை முதன்மைக்கண்காணிப்பாளராக நியமனம் செய்தல் கூடாது. எட்டு கிலோ மீட்டர் தூரம் மிகாமல் உள்ள பிற அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களை, அரசுப் பள்ளிகளின் மூத்த ஆசிரியர்களை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்ய வேண்டும்.

தேர்வு அலுவலர் நியமனம்

எந்தக் காரணம் கொண்டும் தனியார் பள்ளிகளின் முதல்வர்களையோ, துணை முதல்வர்களையோ, ஆசிரியர்களையோ எந்த தேர்வுமையத்திற்கும் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்தல் கூடாது. தனியார் பள்ளி தேர்வு மையங்களுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களையோ அல்லது அரசுப் பள்ளிகளின் மூத்த ஆசிரியர்களையோ தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்து கொள்ள வேண்டும்.

அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களை துறை அலுவலராக நியமனம் செய்யப்படவேண்டும். தேவைப்படும் இடங்களில் மட்டும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களைத்துறை அலுவலராக நியமனம் செய்து கொள்ளலாம். ஒரு தேர்வு மையத்திற்கு நியமிக்கப்படும் முதன்மைக் கண்காணிப்பாளரும், துறை அலுவலர்களும் வெவ்வேறுபள்ளிகளைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்களாக இருத்தல் கூடாது.

கூடுதல் தேர்வர்கள் பயன்பாடு

கடந்தாண்டு தேர்வுப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டவருக்கு இந்தாண்டும் அதே பணியை ஒதுக்கீடு செய்யப்படக் கூடாது. ஒரு தேர்வு மையத்தில் தேர்வர்களின் எண்ணிக்கை 400க்கு மேல் இருந்தால், ஒவ்வொரு 400 தேர்வர்களுக்கும் ஒரு கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் ஒருகூடுதல் துறை அலுவலர் நியமனம் செய்யப்பட வேண்டும்.

தேர்வுமையத்தில் 400 தேர்வர்களுக்கும் குறைவான எண்ணிக்கையில் தேர்வர்கள் தேர்வெழுதும் நாள்களில் தேர்வுமையத்தில் கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் துறைஅலுவலரை பயன்படுத்தக் கூடாது.

கட்டாய பணி விடுப்பு

அறைக்கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் அன்றைய பாடத்தினை நடத்தும் ஆசிரியர்களாக இல்லாததை உறுதிசெய்து கொள்ள வேண்டும். நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, ஆய்வு அலுவலரால் குறிப்பிடப்படும் தினத்தில், தலைமையாசிரியர்கள் கட்டாயம் பணிவிடுவிப்பு செய்யவேண்டும்.

ஆய்வு அலுவலரின் அனுமதியின்றி மாற்றமோ, பணிக்கு வராமல் இருப்பதோ கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. வாய்மொழி ஆணைகள் கண்டிப்பாக கூடாது. தேர்வு நாட்களில் தேர்வுக்கு முன் சரியான நேரத்தில் வினாத்தாள்களை தேர்வுமையங்களில் சென்று ஒப்படைக்கும் வகையில் வழித்தடங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.

வழித்தடங்கள் ஒப்புதல்

வடிவமைக்கப்பட்ட அந்த வழித்தடங்களுக்கு கண்காணிப்பு அலுவலரின் ஒப்புதல் இருக்க வேண்டும். வழித்தட அலுவலர்களுக்கான வாகன வசதி முதன்மைக் கல்வி அலுவலர்களாலேயே ஏற்பாடு செய்யப்பட வேண்டும். வாகன வசதியை வழித்தட அலுவலர்களே ஏற்பாடு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கக் கூடாது.

வழித்தட அலுவலர்கள் எழுத்துப்பூர்வமான ஆணைகள் மூலமாகவே நியமனம் செய்யப்பட வேண்டும். நியமன ஆணையில் வழித்தடம்பற்றி குறிப்பிட வேண்டும். வழித்தட அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வழித்தடத்தை தவிர்த்து வேறு வழித்தடத்தில் பயணிக்கக் கூடாது.

பறக்கும்படை விதிமுறைகள்

வழித்தட அலுவலர்கள் செல்லும் வாகனத்தின் பின்பகுதியில் வினாத்தாள் கட்டுக்களையோ, விடைத்தாள் கட்டுக்களையோ ஏற்றிச் செல்லுதல் கூடாது. அவ்வாகனத்தில் எளிதாக தீப்பற்றக்கூடிய பொருள்கள் (பெட்ரோல்,டீசல்) மற்றும் பிறபொருள்கள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பறக்கும் படை உறுப்பினர்களை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டத்திற்கான பறக்கும்படை உறுப்பினர் நியமனத்தின் போது, பறக்கும்படை உறுப்பினர்கள், தேர்வு நடைபெறும் அன்றைய பாடத்தினை நடத்தும் ஆசிரியர்களாக இல்லாதவாறு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கட்டாயம்

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் தேர்வுக்குழுவின் கூட்டத்தினை நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் அனைத்து ஆய்வு அலுவலர்கள், மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் மற்றும் காவல் துறை உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொள்வதினை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள நடைமுறை வழிகாட்டலில் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.