ETV Bharat / city

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை அனுமதித்தால் மோதல்கள் ஏற்படலாம் - உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் மறுஆய்வு மனு

author img

By

Published : Sep 29, 2022, 5:15 PM IST

Updated : Sep 29, 2022, 5:34 PM IST

Etv Bharat
Etv Bharat

பி.எப்.ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்த அனுமதி வழங்கினால் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை: நாடெங்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணிக்கு அனுமதி வழங்கினால் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப்.29) மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 50-க்கும் மேலான இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து கடந்த 22ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அணி வகுப்புக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதாக கூறி, ஆர்எஸ்எஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நீதிபதி இளந்திரையன் முன் ஆஜரான ஆர்எஸ்எஸ் தரப்பு வழக்கறிஞர்கள், கடந்த 22 ஆம் தேதி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மற்ற கட்சியினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளிக்கும் நிலையில், தங்கள் அணிவகுப்பு அனுமதி மறுக்கப்படுவதாகவும், அதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

சட்டம் ஒழுங்கு முக்கியம்: மேலும், அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி காவல்துறை மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும், இதுவரை அதுபோல எந்த மனுவும் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவில், தற்போதைய சட்டம் ஒழுங்கு சூழலில் ஒன்றிய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன.

அசாம்பாவிதங்களை தவிர்ப்பது அவசியம்: மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள அன்று சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகள் ஊர்வலம், மனித சங்கிலி போன்றவற்றை நடத்த அனுமதி கோரியுள்ளது.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கண்காணிக்க காவல்துறையினர் முழு வீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது. அவ்வாறு அளித்தால், அது மதக்கலவரத்தில் முடியும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன், விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்பின் ஊர்வலம் பேரணிக்கு அனுமதி கிடையாது - தமிழ்நாடு அரசு

Last Updated :Sep 29, 2022, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.