ETV Bharat / city

அரசுப் பணியாளர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊக்கத் தொகை - தமிழ்நாடு அரசு

author img

By

Published : Nov 2, 2021, 6:54 PM IST

அரசுப் பணியாளர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு

அரசுப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அதில், 'தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவை விதிகளில், விதி 110இன் கீழ் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு முறைகளின் அடிப்படையில் இம்மாநில அரசுப் பணியாளர்களுக்கு கூடுதல் கல்வித்தகுதிக்கான ஊக்கத் தொகை அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அதன்படி, மாநில அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகை (Lumpsum) வழங்கலாம் என அரசு முடிவெடுத்து ஆணையிடுகிறது. கூடுதல் கல்வித் தகுதி தேர்ச்சி முனைவர் (Ph.D) படிப்பிற்கு 25ஆயிரம் ரூபாயும், பட்ட மேற்படிப்பு (PG) அல்லது அதற்கு சமமான படிப்பிற்கு 20ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பிற்கு 10ஆயிரம் ரூபாய் எனவும் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படும்.

குறிப்பிடப்பட்டுள்ள ஊக்கத் தொகையை வழங்குவதற்கு பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவுள்ளன; அவையாவன:

  • ஒரு பதவியின் பணிநியமன விதிகளின்படி, அப்பதவியில் கட்டாய பணியமர்த்தலுக்கு விருப்பத்தகுதியாக (essential or desirable qualification) நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிகளுக்கு இவ்வூக்கத் தொகை வழங்கப்படமாட்டாது.
  • கல்வி சார் அல்லது இலக்கியம் சார்ந்த பாடப்பிரிவுகளில் (Academic or Literary subjects ) பெறப்படும் உயர் கல்வித் தகுதிக்கு இவ்வூக்கத் தொகை அனுமதிக்கப்பட மாட்டாது.
  • அரசுப் பணியாளர் ஒருவர் கூடுதல் கல்வித்தகுதி பெறுவதற்கு அரசால் அல்லது கல்வி விடுப்பைப் பயன்படுத்தி கூடுதல் அடைந்திருந்தாலோ இவ்வூக்கத் தொகை அனுப்பப்பட்டிருந்தாலோ கல்வித் தகுதி அனுமதிக்கப்படமாட்டாது.
  • ஒரு பதவிக்கு பணியமர்த்தப்படுவதற்குத் தேவையான கல்வித் தகுதியினை தளர்த்தி பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு இவ்வூக்கத் தொகை அனுமதிக்கப்படமாட்டாது. மேலும், தேவையான அக்கல்வித் தகுதியைப் பின்னாளில் பெற்றிருந்தாலும் இவ்வூக்கத் தொகை அனுமதிக்கப்படமாட்டாது.
  • அரசுப் பணியாளர் ஒருவர், அரசுப் பணியில் சேர்ந்த பிறகு கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருந்தால் மட்டுமே இவ்வூக்கத் தொகை வழங்கப்பட வேண்டும்.
  • இவ்வூக்கத் தொகை பெறுவதற்கான கல்வி, பல்கலைக் கழக மானியக் குழுவாலோ, ஒன்றிய அல்லது மாநில அரசால் அமைக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளான அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (AICTE ), அகில இந்திய மருத்துவக் குழு [ Medical Council of India ] போன்றவற்றாலோ அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • இவ்வூக்கத் தொகையானது குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் இடைவெளியில், அரசுப் பணியாளரின் பணிக்காலத்தில் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
  • ஓர் அரசுப் பணியாளர் கூடுதல் கல்வித் தகுதி பெற்ற ஆறு மாத காலத்திற்குள் இவ்வூக்கத் தொகை பெற உரிமை கோர வேண்டும்.
  • 10.03.2020 அன்று அல்லது அதற்குப்பிறகு கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு இவ்வூக்கத் தொகையானது அனுமதிக்கப்பட வேண்டும்.
  • 10.03.2020அன்றிலிருந்து இவ்வாணை வெளியிடப்படும் நாளது வரை கூடுதல் கல்வித் தகுதி பெற்ற அரசுப் பணியாளர்கள் இவ்வூக்கத் தொகை பெற, இவ்வாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் உரிமை கோர வேண்டும்.
  • பதவிகளுக்கு மேலும், இவ்வூக்கத் தொகை வழங்கும்பொருட்டு , தொடர்புடைய / உரிய தலைமைச் செயலகத் துறைகள் , தத்தமது துறையின்கீழ் செயல்படும் துறைத் தலைமையகங்கள், ஏனைய சார்நிலை அலுவலகங்களில் உள்ள எந்தெந்த கூடுதல் கல்வித் தகுதி இன்றியமையாதது என்பதை இனங்கண்டு நிபந்தனைகளைப் பின்பற்றி , மனித வள மேலாண்மைத் துறை, நிதித் துறையுடன் கலந்தாலோசித்து, உரிய துறைகள் தனித்தனியாக ஆணைகள் வெளியிட வேண்டும்.
  • அவ்வாறு வெளியிடப்படும் ஆணைகளின் அடிப்படையிலேயே அத்துறையின்கீழ் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்கு மேற்குறிப்பிட்ட ஊக்கத் தொகை வழங்கப்பட வேண்டும் எனவும் அரசு ஆணையிடுகிறது.
  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையை பொறுத்தவரையில், மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் வெளியிடப்பட்ட ஆணைகளையே தொடரலாம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பள்ளி வருகை பதிவேட்டில் சாதி? - சென்னை மாநகராட்சி விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.