ETV Bharat / city

மெல்ல மெல்ல மீளும் திரையரங்குகள்!

author img

By

Published : Mar 17, 2022, 8:55 PM IST

Updated : Mar 17, 2022, 10:40 PM IST

திருப்பூர் சுப்பிரமணியம்
திருப்பூர் சுப்பிரமணியம்

கரோனா தொற்றுகளின் தாக்கத்தினால் தமிழ்நாட்டில் திரையரங்குகளும் அதன் உரிமையாளர்களும் மேற்கொண்ட சவால்கள் மற்றும் அவர்கள் கடந்து வந்த பாதைகளை இந்த சிறப்புத் தொகுப்பில் காணலாம்.

தமிழ் சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே திரைப்படத் துறையில் தனி ராஜாவாக வலம் வந்துகொண்டு இருக்கிறது. அந்த ராஜாவையே ஆட்டிப்பார்த்தது கரோனா. 2019ஆம் ஆண்டு உலகையே அச்சுறுத்திய இக்கொடிய வைரஸ் தொற்றுப் பாதிப்புகளின் தாக்கம், தமிழ் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை. ஊரடங்கு, படப்பிடிப்பு நிறுத்தம், திரையரங்குகள் மூடல் எனச் சுழற்றி அடித்தது. இதனை எல்லாம் நினைத்துக்கூட பார்க்காத திரையுலக தினக்கூலித் தொழிலாளர்களும் வீடுகளிலேயே முடங்கினர்.

பார்வையாளர்களற்ற திரையரங்குகள்

அப்பாடா.. விடுமுறை என்றிருந்த பணம் படைத்த திரைப்பிரபலங்களோ, தங்கள் வாயிற்படி தாண்ட வழியில்லை. ஆரம்பத்தில் ஜாலியாக கடந்தவர்கள்... காலம் செல்ல செல்ல அதன் தீவிரத்தை உணர்ந்தனர். சிலர் உஷாராகினர். சிலர் உறைந்து போயினர். ஆனால், திரையரங்குகள் நிலை முற்றிலும் மாறியது. தனி திரையரங்குகள் குடோன்களாக மாறின... காலம் காலமாக அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் போக்கிடம் தெரியாமல் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். ஆயிரத்தைத் தாண்டிய திரையரங்குகளின் எண்ணிக்கை கடந்த மூன்றாண்டுகளில் 900ஆகக் குறைந்தது.

மூன்று ஆண்டுகளாக வெளியிடமுடியாமல் இருந்த படங்கள் குப்பையாகக் குவிந்தன. முதல் ஊரடங்குத் தளர்வு, இரண்டாவது ஊரடங்குத் தளர்வு, மூன்றாவது ஊரடங்குத் தளர்வு என அரசு அறிவிக்கும் போதெல்லாம் திரையரங்குகளுக்கு விடிவு வராதா என்று பார்த்த திரையரங்க உரிமையாளர்கள் ஏராளம். காரணம்.. சிற்றூர்களில் திரையரங்குகள் பிழைப்புக்கு வைத்ததல்ல.. பெருமைக்கு வைத்தது. அதனால் தான், அவர்களால் அதன் நஷ்டத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் திரையரங்குகளை குடோன்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாற்றிக்கொண்டனர்.

தளர்வுகள் வரும்போதெல்லாம் மடைதிறந்த வெள்ளம்போல, வந்துகொட்டிய படங்களால் யாருக்கும் பயனின்றி போனது. கைகளுக்குள் வந்துவிட்ட சினிமாவைக் கண்டு ரசிக்கப் பழகிக்கொண்டான், ரசிகன். அவர்களை மீண்டும் இழுத்துவரும் சக்தி அப்போதைய திரைப்படங்களுக்கு இல்லை. வாரம் பத்து படங்கள் வெளியானாலும்... லாபம் இல்லாமல் அடுத்த காட்சியே தயாரிப்பாளர் கைகளுக்கு வந்தது.

தியேட்டரில் குவிந்த படங்கள்

தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத நிகழ்வு 2022, இந்த ஆண்டு பொங்கலுக்கு நடந்தது. கரோனா ஊரடங்கு மற்றும் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டால் பெரிய படங்கள் தங்களது வெளியீட்டைத் தள்ளிவைத்தன. இதன் காரணமாக, முதல் முறையாகப் பொங்கலுக்கு சிறிய படங்கள் வெளியாகின. ஆனால், வெளியான அனைத்தும் மக்களால் புறக்கணிக்கப்பட்டன. திரையரங்குகளில் கூட்டம் இல்லை.

இதனையடுத்து கடந்த மாதம் அஜித்தின் 'வலிமை' திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு திரையரங்குகளின் வாசலைத் திறந்துவிட்டது. மீண்டும் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் பொதுமக்கள் திரையரங்குகளை நோக்கிப் படையெடுத்தனர்.

இதனால், மீண்டும் பழைய நிலைக்கு திரையரங்குகள் திரும்பின. அதனைத்தொடர்ந்து வந்த சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படமும் குடும்பங்களை வரவழைத்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக மூச்சுத்திணறிக் கிடந்த திரையரங்குகள் இன்று ஹவுஸ் புல் போடப்பட்டிருந்தாலும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டன. திரையரங்குகள் எல்லாம் திருவிழா கூட்டமானது.

மீண்டும் சகஜ நிலை

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்குகள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறும்போது, 'மக்கள் திரையரங்குகளை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். பழைய நிலை திரும்பியுள்ளது. பெருநகரங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் அனைவரும் தங்களது சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளனர். இப்போது சூர்யா படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

அடுத்து 'ஆர்ஆர்ஆர்' படம் வருகிறது. அதனைத்தொடர்ந்து 'பீஸ்ட்', 'கேஜிஎப் 2' போன்ற படங்கள் வெளியாக உள்ளன. மக்களிடம் கரோனா பயம் ஏதும் இல்லை. கடந்த காலங்களைப் போல், எந்தவித பயமும் இன்றி மகிழ்ச்சியாக திரையரங்குகளுக்கு வருகின்றனர். இப்போதுதான் சகஜ நிலை திரும்பியுள்ளது. இன்னும் சில காலம் கழித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களது கோரிக்கைகள் குறித்து பேச உள்ளோம்.

எத்தனை வசதிகள் வந்தாலும் மக்களுக்கு பொழுதுபோக்கு என்றால், அது திரையரங்குகள்தான். சாதி, மத பேதம் கடந்து சமத்துவம் பேசுவதும் திரையரங்குகள்தான். வெண்திரையில் தான் வேற்றுமை ஒழியும் என்பதில் ஐயமில்லை' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வீடியோ: பெரம்பலூர் மருதையான் கோயில் குடமுழுக்கு விழா

Last Updated :Mar 17, 2022, 10:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.