ETV Bharat / city

வெள்ளிக்கிழமை முதல் கோயில்கள் திறப்பு - தமிழில் அர்ச்சனை

author img

By

Published : Aug 4, 2021, 5:28 PM IST

வெள்ளிக்கிழமை முதல் கோயில்கள் திறப்பு
வெள்ளிக்கிழமை முதல் கோயில்கள் திறப்பு

தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை முதல் கோயில்கள் திறக்கப்பட்டு தமிழில் அர்ச்சனை நடைபெறுகிறது.

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. இருப்பினும், கரோனா தொற்றை முழுவதும் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு கோயில்களில் பக்தர்கள் கூடுவதை தடுக்க தரிசனம் ரத்து என அரசு அறிவித்திருந்தது.

தற்போது ஆடி மாதம் என்பதால் அம்மன் கோயில் மற்றும் முருகன் கோயில் தவிர்த்து மற்ற கோவில்களை வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் திறக்க இந்து அறநிலையத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் அர்ச்சனை

மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் தமிழில் அர்ச்சனை தொடங்குகிறது. மேலும் 47 கோயில்களுக்கு தமிழில் அர்ச்சனை விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சனை குறித்த பதாகை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்யவிருக்கும் விவரம் குறித்த பதாகையினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, ஆணையர் ஜெ. குமரகுருபரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 47 திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு அர்ச்சகர்களின் பெயர், தொலைபேசி எண் ஆகியவை பக்தர்களுக்கு தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருக்கோயில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சங்கர் எனும் பக்தர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை வரவேற்கத்தக்கதுதான். ஆனால் கோயில்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதிகளை கட்டாயம் அமைத்திட வேண்டும். திருக்கோயில்களில் கட்டண தரிசனம் இருக்கக்கூடாது. வயது முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரிசனம் செய்ய சிறப்பு வழி வகை செய்ய வேண்டும். இந்து அறநிலையத் துறையில் பணிபுரியும் அலுவலர்கள், தமிழில் கையெழுத்திட வேண்டும். டெண்டர் குறித்த விளம்பரங்கள் தமிழில் இருக்க வேண்டும்" என்றார்.

வெள்ளிக்கிழமை முதல் கோயில்கள் திறப்பு

தமிழ் ஆர்வலர் ராமசாமி கூறியதாவது, "தமிழ்நாட்டில் தமிழ் அர்ச்சனை வரவேற்கத்தக்கது. இதனால் சாதாரண மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் படியாக இருக்கும். தமிழ்நாட்டில் நடைபெறும் சடங்குகள் அனைத்தும் தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும். இதுவரை தமிழில் அர்ச்சனை இல்லாத நிலையில், தற்போது தமிழில் அர்ச்சனை செய்வது நல்லது" என்றார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் பாஜக: குழுவை அறிவித்தார் அண்ணாமலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.